தலைவர்கள் வராததால் திணறும் பா.ம.க., வேட்பாளர்
மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில்17 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இருப்பினும் காங்., - அ.தி.மு.க., - பா.ம.க., வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. மூவரும் ஒருவரை ஒருவர் முந்தும் வகையில் பிரசார உத்திகளை கையாண்டுவருகின்றனர்.
அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் காங்., வேட்பாளர் சுதாவிற்கு ஆதரவாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, இ.கம்யூ., மாநில தலைவர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்ததுடன், தொகுதியை இரண்டாகப் பிரித்து, இரண்டு அமைச்சர்கள் தலைமையில் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் பாபுவிற்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா மற்றும் திரை நட்சத்திரங்கள் பிரசாரம் செய்ததுடன் வேட்பாளரின் தந்தையான அ.தி.மு.க., - மா.செ., பவுன்ராஜ் பல்வேறு வகையான உத்திகளைக் கையாண்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
ஆனால், பா.ம.க., வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக, த.மா.கா., தலைவர் வாசன் மட்டும், கும்பகோணத்தில் பிரசாரம் செய்தார். பா.ம.க., - பா.ஜ.,- அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதுவரை மயிலாடுதுறை தொகுதியில் பிரசாரம் செய்ய வரவில்லை.
கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அவரவர் கட்சி தலைமை போட்டியிடும் தொகுதிகளில் ஓட்டு சேகரிக்கச் சென்று விட்டதால் பா.ம.க., வேட்பாளர், தேர்தல் பணியாற்றக் கூட ஆள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.
இதனால், கூட்டணிக் கட்சி தலைவர்கள் மட்டுமன்றி சொந்த கட்சி தலைவர்களும் மயிலாடுதுறையைக் கண்டுகொள்ளாத விரக்தி, தொகுதி பா.ம.க.,வினர் மத்தியில் நிலவி வருகிறது.
வாசகர் கருத்து