வடிவேலு மறுத்ததால் கருணாசுக்கு வாய்ப்பு
தனக்கு புதுப்பட வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக, தி.மு.க.,தேர்தல் பிரசாரத்திற்கு வரமுடியவில்லை என, நடிகர் வடிவேலு மறுத்துவிட்டார். அதனால் நடிகர் கருணாசுக்கு பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வில், நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரிரகுராம், நடிகர் சிங்கமுத்து போன்றவர்கள் நட்சத்திர பேச்சாளர்களாக செல்கின்றனர்.
தி.மு.க.,வில் நட்சத்திர பேச்சாளராக, நடிகர் வடிவேலுவை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைக்க, அக்கட்சி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. தற்போது வடிவேலு சினிமாவில் பிசியாக இருப்பதால், பிரசாரத்தில் ஈடுபட மறுத்துள்ளார்.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணிக்கு நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக, கருணாசை, தி.மு.க., கூட்டணிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுப்பி வைக்க பேச்சு நடத்தினர்.
கருணாஸ் ஒப்புக்கொண்டதால், அவருக்கு 10 நாட்கள் பிரசாரம் செய்ய தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தி.மு.க.. வின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில், கருணாஸ் பெயர் 33வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
கருணாசை தொடர்ந்து, நடிகர் போஸ் வெங்கட்டிற்கு 5 நாள் பிரசாரம் செய்ய ஒதுக்கப்பட்டு உள்ளது.
நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திற்கு 13 நாட்களும், நடிகர் வாசுவிக்ரமிற்கு 10 நாட்களும் பிரசாரம் மேற்கொள்ள அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டு உள்ளது.
வாசகர் கருத்து