டிரைலரே கர்ண கொடூரம்... படம் ஓடுமா: ஸ்டாலின் கேள்வி

"ஊழல்வாதிகளுக்கு கியாரண்டி கொடுக்கும் ஆட்சியாக பா.ஜ., அரசு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயலில் பா.ஜ., ஈடுபடுகிறது" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நடந்த பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் மட்டுமல்ல, வடஇந்தியாவிலும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கும் எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் மதவாத பேச்சு போன்றவை தான்.

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தார். டில்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் சிறையில் அடைத்தார். தேர்தல் களம் என்பது சமமாக இருந்தால் படுதோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், இ.கம்யூ., கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் தீய செயலில் ஈடுபட்டார்.

கார்ப்பரேட்டுகளை மட்டுமே முன்னேற்ற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதால் விலைவாசி உயர்ந்து அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து நிற்கிறது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என மோடி வாக்குறுதி கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சியில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்தாரா?

இந்தக் கேள்வியை கேட்டால் இளைஞர்களை பக்கோடா சுட்டு விற்கச் சொன்னவர் தான் மோடி. தேர்தல் பத்திரங்களில் நடந்த ஊழல், மோடியின் கிளீன் இமேஜை கிழித்தெறிந்துவிட்டது. இதை சரிசெய்யும் வகையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யாருக்கு கொடுக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிய ஆரம்பித்ததாக வடை சுடுகிறார்.

தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் நிதி வாங்குகின்றன. ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ., என கூட்டணி போல செயல்படும் அமைப்புகளை வைத்து தொழில் நிறுவனங்களுக்கு ரெய்டுக்கு அனுப்புவது, பின் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்குவது என மறைமுக சங்கிலி தொடர்பு இருப்பது தான் பிரச்னைக்குரிய ஒன்று.

இதைப் பற்றி முன்னணி ஊடகங்கள் பேச மறுத்தாலும் பா.ஜ.,வின் தில்லுமுல்லுகள் அம்பலமானது. மோடியைப் போல வசூல் வேட்டையில் ஈடுபட்ட வசூல் ராஜாவை நாடு பார்த்ததில்லை.

கொரோனாவிலும் பிஎம் கேர்ஸ் நிதி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தினார். பிரதமரே கேட்டதால் பலரும் அள்ளிக் கொடுத்தனர். அந்த நிதி எங்கே போனது எனத் தெரியவில்லை. ஆர்.டி.ஐ., மூலம் கேட்டபோது, 'அது தனியார் அறக்கட்டளை' என பதில் வந்தது.

நாட்டின் தணிக்கைக் குழுவான சி.ஏ.ஜி., சுட்டிக் காட்டிய ஊழலைப் பற்றி மோடி வாய் திறப்பதில்லை. இதை வெளியிட்ட சி.ஏ.ஜி., அதிகாரிகளை இடமாற்றம் செய்த மர்மம் என்ன. காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு 526 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை 1670 கோடியாக உயர்த்தி வாங்கினார்.

'இதனால் பயன் அடைந்தவர்கள் யார்?' என காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இதுவரையில் பதில் இல்லை. காப்பரேட்டுகளுக்கு பல்லாயிரம் கோடிகளை தள்ளுபடி செய்ததைப் பற்றி ராகுல் கேட்டபோது, அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதலை நடத்தினார். அவரின் எம்.பி., பதவியை பறித்தார். இவ்வளவும் செய்துவிட்டு ஊழலைப் பற்றி மோடி பேசலாமா?

ஊழல்வாதிகளுக்கு கியாரண்டி கொடுக்கும் ஆட்சியாக பா.ஜ., அரசு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயலில் பா.ஜ., ஈடுபடுகிறது. முன்பெல்லாம் இதைப் பற்றி பேசினால 'ஆன்டி இந்தியன்' என்பார்கள். இண்டியா கூட்டணி அமைந்ததும் நாட்டின் பெயரை பாரத் என மாற்றினர்.

இப்போது ஆன்டி இந்தியனாக சுற்றுவது பா.ஜ.,வினர் தான். அவர்கள் கொடுப்பது தான் மக்களுக்கு செய்தி என செயல்படுகிறார்கள். வேறு செய்திகள் வந்தால் மத உணர்வுகளைத் தூண்டி திசை திருப்புவார்கள். மத பிரச்னைகள் இல்லாவிட்டால் எப்படி பிரச்னையை உண்டாக்கலாம் என யோசிக்கிறார்கள்.

