பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டதால் கோபம் :அண்ணாமலை மீது 'முன்னாள்'கள் பாய்ச்சல்
தி.மு.க.,வை மட்டும் விமர்சித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தற்போது பா.ஜ.,வையும் விமர்சிக்கத் துவங்கி உள்ளார். இரு தினங்களுக்கு முன், பொள்ளாச்சி கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, அவர் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், 'பா.ஜ.,வுக்கு புதிதாக வந்த தலைவர், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு பேட்டி கொடுப்பார்; இறங்கும்போது ஒரு பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பதுதான் அவர் வேலை. அவ்வப்போது பேட்டி கொடுத்து, மக்களை நம்ப வைத்து ஓட்டுகளை பெற முயற்சிக்கிறார்' என்றார்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, 'நரி திராட்சை பழத்தை எடுக்க முயற்சிக்கும். பழம் கிடைக்காதபோது, இந்த பழம் புளிக்கும் என்குமாம். அதுபோல் பழனிசாமி அந்த பழம் புளிக்கிறது என்கிறார்' என்றார்.
பழனிசாமியை நரி என, அண்ணாமலை கூறியது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை வெளிக்காட்டவும் துவங்கி விட்டனர்.
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: அண்ணாமலை அரைவேக்காடு. அவர் அ.தி.மு.க., அழிந்து போகும் என்கிறார். அண்ணாமலைக்கு என்ன தெரியும்? தென் மாவட்டத்தில் கோலோச்சிய அழகிரி, இப்படித்தான் உளறிக் கொண்டிருந்தார். இன்று அவர் அரசியலிலேயே இல்லை. அண்ணாமலை உண்மையில் படித்து 'பாஸ்' செய்தாரா, 'பிட்' அடித்து பாஸ் செய்தாரா எனத் தெரியவில்லை. தேர்தலுக்குப் பின், அண்ணாமலை என்பவர் இருந்தார் என்ற நிலையே இல்லாமல் போய்விடும்.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: அண்ணாமலை விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். வால் அறுந்த நரி போல் செயல்படுகிறார். அவர் அரசியல் கத்துக்குட்டி. நானும் களத்தில் இருக்கிறேன். என்னை சண்டைக்கு கூப்பிடுங்கள் என அண்ணாமலை கெஞ்ச வேண்டாம்.
பிரதமர் பங்கேற்ற 'ரோடு ஷோ' பெயிலியர் என்கின்றனர். கூட்டமே இல்லையாம். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாதா? கள நிலவரம் தெரிந்து, அவர் பேச வேண்டும். ஒன்றும் இல்லாத பா.ஜ., களத்தில் என்றைக்கும் எடுபடாது. இதை எங்கு வந்து சொல்லவும் தயாராகஇருக்கிறேன்.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., இல்லாமல் போய் விடும் என்கிறார். அ.தி.மு.க.,வை காணாமல் போக வைக்கும் அவரிடம் என்ன மந்திரம் உள்ளது? அவர் என்ன அவ்வளவு பெரிய மந்திரவாதியா?
இவ்வாறு பலரும் அண்ணாமலையை விமர்சித்து பேசி வருகின்றனர்.
வாசகர் கருத்து