தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப பா.ஜ.,வால் மட்டுமே முடியும்: மோடி

"ஊழல் தான் தி.மு.க., மற்றும் காங்கிரசின் ஒரே குறிக்கோள். 'ஊழல்வாதிகளை அகற்றுவோம், தண்டிப்போம்' என்கிறேன். 'ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம்' என அவர்கள் கூறுகிறார்கள்" என, பிரதமர் மோடி பேசினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:

கோவையில் உள்ள மருதமலை முருகனையும் கோனியம்மனையும் வணங்குகிறேன். இவ்வளவு அழகான தேயிலை தோட்டம் உள்ள பகுதிக்கு வந்தால் ஒரு டீக்கடைக்காரருக்கு சந்தோஷமாக இருக்காதா என்ன?

தமிழ்ப் புத்தாண்டை கொண்டாட இருக்கிறீர்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சியின்போது நீலகிரியில் இருந்து பா.ஜ., சார்பில் ஒருவரை தேர்வு செய்து அனுப்பினீர்கள்.

பரம்பரை கட்சிகள்



தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.,வின் ஆதிக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. தி.மு.க.,வுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் உத்வேகத்தை பா.ஜ.,வால் மட்டுமே கொடுக்க முடியும் என தமிழகமே சொல்கிறது.

தி.மு.க., காங்கிரஸ் ஆகிய வம்சாவளி பரம்பரைக் கட்சிகளுக்கு ஒரே குறிக்கோள் தான். எப்படியாவது பொய் சொல்லி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது தான். இவர்கள் வறுமையை ஒழிப்போம் என அடிக்கடி சொல்கிறார்கள். இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் ஏன் வறுமை நீங்கவில்லை?

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் செய்த வேலை, 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது தான். காங்கிரஸ், தி.மு.க.,வின் இண்டி கூட்டணி பல தலைமுறைகளாக ஆட்சியில உள்ளது.

இங்குள்ள கோடிக்கணக்கான ஏழைகள், பட்டியலின மக்கள் வீடும் மின்சாரமும் குடிக்க நீரும் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு இவை எல்லாம் கிடைத்துவிடக் கூடாது என்பது தான் இவர்களின் எண்ணம்.

இண்டி கூட்டணிக்கு சவால்



பா.ஜ., அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு வீடும் இலவசமாக ரேஷனும் கொடுத்தது. இதை வாங்கியவர்கள் எல்லாம் ஏழை எளிய மக்கள் தான். இந்தக் கட்சிகள், 'தங்களின் பேரன், பேத்திகள் ஆட்சிக்கு வரவேண்டும்' என நினைக்கின்றனர்.

பட்டியலின மக்களோ, ஏழை மக்களோ ஆட்சிக்கு வருவதை இவர்கள் விரும்புவதில்லை. பட்டியலின பெண்ணை ஜனாபதியாக கொண்டு வந்தது பா.ஜ., அதற்குக் கூட ஆதரவு தராமல் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனா தொற்று காலத்தில், 'இந்தியாவிலேயே மருந்து தயாரிப்போம்' எனக் கூறியதை எள்ளி நகையாடினார்கள். ஆனால், இந்தியாவிலேயே தயாரித்து இண்டி கூட்டணிக்கு சவால்விடுத்தோம். பல உலக நாடுகளுக்கும் மருந்து கொடுத்து கோடிக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இண்டி கூட்டணியினர் தொற்றுநோயை மட்டும் எள்ளி நகையாடவில்லை. 'இந்தியாவின் பொருளாதாமும் சீர்குலைந்துவிடும்' என ஆரூடம் சொன்னார்கள். ஆனால், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி நிதியை பா.ஜ., அரசு கொடுத்தது. அதனால் தான் கோவையில் ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன.

