இலவசம் வளர்ச்சி அல்ல வீழ்ச்சி: சீமான்
“இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல; வீழ்ச்சி திட்டம்,” என, துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
துாத்துக்குடி லோக்சபா தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேனை ஆதரித்து, துாத்துக்குடி திரேஸ்புரம் மற்றும் விளாத்திகுளத்தில் நேற்று சீமான் பேசியதாவது:
நல்லாட்சி என்பது சொல்லாட்சியில் மட்டும் தான் உள்ளது. ஜனநாயகம், ஏழ்மை மற்றும் வறுமை ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம், தீண்டாமை ஆகியவை வெற்று வார்த்தைகளாகவே உள்ளன. சகித்துக் கொள்ள முடியாத ஊழல், லஞ்சம், மீள முடியாத ஏழ்மை, வறுமை, ஒழிக்க முடியாத தீண்டாமை கொடுமைகள். இவையெல்லாம் மக்களுக்கும், மண்ணுக்கும் பிரச்னை தான். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி யாரும் பேசுவது இல்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியோருக்கு தி.மு.க., அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது. வேதாந்தா குழுமத்திடம் இருந்து தேர்தல் பத்திரம் வாயிலாக தி.மு.க., பணம் வாங்கி உள்ளது. ஒரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்போர் தான், அந்த ஆலையிடமே பணம் வாங்கி உள்ளனர். அப்படியென்றால், மக்களுக்கான இவர்கள் கரிசனம் நாடகம் தானே. இதைத்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பணமில்லா பரிவர்த்தனையை வளர்ச்சி என கூறுகின்றனர். அதை வளர்ச்சி என கட்டமைக்கிறது மத்திய அரசு. பிச்சைக்காரன் இயந்திரம் வைத்து பிச்சை எடுப்பது இல்லை வளர்ச்சி. பிச்சைக்காரர்களே இல்லாத நாட்டை உருவாக்குவது தான் வளர்ச்சி.
இந்த தேர்தலில் நமக்கு அநீதி இழைத்தோருக்கு நல்ல பாடம் புகட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. நம் வீட்டு தாய், சகோதரிக்கு 1,000 ரூபாய் கொடுக்க சொன்னது யார்? ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல், என் தாயை நிறுத்தியது யார் என்று யாரும் கேட்கவில்லை.
ஆட்சியாளர்களே, 1,000 ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். குடிக்க சுத்தமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக கொடுங்கள். இலவசம் என்பது வளர்ச்சி திட்டமல்ல. வீழ்ச்சி திட்டம்.
அவர்கள் காட்டும் வளர்ச்சி என்பது வெற்று வார்த்தை. இலவசம் பெற வேண்டிய ஏழ்மை, வறுமை இல்லாத அளவில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்களின் கனவு. அந்த கனவை நிறைவேற்றும் ஆற்றல் உங்களிடம் தான் உள்ளது.இவ்வாறு சீமான் பேசினார்.
வாசகர் கருத்து