மாநில உரிமைகளை மீட்காத என்.ஆர்.காங்கிரஸ்: பழனிசாமி விமர்சனம்
"மத்தியில் பா.ஜ., காங்கிரஸ் என யார் ஆட்சிக்கு வந்தாலும் தேவையான நிதியை வழங்குவது இல்லை. நாங்கள் வந்தால் புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவோம்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
புதுச்சேரி அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, கைகட்டி வேடிக்கை பார்ககும் அவலநிலையில் புதுச்சேரி உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுக் கொடுக்கக் கூடிய அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே இருக்கிறது.
மாநிலத்தின் உரிமைகளை ஆளும் அரசால் மீட்க முடியவில்லை. புதுச்சேரிக்கான பல திட்டங்களை துணைநிலை கவர்னர் செயல்படுத்தாமல் இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகாலமாக இங்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், எந்த வளர்ச்சியும் இருக்காது.
மத்தியில் பா.ஜ., காங்கிரஸ் என யார் ஆட்சிக்கு வந்தாலும் தேவையான நிதியை வழங்குவது இல்லை. நாங்கள் வந்தால் புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவோம்.
பல ஆண்டுகாலமாக தி.மு.க., காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் என யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களைக் கண்டு கொள்வதில்லை. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திவிட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இவர்கள் குறைப்பதில்லை.
போதைப் பொருள்கள் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்தது. இங்கும் அதேபோன்ற வளர்ச்சி வேண்டும் என்றால், புதுச்சேரியில் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்.
சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவமே, புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இதற்குக் காரணம், போதைப் பொருள் தான்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்கு சிட்டிங் எம்.பி., எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் அனைத்தும் இடங்களிலும் ரேஷன் கடைகளைத் திறந்தோம். புதுச்சேரியில் ரேஷன் விநியோகம் முடக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து