இரவில் தனியாக அமர்ந்து பேய் படம் கூட பார்த்துவிடலாம். ஆனால், இரவில் மோடி பேசுகிறார் என்றாலே மக்களுக்கு படபடப்பு வந்துவிடும். ஒருநாள் இரவில் பண மதிப்பிழப்பை அறிவித்தார்.

இதன்மூலம், 99 சதவீத பணம் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறிவிட்டது. பணமதிப்பிழப்பை ஆதரித்தவர்களே எதிர்த்தார்கள். '2000 ரூபாய் நோட்டு செல்லாது' என்றார். அந்தப் பணமும் 98 சதவீதம் வந்துவிட்டது. பணமதிப்பிழப்பு என்பது ஏழைகள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல்.

அனைவரையும் வங்கிகளில் கணக்கு துவங்க சொன்னார்கள். கொஞ்ச நாளில், 'மினிமல் பேலன்ஸ் இல்லை' எனக் கூறி 21,000 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டனர். மீண்டும் ஒருநாள் இரவு நாடாளுமன்றம் வந்து ஜி.எஸ்.டி., சட்டம் போட்டார்.

அரிசி, பருப்பு, சேமியா, சர்க்கரை, மஞ்சள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி, கோயிலில் ஏற்றும் சூடத்துக்கு 18 சதவீத வரி, ஊதுபத்தி சாம்பிராணிக்கு 5 சதவீத வரி, மெழுகுவர்த்திக்கு 12 சதவீத வரி. மாணவர்களின் நோட்டு புத்தகத்துக்கு 12 சதவீத வரி என விதித்து கொள்ளையடித்தார்கள்.

கொரோனா வந்தபோது ஒருநாள் இரவு பிரதமர் பேசினார். மக்களுக்கு ஏதோ சொல்லப் போகிறார் என எதிர்பார்த்தால், 'மணி அடியுங்கள்... விளக்கு பிடியுங்கள்' எனக் கூறிவிட்டுப் போய்விட்டார்.

கொரோனா காலத்தில் வேலையில்லாமல் தவித்த தொழிலளிகள் பல்லாயிரம் கி.மீ தூரம் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்குப் போனார்கள். அப்போது தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 16 பேர் உயிரிழந்தார்கள்.

நாட்டு மக்கள் அவஸ்தைப்பட்டதை தனக்கான விளம்பர வாய்ப்பாக பார்த்தார். 'ரேவடி கலாசாரத்தை ஒழிப்போம்' என்று கூறி மாநில அரசின் இலவச திட்டங்களை குறுகிய பார்வையோடு பார்த்தவர் தான் மோடி.

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இருந்த 50 சதவீத கட்டண சலுகையை எடுத்துவிட்டார். '10 ஆண்டுகால ஆட்சி டிரைலர் தான்' என பஞ்ச் டயலாக் பேசினார். டிரைலரே கர்ண கொடூரமாக இருந்தால் படம் ஓடவா போகிறது.

'10 ஆண்டு ஆட்சி வெறும் சூப் தான்... இனி தான் மெயின் டிஷ் வரப் போகிறது' என்றார். ஆனால், சூப் கேவலமாக உள்ளதாக மக்கள் வாந்தியெடுக்கின்றனர்.

இப்போது 3வது முறையாக மோடி வாய்ப்பு கேட்கிறார். அப்படி கொடுப்பது என்பது மக்கள் தங்கள் தலையில் தானே அள்ளிப் போடுவதைப் போல தான். மோடியின் பேச்சுகளை நீங்களே எடை போட்டுப் பாருங்கள். அவர் பேச்சில் எதையெல்லாம் மையக் கருத்தாக பேசுகிறார் எனப் பாருங்கள்.

நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகாலம் இருந்துவிட்டு பிளவுபடுத்தும் அரசியலைப் பேசுவதில் அவருக்கு கூச்சம் இல்லை. மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாக அமளியான இந்தியாவாக மாறிவிடும். மக்களிடம் வேறுபாட்டு உணர்வைத் தூண்டி இந்தியாவை நாசம் செய்துவிடுவார்கள்.

மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரங்களும் இருக்காது. ஒரே நாடு ஒரே மொழி ஒரே உடை, ஒரே பண்பாடு என ஒற்றை சர்வாதிகார நாடக மாறிவிடும். மக்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படும். அம்பேத்கர் சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டு ஆர்.எஸ்.எஸ்., சட்டம் கொண்டு வருவார்கள். தேசியக் கொடியை கழட்டிவிட்டு காவிக் கொடியை பறக்கவிடுவார்கள்.

