Advertisement

பா.ஜ.,வுடன் பா.ம.க., அமைத்திருப்பது கொள்கை கூட்டணி அல்ல : ராமதாஸ் சிறப்பு பேட்டி

அரசியலில் அடிக்கடி மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தாலும், எடுத்த நிலைப்பாட்டுக்கு உழைப்பவர் டாக்டர் ராமதாஸ். இந்த தேர்தலில் கூட, அ.தி.மு.க.,வா; பா.ஜ.,வா என அலைபாய்ந்த பா.ம.க., கடைசியில் பா.ஜ., பக்கம் வந்து நின்றது, அரசியல் வட்டாரத்தையே சற்று அதிர வைத்தது. அதுபோன்ற அதிரடிகளுக்கு சொந்தக்காரரான பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி:

பிப்ரவரி 1ம் தேதி நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், உங்களிடம் வழங்கப்பட்டது. ஆனால், மார்ச் 19 அதிகாலையில் தான் பா.ஜ.,வுடன் கூட்டணி என்பதை அறிவித்தீர்கள். ஏன் இவ்வளவு தாமதம்?

பா.ம.க., பொதுக்குழு அதிகாரம் அளித்தாலும், கூட்டணி குறித்து நான் தன்னிச்சையாக முடிவெடுத்துவிட முடியாது. தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினேன். நிறைவாக மாநில நிர்வாக குழு, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்தோம். அதன்பின்னரே, பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது தீர்மானிக்கப்பட்டது. ஜனநாயக முறைப்படி முடிவெடுக்கும்போது காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி அ.தி.மு.க., ஆனால், தனித்து களம் கண்டு, 4 சதவீத ஓட்டு வங்கியை கூட நிரூபிக்காத பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இந்த கூட்டணி, பா.ம.க.,வுக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும்?

தமிழகத்தில் அ.தி.மு.க., - தி,மு,க., ஆகிய கட்சிகள் இல்லாத அணியை கட்டமைக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.,வின் நோக்கம். இரு கட்சிகளும் தமிழகத்தை 57 ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டன. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அதன் துவக்கமாக தான் இக்கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இது எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை, தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

இரவு முழுக்க அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தி விட்டு, அதிகாலையில் அண்ணாமலையை அழைத்து கூட்டணி வைத்து விட்டதாக, அ.தி.மு.க.,வின் சி.வி.சண்முகம் உங்களை காட்டமாக விமர்சித்துள்ளார். அவர்களை நம்ப வைத்து மோசம் செய்ததாக, அ.தி.மு.க.,வினர் சொல்கின்றனரே?

இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து, எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. இதை அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியே கூறியுள்ளார். சி.வி.சண்முகமே சில வாரங்களுக்கு முன் கூட, பா.ம.க.,வுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தவில்லை என்று தான் கூறினார். பா.ம.க.,வுடன் கூட்டணி சேர, அ.தி.மு.க., முயன்றிருக்கலாம். பா.ம.க.,வுக்கு அத்தகைய சிந்தனை இல்லை.

பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவா? அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என முடிவெடுத்தது ஏன்?

பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.,வின் கூட்டணி முடிவு. அதனால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை.

கடந்த 2011 வரை பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் போட்டி போட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லையே... தமிழக அரசியலில் பா.ம.க.,வின் முக்கியத்துவம் குறைந்து விட்டதா?

அப்படி யார் சொன்னது? பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் துடித்துக் கொண்டு தான் உள்ளன. பா.ம.க., தான் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தி. பா.ம.க.,வை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் அரசியல் இல்லை என்பது தான் உண்மை.

பா.ஜ., உங்களுக்கு ஏதாவது வாக்குறுதி அளித்துள்ளதா? தேர்தலுக்கு பின், மத்திய அமைச்சரவையில் பா.ம.க., இடம்பெற வாய்ப்புள்ளதா?

பா.ஜ.,விடம் இருந்து எந்த வாக்குறுதியையும் நான் பெறவில்லை. தேர்தலுக்குப் பின், மத்திய அமைச்சரவையில் இடம் தேவையில்லை என்றும் நாங்கள் கூறி விட்டோம்.

தர்மபுரியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை ஒரே நாளில் மாற்றிவிட்டு, சவுமியா அன்புமணியை அறிவித்துள்ளீர்கள் ஏன்?

தர்மபுரி தொகுதியில் மாவட்ட செயலர் அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்தோம். அதன்பின், அன்று மாலை தைலாபுரம் தோட்டத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியாவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் விருப்பப்படியே வேட்பாளர் மாற்றப்பட்டார்.

ஏ.கே.மூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் போட்டியிடவில்லை. அவர்கள் விரும்பவில்லையா அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டதா?

