ரஜினி, விஜய் ரசிகர்கள் ஓட்டு: வந்துவிட்டது உத்தரவு
தேர்தல் வந்தாலே ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதம் எழுவது வழக்கம். ஆன்மிக அரசியலை முன்வைத்து அவர் புதிய கட்சியை துவக்குவார் என ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருந்த நிலையில், தன் உடல் நலத்தை காரணம் காட்டி பின் வாங்கிவிட்டார். ஆனாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் கலைந்து விடவில்லை.
தமிழகத்தில் 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு எதிராக மூப்பனாரின் த.மா.கா., - தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக கிடைத்த ரஜினியின் 'வாய்ஸ்' அரசியலில் பெரும் தாக்கத்தைஏற்படுத்தியது.
'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது' என்ற அப்போதைய அவரது பேச்சு ஏற்படுத்திய விளைவு, த.மா.கா., - தி.மு.க., கூட்டணி அமோகமான வெற்றியை பெற்றது.
மவுனம்
அப்போது முதல் தற்போது வரை அரசியலும், ரஜினியும் பிரிக்க முடியாத விஷயமாகி விட்டது. ஆனால், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினி மீது எப்போதும் பா.ஜ., சாயம் தென்படுவதை காணமுடிகிறது. அயோத்தி விழாவில் பங்கேற்றது, சி.ஏ.ஏ., குறித்து பா.ஜ.,வுக்கான ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தது போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.
அதேநேரம் முதல்வர் ஸ்டாலின், சசிகலா போன்றவர்களை சந்தித்து தன்னை அரசியலில் 'பேலன்ஸ்' செய்து 'என் வழி தனி வழி' என்பது தான் அவரின் 'ஸ்டைலாக' உள்ளது.
கட்சி துவங்காத நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோல் நடிகர் விஜய்க்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள், ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அவர் துவங்கியிருந்தாலும், 2026 சட்டசபை தேர்தலில் தான், தன் பலத்தை நிரூபிக்க காத்திருக்கிறார்.
சினிமா ரீதியாக ஆளுங்கட்சியின் சில எதிர்ப்புகளை விஜய் சந்தித்தார். ரஜினியைப் போலவே விஜயும் இந்த தேர்தலில் ரசிகர்கள் எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என கூறாமல், மவுனம் காக்கிறார்.
இதுகுறித்து அவர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
பழனிபாட்ஷா, மதுரை நகர் துணை செயலர், ரஜினி ரசிகர் மன்றம்: தற்போது ரஜினி மவுனம் காத்தாலும், அவரது அரசியல் என்ட்ரி மீண்டும் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் உள்ளது.
60 சதவீதம் பா.ஜ.,வுக்கு
தேர்தலில் இவருக்கு தான் ஓட்டளிக்க வேண்டும் என, எங்களை ரஜினி கட்டாயப்படுத்த மாட்டார். அதுபோல் தான் இந்த தேர்தலிலும் உள்ளது. ஆனால், உண்மையான ரஜினி ரசிகர்கள் 60 சதவீதம் பேர் பா.ஜ.,வை ஆதரிக்க உள்ளோம்.
ரஜினி புதிய கட்சியை துவக்கி என்ட்ரி கொடுக்கும் மனநிலையில் இருந்தபோது அவருக்கு தி.மு.க., முட்டுக்கட்டை போட்டது. அதை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. ஆனால், கட்சி ரீதியாக சிலர் பிரிந்துள்ளனர்.
இதனால், அவர் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை அவரவர் முடிவு செய்து கொள்ளலாம் என வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தாலும், தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையில் மொத்த ரசிகர்களும் இருப்பதை உணர்ந்து கொண்டு விட்டார். அதனால், பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் எண்ணங்களை தேர்தலில் பிரதிபலிக்க பச்சைக் கொடி காட்டி விட்டார்.
தி.மு.க.,வே எங்கள் குறி
விஜய் அன்பன், மதுரை வடக்கு மாவட்ட தலைவர், விஜய் ரசிகர் மன்றம்: தற்போது வரை எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கட்சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஓட்டளிக்க உள்ளோம். எங்களுக்கு 2026 சட்டசபை தேர்தல் தான் 'டார்க்கெட்!'
ஆளுங்கட்சியை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்துக்கு வர நினைக்கும் விஜயின் எண்ணம், ஆளுங்கட்சிக்கு எதிரானது. அதனால், தேர்தலில் அவருடைய எண்ணத்தை பிரதிபலிக்கப் போகிறோம். அதற்கேற்ப கட்சித் தலைமையிடம் இருந்து சமிக்கைகள் வந்துள்ளன.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
இந்த விபரங்கள் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரியவந்து, இரு ஆளுமைகளின் ரசிகர்களையும் சமாதானப்படுதும் முயற்சிகளில் லோக்கல் தி.மு.க.,வினர் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து