மக்களால் ஓரம்கட்டப்பட்ட பிறகு பா.ஜ.,வை ஏன் எதிர்க்க வேண்டும் என பழனிசாமி கேட்கிறார். தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேரின் முதுகிலும் குத்தியவர் தான் பழனிசாமி. அவரை துரோக சாமியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.

இவர்கள் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிரிகள். பதவி சுகத்துக்காகவும் ஊழலுக்காகவும் பா.ஜ.,வின் மக்கள் விரோத திட்டங்களை பழனிசாமி ஆதரித்தார். பா.ஜ., எதிர்க்க துணிவு வேண்டும். அது பழனிசாமியிடம் இல்லை. இந்த துரோக கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


R SRINIVASAN - chennai, இந்தியா
19-ஏப்-2024 14:31 Report Abuse
R SRINIVASAN அடுத்த அமைச்சரவையில் காமராஜரைப்போல் ,கக்கனைப்போல் ,வெங்கட்ராமனைப்போல் ,c,சுப்ரமணியத்தைப்போல் அமையவேண்டும் .1971-ல் காமராஜரா இந்திராகாந்தியா என்ற போட்டியில் கருணாநிதியுடன் சேர்ந்து காமராஜரையே தோற்கடித்தார்கள் இன்றய காங்கிரஸ் காரர்கள் அதனால் இன்று அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள்
GoK - kovai, இந்தியா
19-ஏப்-2024 10:07 Report Abuse
GoK ஆட்டம் அடங்கப்போவுது கொட்டம் ஒடுங்கப்போவுது...நேரம் நெருங்கிரிச்சி
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,, இந்தியா
19-ஏப்-2024 08:48 Report Abuse
NicoleThomson நாம கார்பொரேட் கம்பெனிங்கறதை எப்படி தான் பொது மக்கள் கண்டு பிடிக்கிறார்களோ ?
J.V. Iyer - Singapore, சிங்கப்பூர்
19-ஏப்-2024 06:17 Report Abuse
J.V. Iyer எங்களுக்கு "உளியின் ஓசை" தான் வேண்டும். சரியாக கமிஷன் கொடுக்காதவர்களுக்கு இந்த படத்தை போட்டு காண்பியுங்கள்,
Suppan - Mumbai, இந்தியா
18-ஏப்-2024 21:07 Report Abuse
Suppan பிதற்றுவதற்கு ஓர் அளவு வேண்டாமா? பக்கோடா சுடுவது கேவலமா? ஊழலில் ஈடுபடுபவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்றால் கைது செய்யக்கூடாதா? பி எம் கேர்சின் தணிக்கை செய்யப்படட கணக்கு இணையத்தில் உள்ளது. அதைக் கூட உங்களுக்கு எழுதிக்கொடுத்த அறிவிலி பார்க்கவில்லையா? இதே மாதிரியான சோனியாவின் அறக்கட்டளைக்கு அப்பொழுதைய மத்திய ஓ ஒன்றிய அரசு பல் கோடி ரூபாய்கள் அள்ளிக்கொடுத்திருக்கிறது. அந்த நிதி சோனியாவின் சொந்த உபயோகத்துக்குப் போய்விட்டன என்ற விஷயமாவது உங்களுக்குத் தெரியுமா?
raghavan - Srirangam, Trichy, இந்தியா
18-ஏப்-2024 19:54 Report Abuse
raghavan "எரியுதடி மாலா பேன் ஐ போடு", இதைவிட கர்ணகொடூரம் வேற இருக்கா?
என்றும் இந்தியன் - Kolkata, இந்தியா
18-ஏப்-2024 17:40 Report Abuse
என்றும் இந்தியன் டிரைலரே கர்ண கொடூரம்... படம் ஓடுமா???இப்படித்தான் உமது கட்சியை மக்கள் நினைக்கின்றார்கள்
Bneutral - Chandigarh, இந்தியா
18-ஏப்-2024 17:38 Report Abuse
Bneutral திமுக, அதிமுக அழிக்கப்படும், பிஜேபி உத்தரவாதம் மனநிலை சரியில்லாதவர் இப்படி கருத்து தெரிவிப்பார்
Bhaskar Srinivasan - Trichy, இந்தியா
18-ஏப்-2024 15:13 Report Abuse
Bhaskar Srinivasan card போடுறது தான் அந்த படமே
jayvee - chennai, இந்தியா
18-ஏப்-2024 14:22 Report Abuse
jayvee ட்ரைலர் மெயின் சினிமா இன்னும் சில பல சினிமா வசனகர்கர்த்தாக்கள் எழுதிக்கொடுத்த வசனங்களை வைத்து மக்களை ஏமாற்றும் தலைவர்..
மேலும் 24 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்