அ.தி.மு.க., ஓட்டு பா.ம.க.,வுக்கு வந்தால்...: அன்புமணி எதிர்பார்ப்பு
"அடுத்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த இரு கட்சிகளுக்கும் புரிதல் இல்லை" என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார். தருமபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து அரூரில் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டம் தருமபுரி என 50 வருடங்களாக அனைத்து கட்சிகளையும் இந்த வசனத்தைப் பேசி வருகின்றனர். இங்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் வேலு சொல்வதைக் கேட்பார். தி.மு.க., வேட்பாளரின் முதலாளி திருவண்ணாமலையில் இருக்கிறார். அ.தி.மு.க., வேட்பாளரை பக்கத்து தெருவினருக்குக் கூட தெரியாது.
சின்னத்தை பார்த்து இவ்வளவு காலம் வாக்களித்தோம். அண்ணாவும் காமராஜரும் நேர்மையான அரசியலை செய்தனர். இவர்கள் நியமிக்கும் வேட்பாளர்களும் நல்லவர்களாக இருந்தனர்.
அந்தக் காலத்தில் வேட்பாளர்களை நாம் பார்க்கவில்லை. அதன் பின் வந்தவர்கள் மோசமான வேட்பாளர்களை நிறுத்தினர். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து இந்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதியும் இந்த மாவட்டம் வந்தாலே எங்களைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டை பற்றி பேசுகின்றனர்.
பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தது ஒன்றும் புதியது கிடையாது. தி.மு.க.,வும் இந்தக் கூட்டணியில் இருந்தது, அ.தி.மு.க.,வும் இருந்தது. இப்போது அ.தி.மு.க., இந்தக் கூட்டணியில் இல்லை.
57 ஆண்டுகாலம் இவர்கள் ஆட்சி செய்தது போதும் என்பதற்காகவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். தொடர்ந்து ஆட்சி செய்த இவர்களால் எந்த பயனும் ஏற்படவில்லை. தி.மு.க.,-அ.தி.மு.க.,வுக்கு புதிய தொலைநோக்கு பார்வை என்று எதுவும் கிடையாது. இவர்கள் காலாவதியான கட்சிகள்.
அடுத்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த இரு கட்சிகளுக்கும் புரிதல் இல்லை.
மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாயைத் தருகின்றனர். ஸ்டாலின் 1924ம் ஆண்டு காலகட்டத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன், அந்தக் காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் என்பது பெரிய பணம். இப்போது?
தமிழகம் முழுதும் நிலுவையில் இருக்கும் திட்டங்களை நிறைவேற்ற நானும் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். எந்தப் பயனும் இல்லை. கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் 500,1000 ரூபாய் என தருகிறார்கள்.
அ.தி.மு.க.,வை சேர்ந்த கே.பி.அன்பழகன் போல தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு யாரும் கிடையாது. 3 முறை அமைச்சராக இருந்தும் மக்களுக்காக அவர் எதுவும் செய்யவில்லை.
ஓட்டுகளை அ.தி.மு.க.,தொண்டர்கள் வீணாக்கக் கூடாது. பழனிசாமி பிரதமராக வரப்போவது கிடையாது. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு செலுத்துவதே வீணானது. அதை பா.ம.க.,வுக்கு செலுத்தினால் தி.மு.க., தோல்வி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து