வசனம் மட்டும் பேசும் தி.மு.க., : அன்புமணி கொதிப்பு
"தருமபுரி தொகுதியில் 2014 முதல் 2019 வரை நான் எம்.பி.,யாக இருந்தபோது பல திட்டங்களை கொண்டு வந்தேன். சிட்டிங் எம்.பி., செந்தில் குமாரை தேர்வு செய்து பெரிய தவறை செய்துவிட்டீர்கள்" என, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பா.ம.க., தருமபுரி வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து அன்புமணி பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு முழு காரணம் பா.ம.க., மட்டும் தான். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பலமுறை கொண்டு வந்தோம்.
இதுவரையில் ஜாதி,மதம், இனம், சின்னம் ஆகியவற்றைப் பார்த்து வாக்களித்தீர்கள். இந்தமுறை வேட்பாளரை பார்த்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் நேரத்திற்கு மட்டும் உதயநிதி வருவார். வந்தாலும் ராமதாசை பற்றிப் பேச வேண்டும்.
கடந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் தருமபுரி மாவட்டத்துக்கு 44 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில், ஒன்றைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. ஆனால், வசனம் மட்டும் பேசுகிறார்கள்.
தருமபுரிக்கு வந்தால் சமூகநீதி பற்றிப் பேசுவார்கள். அரசு ஊழியர்கள் தருமபுரியில் அதிகமாக இருக்கின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றினார்களா?
2014 முதல் 2019 வரை நான் எம்.பி.,யாக இருந்தபோது இந்த மாவட்டத்துக்கு பல திட்டங்களை செய்துள்ளேன். சிட்டிங் எம்.பி., செந்தில் குமாரை தேர்வு செய்து பெரிய தவறை செய்துவிட்டீர்கள்.
அவர் கடந்த 5 ஆண்டுகாலத்தில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. நான் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டினார். பா.ஜ., அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கெல்லாம் தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து