அட்டென்டன்ஸ் எடுத்தால் ஆளில்லை: அதிர்ச்சியில் அண்ணாமலை!
லோக்சபா தேர்தலில் நிற்க விருப்பமில்லை என்றாலும், பா.ஜ., மேலிட உத்தரவின்படி கோவையில் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அண்ணாமலை; அவரது மனுவும் ஏற்கப்பட்டு விட்டது.
அவர் மாநிலத் தலைவரான பின், தமிழகத்தில் கட்சி வளர்ந்துள்ளது என்பதை பா.ஜ.,வினர் சொல்லி வருகின்றனர். ஆனால், முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட பலரும், 'கோவையில் பா.ஜ.,வுக்கு பூத் கமிட்டிக்கே ஆளில்லை' என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கேற்பவே, அண்ணாமலைக்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் அடுத்தடுத்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பா.ஜ., கட்டமைப்பில் மண்டல கேந்திரா, சக்தி கேந்திரா என பல அடுக்குகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இவற்றில், ஒரு சக்தி கேந்திராவின் கீழ், ஆறேழு பூத் கமிட்டிகள் இடம்பெறுகின்றன.
தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, இந்த பூத் கமிட்டிகளை கொண்ட சக்தி கேந்திராவுக்கு, முதற்கட்டமாக தேர்தல் செலவுக்கான பணப் பட்டுவாடா செய்வதற்காக, நேற்று முன்தினம் கூட்டம் நடந்துள்ளது.
அப்போது, சக்தி கேந்திரா நிர்வாகிகளை அழைத்து, பூத் கமிட்டி உறுப்பினர்களை வரிசைப்படுத்தி பணம் கொடுப்பதற்கு, அண்ணாமலை நியமித்துள்ள நிர்வாகிகள், பட்டியல் கேட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த பட்டியலை வைத்து, ஆட்களை அழைத்தபோது, பலரையும் காணவில்லை. ஒவ்வொரு பட்டியலாக வாசிக்க வாசிக்க, பெயர்கள் இருந்ததே தவிர, உண்மையில் ஆட்கள் இல்லை. விசாரணையில், பாதிக்கும் மேற்பட்ட பூத்களுக்கு போலியாக பெயர் சேர்த்ததை, நிர்வாகிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், 'கோவையில் பா.ஜ., மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட ரமேஷ் குமாருக்கு, இந்த பூத் கமிட்டி குழப்பங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை.
இதற்கு முன், பாலாஜி உத்தம ராமசாமி இருந்தபோது தான், அவரை ஏமாற்றி பூத் கமிட்டிகளில் போலியாக ஆட்களை சேர்த்துள்ளனர். அதை வைத்து தேர்தல் நேரத்தில் பணத்தை சுருட்டப் பார்த்துள்ளனர்.
'சில கமிட்டிகளுக்கு சமீபத்தில் தான் ஆட்களை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகள் எதுவுமே தெரியவில்லை. இனிமேல் கற்று தந்து, வேலை வாங்குவது ரொம்பவும் கஷ்டம். சிட்டிக்குள்ளேயே இந்த நிலை என்றால், ரூரல் தொகுதிகளில் எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை' என்றனர்.
கோவையில் கட்சி நிர்வாகிகளின் இந்த உள்ளடி வேலையில் அதிர்ச்சி அடைந்துள்ளது அண்ணாமலை தரப்பு.
வாசகர் கருத்து