Advertisement

போன் வந்த பிறகே தாக்குதல் தீவிரமானது: அண்ணாமலை மீது கோவை தி.மு.க., புகார்

கோவையில் தி.மு.க, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில், 'அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக கணபதி ராஜ்குமாரும் அ.தி.மு..க, வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரனும் பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு கோவை ஆவராம்பாளையத்தில் 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரசாரம் செய்ததாக தி.மு.க., கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பா.ஜ., நிர்வாகிகள் அவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் கார்த்திக் கூறியதாவது:

கோவை ஆவராம்பாளையத்தில் நேற்று இரவு 10.40 மணிக்கு மேல் அண்ணாமலை பிரசாரம் செய்துள்ளார். இதைக் கவனித்த எங்கள் கூட்டணிக் கட்சியினர், 'விதிகளை மீறி பிரசாரம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்' என அங்குள்ள போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

அப்போது பா.ஜ வேட்பாளருடன் வந்த அடியாட்கள் சிலர், எங்கள் ஆட்களை பின்னால் இருந்து தாக்கியுள்ளனர். அவர்கள் யாரும் உள்ளூர் கிடையாது. வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகளாக இருந்தனர். இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. பாஜ. வேட்பாளர் எப்படிப்பட்டவர் என்பதற்கு இதுவே சாட்சி.

ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, 'சட்டவிதிகளுக்கு உட்பட்டு பிரசாரம் செய்வோம்' என உறுதிமொழி எடுப்பார்கள். ஆனால், இந்த வாரத்தில் பல இடங்களில் சட்டவிதிகளுக்கு புறம்பாக அண்ணாமலை பிரசாரம் செய்துள்ளார்.

அதைக் கேட்கப் போகிறவர்களை அடியாள்களை விட்டு அடிக்கிறார். இது குறித்து புகார் கொடுத்தவர் தனது மனுவில், 'நாங்கள் புகார் கூறியபோது அவர்களுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதன்பிறகு தான் அதிகப்படியாக தாக்கினர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை மீதோ பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் மீதோ வழக்குப் பதிவு செய்யவில்லை. காவல் துணை ஆணையரிடம் புகார் தெரிவித்தோம். கலெக்டரிடமும் கூறியுள்ளோம். தேர்தல் கமிஷன் மீதே எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.

தி.மு.க.,வின் ஐ.டி விங் 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரசாரம் செய்வதை பேஸ்புக்கில் லைவாக காட்டியுள்ளனர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை. அமைதியாக இருக்கும் கோவையில் மதவெறியை தூண்டி வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ., நினைக்கிறது.

தி.மு.க.,வினர் எதையும் தாங்கக் கூடியவர்கள். நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அண்ணாமலையின் பூச்சாண்டிகளுக்கு பயப்படப் போவதில்லை.

சட்டத்தை மீறி செயல்படும் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட வெளியாட்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் பெயரளவுக்கு 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கூறுகையில், "கோவையில் பா.ஜ., தன் சுயரூபத்தை காட்ட முயற்சிக்கிறது. தோல்வி பயம் அவர்களின் முகத்தில் தெரிகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை ஊடுருவ வைத்துள்ளனர். எந்த நேரத்திலும் கலவரத்தை ஏற்படுத்துவார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அதற்கு முதல் உதாரணம் நேற்று நடந்த சம்பவம்.

தேர்தல் கமிஷனும் காவல்துறையும் நடுநிலையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகளை வளைத்து சாதகமாக செயல்பட வைக்க முயற்சிக்கிறார்கள். பா.ஜ.,வின் மிரட்டல்கள் கோவையில் எடுபடாது" என்றார்.

இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்