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தி.மு.க., அரசு மக்கள் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கிறது. ஜவுளி தொழிலை காப்பாற்றுவதற்குப் பதிலாக அதிகப்படியான மின் கட்டணத்தை உயர்த்தி நலிவடைய வைத்துள்ளது. இதனா ஏற்படும் இழப்பை மக்கள் மீது திணிக்கிறார்கள்.

தி.மு.க.,வின் சுயலாபம்



இன்று நம் நாடு 'மேக் இன் இந்தியா' என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முதலீடுகளை முடக்க நினைக்கிறது தி.மு.க., அரசு. இவர்கள் தங்களின் சுயலாபத்துக்காக அதிகபட்ச கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் மிகப் பெரிய வளர்ச்சியை அடையப் போகிறது. இதையெல்லாம் இண்டி கூட்டணி செய்யுமா.. யாராவது முதலீடு செய்ய வருவார்களா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யார் ஆட்சியாக இருந்தாலும் அம்மாநிலத்தின் உயர்வுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. வளர்ந்த இந்தியாவுக்கு வளரும் தமிழகம் தான் முக்கியம் என இந்த அரசு நினைக்கிறது. தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய்களை மத்திய அரசு கொடுத்துள்ளது.

கோவை உள்பட தமிழகத்தின் 2 முக்கிய நகரங்களில் மாதிரி தளவாட பட்டறை பூங்காங்களை தமிழகத்துக்கு கொடுத்துள்ளோம். 'வந்தே பாரத்' என்ற சிறப்பு வாய்ந்த ரயில்கள் கோவைக்கு வருகிறது. கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பாரபட்சம்... பிரிவினைவாதம்



காங்கிரசின் இண்டி கூட்டணி பாரபட்சம், பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் தி.மு.க., இதே விளையாட்டை தொடர்கிறது.

ஜல்ஜீவன் மிஷன் என வீடுகளைத் தேடி தண்ணீர் கொடுக்கிறோம். தமிழகத்திலும் கோடிக்கணக்கான இணைப்புகளை கொடுக்கிறோம். ஆனால், தி.மு.க.,வோ தங்கள் கட்சிக்காரர்களைத் தேடித் தேடி குடிநீர் இணைப்பை கொடுக்கிறது.

இன்றும் கோவையில் 15 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. தி.மு.க., வெறுப்பு அரசியலைத் தான் செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சியின் மீது அவர்களுக்கு கவனம் இல்லை. என்.டி.ஏ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் போது கோவை, நீலகிரியின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமாக செயல்படுவோம் என உறுதியளிக்கிறேன்.

தீவிரவாத தாக்குதல்



தி.மு.க.,வினரும் இண்டி கூட்டணியினரும் வெறுப்பு அரசியலைத் தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை. கோவையில் புனிதமான சங்கமேஸ்வரர் கோயிலில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய மாநில அரசு, அதற்குப் பதிலாக அந்த தீவிரவாதிகளை காப்பாற்றும் வேலைகளைச் செய்தது.

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டது. பிராண பிரதிஷ்டையை இண்டி கூட்டணி எதிர்த்தது. தமிழகத்தில் ராமர் தொடர்புடைய புண்ணிய தளங்களுக்கு சென்றேன். தி.மு.,க.,வுக்கு அதில் விருப்பமில்லை. 'சனாதனத்தை ஒழிப்போம்' என்கின்றனர்.

பார்லிமென்டில் தமிழகத்தின் செங்கோலை வைக்க முயன்றபோது, அதை தி.மு.க., புறக்கணித்தது. சுரண்டலுக்கும் ஊழலுக்கும் இன்னொரு பெயர் தான் தி.மு.க., இன்று மொபைல் சேவையில் 5ஜி என உலக சாதனை படைக்கிறோம். ஆனால், 2ஜியில் ஊழல் செய்து நாட்டையே தி.மு.க., அவமானப்படுத்தியது.

ஊழல் தான் தி.மு.க., மற்றும் காங்கிரசின் குறிக்கோள். 'ஊழல்வாதிகளை அகற்றுவோம், தண்டிப்போம்' என்கிறேன். 'ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம்' என அவர்கள் கூறுகிறார்கள்.

