சீமானின் சின்னத்தை பறித்த கட்சி: ஆறு இடங்களில் மட்டுமே போட்டி
நாம் தமிழர் கட்சி, 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், 7 சதவீத ஓட்டுகளை பெற்றது.
ஆனாலும், இந்த லோக்சபா தேர்தலில், வீரா ரெட்டி தலைமையிலான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட இருப்பதாக, அக்கட்சியின் மாநில தலைவர் யோகி ஜெயகுமார் கூறியிருந்தார். ஆனால், திருவள்ளூர் -- தனி, காஞ்சிபுரம் - தனி, வேலுார், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய ஆறு தொகுதிகளில் மட்டுமே, அக்கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெயகுமார் கூறியதாவது:
எங்கள் கட்சியின் சார்பில், 39 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றோம். ஆனால், பல தொகுதிகளில் மனு தாக்கல் செய்ய விடாமல், நாம் தமிழர் கட்சியினர் தடுத்து விட்டனர். போதிய ஆள் பலம் இல்லாததால், அவர்களை மீறி எங்கள் வேட்பாளர்களால் மனு தாக்கல் செய்ய முடியவில்லை.
நாம் தமிழர் கட்சியினரின் அராஜகத்தையும் மீறி, 17 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தோம். ஆனால், ஆறு தொகுதிகளில் மட்டுமே எங்கள் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. பல தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள், சுயேச்சைகளாக கணக்கில் காட்டப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் முனு ஆறுமுகம், சுயேச்சை வேட்பாளராக காட்டப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்து திரும்பிய அவர் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.44 லட்சம் வசூல்
நாம் தமிழர் கட்சியினர், மக்களிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் தேர்தல் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்து, 'ஆன்லைன்' வாயிலாக நிதி திரட்டி வருகின்றனர். நேற்று வரை, 44 லட்சம் ரூபாய் நிதி வசூலித்துள்ளனர்.
வாசகர் கருத்து