150 இடங்களில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெறும்: ராகுல் காந்தி கணிப்பு
"பா.ஜ., ஆட்சியில் பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி., அதானி போன்றவர்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை குறைத்தது போன்றவற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.,19ம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து கடந்த 15, 20 நாள்களுக்கு முன்பு வரையில் பா.ஜ., 180 தொகுதிகளில் வெல்லும் எனக் கணித்திருந்தேன். பொதுவாக, இந்தக் கணிப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் தற்போதைய நிலவரங்களின்படி அவர்களால் 150 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடியும். இண்டியா கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வரக்கூடிய தகவல்கள் இதையே தெரிவிக்கின்றன. நாங்கள் முன்னேறி வருகிறோம். உ.பி.,யில் சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளோம்.
பா.ஜ.,வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அதானி போன்றவர்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை குறைத்தது போன்றவற்றால் அனைத்து தரப்பினரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில் மீண்டும் வேலைவாய்ப்பை வலுப்படுத்துவதே எங்களின் முதல் வேலையாக இருக்கும்.
உ.பி.,யில் உள்ள பட்டதாரிகளுக்கும் பட்டயப் படிப்பை முடித்தவர்களுக்கும் பயிற்சிகளை வழங்குவோம். இந்த பயிற்சி காலத்தில் இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வோம்.
உலகிலேயே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிக்கும் திட்டமாக தேர்தல் பத்திரங்கள் உள்ளன. கட்சிகளுக்கான நிதியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இது கொள்ளையடிப்பதற்காகத் தான் என்பது நாட்டின் தொழில் அதிபர்களுக்குத் தெரியும். ஊழலின் சாம்பியனாக மோடி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து