Advertisement

அம்பேத்கர் சட்டம் இருக்காது; ஆர்.எஸ்.எஸ்., சட்டம் வந்துவிடும்: ஸ்டாலின்

"மோடியின் ஆட்சியில் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. தனி மனிதர்கள் துவங்கி மாநிலங்கள் வரையில் அடிப்படை உரிமைகளுக்காக போராட வைத்துவிட்டார்" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

காஞ்சிபுரம் தி.மு.க., வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கை. தி.மு.க., அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. 2021ல் சொன்ன திட்டங்களை மட்டுமல்ல, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றினோம்.

மக்களுக்கு நன்மை செய்வது தான் நமது ஒரே திட்டம். ஆனால் பழனிசாமியோ, 'மத்திய அரசிடம் விருது வாங்கினீர்களா?' எனக் கேட்கிறார். உங்களுக்கு அவர்கள் கொடுத்த விருது எதற்கு தெரியுமா. 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிகத் திறமைசாலிகள்' என்ற டயலாக் வருமே அதற்காக அவர்களுக்கு விருது கொடுத்தார்கள்.

நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். அடுத்து 40க்கு 40 என்ற விருதுக்காக காத்திருக்கிறோம். நீங்கள் பாழ்படுத்திய அரசை சீர்செய்து முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ளோம். தன்னுடைய பதவி சுகத்துக்காக பா.ஜ.,விடம் தமிழக உரிமைகளை அடகு வைத்ததில் தான் பழனிசாமி நம்பர் ஒன்.

'மோடி தான் எங்கள் டாடி' என்றார்கள். இந்தியை திணித்தபோது எதிர்த்தோம். அ.தி.மு.க., அமைச்சரோ, 'அண்ணா மும்மொழி கொள்கைகளை ஆதரித்தார்' என பச்சைப் பொய்யை பேசினார். 'அ.தி.மு.க.,வும் பா,ஜ.,வும் இயற்கை கூட்டணி' என நாடகம் போட்டனர்.

இன்றைக்கு பழனிசாமி அளித்த பேட்டியில், 'பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா?' எனக் கேட்டபோது 'பொறுத்திருந்து பாருங்கள்' என வாய்தா வாங்கியுள்ளார். இது தான் அவரது பா.ஜ., எதிர்ப்பு லட்சணம்.

'பா.ஜ.,வை ஒருபோதும் ஆதரிக்க முடியாது' என திட்டவட்டமாக ஏன் கூற முடியவில்லை. பா.ஜ.,வை அவரால் ஒருபோதும் எதிர்க்க முடியாது. அ.தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு பா.ஜ.,வுக்கு போடும் ஓட்டு தான்.

தமிழக மக்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். 'இண்டியா கூட்டணியின் கைகளில் பாதுகாப்பாக இருப்போம்' என நம்புகிறார்கள். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்துள்ளது.

பிரதமர் மோடி மிகப் பெரிய பொறுப்பில் இருந்துவிட்டு அனைத்து கூட்டங்களிலும் மிக மலிவான பிரிவினைவாத அரசியலை செய்து வருகிறார். சாதி, மதம், உணவு என எப்படியெல்லாம் மக்களை பிளவுபடுத்தலாம் என மோடி சிந்திக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் சிந்தித்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா?

மோடியின் ஆட்சியில் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. தனி மனிதர்கள் துவங்கி மாநிலங்கள் வரையில் அடிப்படை உரிமைகளுக்காக போராட வைத்துவிட்டார். 12 ஆண்டுகள் குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடிக்கு தற்போது மாநிலங்களைப் பிடிப்பதில்லை.

மாநிலங்களுக்கு மிகப் பெரிய பிரச்னையை கொடுப்பதே மோடி தான். மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. பெண்களை மதிப்பதாக வசனம் பேசுவார். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை. மணிப்பூர் பெண்களுக்கான நீதி எங்கே. பில்கிஸ் பானு போராடிப் பெற்ற நீதியைக் கூட பா.ஜ., கொச்சைப்படுத்தியது.

நாட்டுக்கு பெருமை தேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகள் நியாயம் கேட்டபோது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை பா.ஜ., காப்பாற்றியது. ஆனால், தி.மு..க, ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படுகிறது. பெண்கள் ஓதுவார்களாகவும் அர்ச்சகர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மோடி அரசில் நிதி ஆயோக்கின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த சுப்ரமணியன், 'மாநிலங்களுக்குச் செல்லும் நிதியை எப்படி குறைக்கலாம்?' என மோடி சதித்திட்டம் தீட்டியதாக கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட்டணி முயற்சியை முன்னெடுப்பார். அது முடியாவிட்டால் அந்தக் கட்சிகளை உடைக்கப் பார்ப்பார். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவார். சி.பி.ஐ., ஐ.டி., ஈ.டி., போன்ற அமைப்புகள் மூலம் தொல்லை கொடுப்பார்.

மாநில உரிமைகளைப் பற்றியோ கூட்டாட்சியைப் பற்றியோ பேசுவதற்கு மோடிக்கு தார்மீக உரிமை இருக்கிறதா. வளர்ச்சி நிவாரணம் கேட்டு கர்நாடக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஒவ்வொரு பிரச்னைக்கும் கோர்ட் படி ஏறவிட்டவர் தான் மோடி. மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது.

நேற்று மோடி கொடுத்த பேட்டியில், தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். பிரதமரின் பகல் கனவை நினைத்து சிரிப்பதா எனத் தெரியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ., வளரவே முடியாது.

நாடு முழுக்க நீங்கள் தோற்பது உறுதியாக இருக்கும் போது மக்கள் உங்களுக்கு எப்படி ஓட்டுப் போடுவார்கள். நீங்கள் பேசும் வாய்களால் தான் பா.ஜ., வளர்கிறதே தவிர களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 'தமிழகத்தில் பா.ஜ., ஜெயிக்கும்' என யாரோ உங்களை ஏமாற்றியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகால நிலை இனியும் தொடரக் கூடாது. இன்னொரு முறை ஏமாந்தால் 200 ஆண்டுகள் நாடு பின்னோக்கிப் போய்விடும். அறிவியல் பின்னோக்கிச் சென்று பிற்போக்குக் கதைகள் திணிக்கப்படும்.

மக்களின் உரிமைகள் பறிக்கப்படும். சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்படும். அம்பேத்கர் சட்டம் போய் ஆர்.எஸ்.எஸ்., சட்டம் அமல்படுத்தப்படும். எனவே, இந்த தேர்தலில் பா.ஜ.,வையும் அ.தி.மு.க.,வையும் ஒருசேர வீழ்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்