அவர் வந்தால் இவர் வருவதில்லை அமைச்சர் - எம்.எல்.ஏ., 'லடாய்'
திருப்பூர் தி.மு.க.,வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் இடையே கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இருவருமே, பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதை முடிந்தவரை தவிர்த்து வருகின்றனர்.
பெயருக்கு அவ்வப்போது ஏதாவது ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெளிக்காட்டிக் கொண்டாலும், இவர்களின் கோஷ்டி பூசல் அப்பட்டமாக உள்ளது.
தற்போது, தி.மு.க., கூட்டணியில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூ., கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கின்றனர்.
சுப்பராயனுக்கு ஆதரவாக அமைச்சர் பிரசாரம் செய்யும் இடங்களில் எம்.எல்.ஏ., பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். அதுபோன்ற நேரத்தில் வேறு இடங்களில் பிரசாரத்தை மேற்கொள்வது போல தகவலை தெரிவித்து விடுகிறார்.
நேற்று முன்தினம், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆத்துப்பாளையத்தில் அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்களை சந்தித்து நோட்டீஸ் வழங்கி ஓட்டு சேகரித்தனர். அங்கு, எம்.எல்.ஏ., வரவில்லை.
இதுகுறித்து கட்சியினரிடம் கேட்ட போது, 'நீலகிரி வேட்பாளர் ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, வேறு இடங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்' என்று மழுப்பலாக பதில் கூறி கடந்து சென்றனர்.
வாசகர் கருத்து