தி.மு.க.,வின் ஆணவம்



இண்டி கூட்டணியினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு முக்கிய உதாரணம் சொல்கிறேன். காங்கிரசும் தி.மு..க.,வும் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்ததைப் பற்றிய அரசு ஆவணம் சமீபத்தில் வெளியானது.

இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கான விலையை தமிழக மீனவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பாவங்களுக்கு மக்களாகிய நீங்கள் தான் அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்.

தி.மு.க., எப்போதும் அதிகார ஆணவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை பற்றி தி.மு.க., தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, 'யார் இந்த அண்ணாமலை?' என்கிறார். அந்தளவுக்கு ஆணவம் அவர்களின் கண்களை மறைக்கிறது. அதை தமிழகம் என்றும் அனுமதிக்காது.

தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரானது அந்த ஆணவம். ஒரு முன்னாள் காவல் அதிகாரி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைத் தெரியவில்லையாம். இது தான் அவர்களின் குணம். குடும்ப அரசியல் செய்து வருகிறவர்களுக்கு ஓர் இளைஞன் நேர்மையாக அரசியல் செய்ய வருவதே பிடிக்கவில்லை என்பது தான் இதன் கருத்து.

'மோடியை பாரதத்தை விட்டு வெளியேற்றும் தேர்தல்' என்கிறார். அவருக்கும் அவர் கட்சிக்கும் ஒன்றை சொல்கிறேன். ஊழலை இந்தியாவை விட்டே அகற்றும் தேர்தல் இது. உங்கள் வம்சாவளி அரசியலையும் போதைப்பொருள் கடத்தலையும் தேசியத்துக்கு எதிரான கொள்கை விரேதப் போக்குகளையும் விரட்டும் தேர்தல் இது.

அண்ணாமலையும் முருகனும் உங்கள் குரலை நேரடியாக டில்லியில் வந்து என்னிடம் எதிரொலிப்பார்கள். பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய பாதையை திறக்கப் போகிறது. இது மோடியின் உத்தரவாதம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Jayaraman Ramaswamy - Chennai, இந்தியா
12-ஏப்-2024 13:02 Report Abuse
Jayaraman Ramaswamy சரியாக சொல்லப்பட்ட செய்தி?????
Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
11-ஏப்-2024 06:48 Report Abuse
Kasimani Baskaran சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்லும் திமுகவை முழுவதுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.
J.V. Iyer - Singapore, சிங்கப்பூர்
11-ஏப்-2024 06:17 Report Abuse
J.V. Iyer முதலில் வீட்டிற்கு, பிறகு சிறைக்கு.
Sivagiri - chennai, இந்தியா
10-ஏப்-2024 16:45 Report Abuse
Sivagiri முடியுமா ? டவுட்டுதான் , எம்ஜியார் , ஜெயலலிதா , செய்ய முடிந்தது , உங்களால் முடியுமா ? ஆனால் அவர்கள் செய்யத் தவறியது , தீயமுக-வை கூண்டோடு அழிக்காமல் விட்டது - தமிழன் டில்லி சுல்தான்களை எப்போதும் நம்பியது கிடையாது - ஆனால் காங்கிரஸின் பழைய அரசியல் தந்திரத்தை முயற்சி செய்யலாம் - இங்கே புதிதாக ஒரு தமிழனை பிஜேபி-யின் பினாமியாக கட்சி ஆரம்பிக்க வைத்து - மறைமுகமாக ஆதரவளித்து - மற்றும் தமிழ்நாட்டு இதர கட்சிகளையும் ஆதரவளிக்க வைத்து , அரசியல் நாடகம் நடத்தி - அதோடு ஐடி - ஈ.டி, சிபிஐ, என்எஸ்ஏ , மூலமாகவும் , மிக எளிதாக தீயமுக-வை கூண்டோடு ஒழிக்கலாம் -
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்