பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது: உதயநிதி கேள்வி
"மத்திய அரசிடம் நான் கேள்வி கேட்டால், பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது. பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்துக்குள் நீட் தேர்வு வந்தது" என, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரத்தில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உதயநிதி பேசியதாவது:
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தி.மு.க., அரசு செயல்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றனர். கடந்த 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தேர்தல் முடிந்து 4 மாதங்களில் விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் வந்து சேரும். காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மோடி, தேர்தலுக்காக இப்போது நாடகம் ஆடுகிறார். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாயை உயர்த்திவிடுவார்.
2019 ல் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வரப் போகிறோம் எனக் கூறிவிட்டு, மோடியும் பழனிசாமியும் ஒரே செங்கல்லை மட்டும் வைத்தனர். இப்போது, 'கல்லைக் காணோம்... உதயநிதி திருடிவிட்டார்' என பா.ஜ., நிர்வாகி ஒருவர் புகார் செய்துள்ளார்.
தமிழகத்துக்குப் பிறகு பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுவிட்டது. 'உதயநிதிக்கு வேறு வேலை இல்லை. எப்போதும் கல்லை காட்டுகிறார்' என பழனிசாமி பேசுகிறார். மக்கள் பார்க்க ஆசைப்பட்டதால் தான் காட்டுகிறேன்
ஸ்கிரிப்ட்டை மாற்றிப் பேசுமாறு பழனிசாமி கூறுகிறார். பழனிசாமியை போல என்னால் மாற்றிப் பேச முடியாது. சசிகலா காலில் விழுந்துவிட்டு, அவர் காலை வாரிவிட்டவர் தான், பழனிசாமி.
மத்திய அரசிடம் நான் கேள்வி கேட்டால், பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது. பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்துக்குள் நீட் தேர்வு வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்,
வாசகர் கருத்து