போட்டியிலிருந்து விலகி விடுவேன் : மாஜியிடம் கொந்தளித்த அ.தி.மு.க., வேட்பாளர்
கடந்த சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த ஆற்றல் அசோக்குமாருக்கு, ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க., வேட்பாளர்களில் 653 கோடி ரூபாய்க்கு சொத்து கணக்கு காட்டிய ஆற்றல், பணம் படைத்த வேட்பாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் செலவு விவகாரம் தொடர்பாக, அவருக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ள முட்டல் மோதல் பூதாகரமாக வெடித்து உள்ளது.
அதிருப்தி
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஈரோடு காலிங்கராயன்பாளையம் பகுதியில், 150 மூட்டை சேலைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை, ஆற்றல் மீது வழக்குப்பதிவு செய்துஉள்ளது.
ஆற்றல் அறக்கட்டளை சார்பில், 10 ரூபாய் சாப்பாடு உள்ளிட்ட சேவைகளை செய்து வரும் அசோக்குமாருக்கு சேலைகள் பறிமுதல் வழக்கு விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவும், நாமக்கல் தொகுதி தேர்தல் செலவுக்கும் ஆற்றல் அசோக்குமாரிடம் பணம் கேட்டு, முன்னாள் அமைச்சர் தங்கமணி நெருக்கடி தந்துள்ளார்.
ஆனால், ஏற்கனவே சேலைகள் பறிமுதல் விவகாரத்தில் சிக்கிய ஆற்றல் அசோக்குமார், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விவகாரத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, 'இனி என்னிடம் எந்த பணமும் கிடையாது.
நான் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கவில்லை. சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை விரயம் செய்ய விரும்பவில்லை' என, கொந்தளித்து உள்ளார்.
இதில், அந்த முன்னாள் அமைச்சருக்கும் ஆற்றல் அசோக்குமாருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர், தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி விட்டார்.
சமரசம்
இந்த விவகாரம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தெரிய வந்ததும், அவர் இரு தரப்பினரை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்; ஆனால், தோல்வி அடைந்தார்.
தேர்தல் செலவு விவகாரத்தில் நெருக்கடி முற்றியதால், கோபம் அடைந்த வேட்பாளர் ஆற்றல், 'இனிமேலும் எனக்கு நெருக்கடி தந்தால் போட்டியிலிருந்து விலகிக் கொள்வேன்' என, குண்டை துாக்கி போட்டதும், சமரசம் பேசிய முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் ஆடிப்போய் விட்டனர்.
வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவருக்கு பின்னடைவு ஏற்படக் கூடாது என்பதால், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தகவல் தெரிவித்து, அவர் செலவு பொறுப்பை ஏற்ற பின், வேட்பாளர் சமரசமாகி உள்ளார்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து