சசிகலா காலில் விழுந்தது ஏன்: பழனிசாமி விளக்கம்
"பா.ஜ., கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிய பிறகு, 'இது கள்ளக் கூட்டணி' என ஸ்டாலினும் உதயநிதியும் விமர்சிக்கின்றனர். தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இப்படிப் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
மதுரை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் சரவணனின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திறந்து வைத்தார்.
பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் சூழலுக்கேற்ப கூட்டணிகள் அமைகின்றன. யாரும் யாரையும் விமர்சித்தது இல்லை. தி.மு.க., மட்டும் கள்ளக் கூட்டணி என விமர்சிக்கிறது. பா.ஜ., கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்த பிறகு திட்டமிட்டு ஸ்டாலினும் உதயநிதியும் இவ்வாறு பேசி வருகின்றனர். தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இப்படிப் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை.
எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்போம். ராமநாதபுரத்தில் எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் சமம். தகுதி இருப்பதால் தான் பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கியது என்பது நான் எடுத்த முடிவு அல்ல, 2 கோடி தொண்டர்களின் நிலைப்பாடு அது.
நான் சசிகலா காலில் விழுந்த படத்தை உதயநிதி காட்டி வருகிறார். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது ஒன்றும் தவறில்லை. மூன்றாவது மனிதர் காலில் நான் விழவில்லையே.
உங்களைப் போல ஒன்றும் வீரவசனம் பேசவில்லை. பிரதமரை எதிர்ப்பதாக வெளியில் காட்டிக் கொள்வார்கள். கறுப்புக் குடை பிடித்தால் கேள்வி வரும் என்பதால் வெள்ளைக் கொடி பிடிப்பவர்கள், தி.மு.க.,வினர்.
பின் டில்லிக்கு ஓடிப் போய் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமரை அழைத்து வருவார்கள். இங்கு வீரவசனம் பேசுவார்கள். அங்கு சரணாகதி அடைவார்கள்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
வாசகர் கருத்து