பா.ம.க., 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் யாரை நிறுத்தினால் சரியாக இருக்கும் என்பது குறித்து, மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தினோம். அதனடிப்படையில் தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிதம்பரம் தொகுதி, பா.ம.க.,வுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த தொகுதிகளில் ஒன்று. ஆனால், இரண்டாவது முறையாக, பா.ம.க., அங்கு போட்டியிடவில்லை. திருமாவளவனுடன் நேரடி மோதல் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டீர்களா?

அப்படியெல்லாம் இல்லை. சிதம்பரத்தில் பா.ம.க.,வும், வி.சி.,யும் நேருக்கு நேர் மோதும்போது பதற்றம் அதிகரிப்பதாக, அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. அங்கு நடக்கும் சிறிய அளவிலான மோதல் கூட, தமிழகம் முழுதும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். இவற்றை கருத்தில் கொண்டு தான் சிதம்பரத்தில் பா.ம.க., நேரடியாக களமிறங்கவில்லை. அதேநேரத்தில், அங்கு பா.ஜ., வெற்றிக்காக கடுமையாக உழைப்போம்.

முன்பெல்லாம் உங்களது அறிக்கையில் ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களில் அனல் தெறிக்கும். ஆனால், 2021 சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., அரசை எதிர்ப்பதில் மென்மையான அணுகுமுறை ஏன்?

இது தவறான எண்ணம். இப்போதும் தி.மு.க., அரசின் தவறுகளை ஆதாரங்களுடனும், புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்துவதில், பா.ம.க., தான் முன்னிலையில் உள்ளது. பா.ம.க., சுட்டிக்காட்டிய பல பிரச்னைகளை அரசு தீர்த்திருக்கிறது.

பா.ம.க.,வால் விமர்சிக்கப்பட்ட பல முடிவுகளை, தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அதே நேரத்தில் விமர்சனங்கள் நளினமாகவும், நாகரிகமாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள, சமீபத்தில் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இப்படி செய்வது சரியா?

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுப்பதற்கான சட்டத்தின்படி, யார் மீதும், எப்போதும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருப்பதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு முன், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதே. நீதிமன்றங்களே ஒரு நடவடிக்கையை சரி என்று கூறும்போது, அவற்றை நாம் மட்டும் எதிர்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, என்.எல்.சி., சுரங்க விரிவாக்கம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என, பல்வேறு முக்கியப் பிரச்னைகளில் பா.ஜ.,வுடன் முரண்படுகிறீர்கள். இந்த கோரிக்கைகளை எல்லாம் பா.ஜ.,விடம் வலியுறுத்துவீர்களா?

அதில் என்ன சந்தேகம். கண்டிப்பாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவோம். இது தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை, நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். சமூக நீதியும் தமிழக நலனும் தான் எங்களின் அடிப்படை கொள்கை. எங்களின் கொள்கைகளிலும், தத்துவங்களிலும் இம்மியளவும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இது உறுதி. தேர்தலில் வெற்றியை அடிப்படையாக கொண்டே கூட்டணிகள் உருவாகின்றன. கூட்டணியில் இடம்பெறும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும்.

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் ஒரே கொள்கை கிடையாது. ஆம் ஆத்மியும், காங்கிரசும் மாறுபட்ட கொள்கைகளை கொண்டவை. சிவசேனாவுக்கும், காங்கிரசுக்கும் அடிப்படை கொள்கையே முரணானவை. ஆனாலும் இவை அனைத்தும் கூட்டணி அமைத்துள்ளன.

பா.ஜ.,வுடன் பா.ம.க., அமைத்திருப்பது கொள்கை கூட்டணி அல்ல. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்பதற்காகவே, தமிழக நலன் சார்ந்த விவகாரங்களில் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசக் கூடியவர் நீங்கள். ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருப்பதால், சிறுபான்மையினர் பா.ம.க.,வை ஆதரிப்பரா?

நிச்சயமாக ஆதரிப்பர். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், எங்களின் கொள்கை நிலைப்பாட்டை சிறுபான்மையினர் நன்கறிவர். 1998 கோவை குண்டு வெடிப்புக்குப் பின் சோதனை என்ற பெயரில் முஸ்லிம்கள், குறிப்பாக பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்போது பா.ஜ., கூட்டணியில் இருந்த நாங்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தோம். இதையெல்லாம் அவர்கள் நன்கறிவர். முஸ்லிம்களுக்கு உள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது பா.ம.க., தான். அதனால் சிறுபான்மையினர் கண்டிப்பாக பா.ம.க.,வுக்கு ஓட்டளிப்பர்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்குப் பின், பா.ம.க., சார்பில் மாநாடுகள், பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை. நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்த, இவை அவசியமில்லையா?

மாநாடுகள் நடத்த பா.ம.க., சார்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் அவை சாத்தியமாகவில்லை. தேர்தல் முடிவடைந்த பின்னர் வெற்றி விழா மாநாடு நடத்துவோம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்