மூன்று முன்னாள் அமைச்சர்கள் வியூகத்தால் திருவள்ளூரில் திணறும் தி.மு.க., கூட்டணி
மூ ன்று முன்னாள் அமைச்சர்களின் தேர்தல் வியூகத்தால், திருவள்ளூர் தி.மு.க., கூட்டணியினர் திணறி வருகின்றனர்.
திருவள்ளூர் தொகுதியில், தி.மு.க., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., நல்லதம்பி போட்டியிடுகிறார்.
ஆரம்பத்தில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் எழுச்சியாக தேர்தல் பணிகளை செய்தனர். ஆனால், மனுதாக்கலுக்கு பின், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலர்கள் கோரிக்கைகளை, காங்., வேட்பாளரும், அக்கட்சி தலைமையும் நிறைவேற்றவில்லை.
பழனிசாமி 'கறார்'
அதே நேரத்தில், ஆரம்பத்தில் அ.தி.மு.க., கூட்டணியினரின் பிரசாரத்தில் சுணக்கம் இருந்தது. மனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் செலவுகளுக்கு பணமின்றி, தே.மு.தி.க., வேட்பாளர் திணறி வந்தார். இதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கவனத்திற்கு, அக்கட்சி மாவட்ட செயலர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் மூர்த்தி, ரமணா மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் கொண்டு சென்றனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலராக உள்ள பொன்னேரி தொகுதி முன்னாளர் எம்.எல்.ஏ., பலராமனும் இதே புகாரை வாசித்துள்ளார். அதற்கு பழனிசாமி, 'சைக்கிள் பஞ்சர் கடை நடத்தும் தே.மு.தி.க., வேட்பாளரிடம் பணத்தை எதிர்பார்ப்பது தவறு.
உங்களுக்கு மாவட்ட செயலர் பதவி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்றால், சொந்த காசை செலவிட வேண்டும். தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்' என்று கறாராக கூறியுள்ளார்.
பணியில் சுறுசுறுப்பு
இதையடுத்து, மூன்று முன்னாள் அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று, தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். அதானி துறைமுக பிரச்னையை எழுப்பி சட்டசபை தேர்தலில் பறிக்கப்பட்ட, அ.தி.மு.க.,வின் மீனவர் ஓட்டுகளை மீண்டும் கைப்பற்ற, வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மீனவ அமைப்புகளுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. காங்., வேட்பாளர் வந்து சென்ற சுவடே தெரியாத நிலையில், தே.மு.தி.க., வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் தடபுடல் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பட்டாசு, கொடி, தோரணம், வாகன பேரணி என தே.மு.தி.க., வேட்பாளரே மிரளும் அளவிற்கு, தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.,வினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், காங்., கட்சியினர், தி.மு.க.,வின் ஒத்துழைப்பின்றி திணறி வருகின்றனர்.
வாசகர் கருத்து