காங்., மாஜி எம்.பி.,யின் ஒருநாள் வீராப்பு
திருநெல்வேலி தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன், 2009 --- 2014ல் எம்.பி.,யாக இருந்தவர் எஸ்.எஸ்.ராமசுப்பு.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர். ஆலங்குளம் சட்டசபை தொகுதி தற்போதும் திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் உள்ளது.
இவர் எம்.பி.,யாக இருந்தபோது லோக்சபாவில் அதிகளவில் கேள்வி கேட்டு, விவாதங்களில் பங்கேற்றதற்காக பாராட்டப்பட்டவர். இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் இவர் பெயரும் பட்டியலில் இருந்தது. கடைசி நேரத்தில் குமரி மாவட்டம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துவரான ராபர்ட் புரூஸுக்கு ஒதுக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் எஸ்.எஸ்.ராமசுப்பு வேட்பு மனு தாக்கல் செய்தார். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு கட்சியின் அங்கீகார கடிதம் தராவிட்டால் வேட்பு மனு தள்ளுபடி ஆகிவிடும் என்பதால், நேற்று காலை அவராகவே முன்வந்து மனுவை வாபஸ் பெறப் போவதாக கூறினார்.
அவர் வேட்பு மனுவை இன்று தான் வாபஸ் பெற முடியும். ஆனால், நேற்றே மனு தள்ளுபடி ஆகிவிட்டது.
எம்.பி.,யாக சிறப்பாகச் செயல்பட்டதாகவும், 'சீட்' கிடைக்கும் என அகில இந்திய தலைவர்கள் உறுதி அளித்ததாகவும், சீட் கிடைக்காததால் ஆதங்கத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், கட்சிக்கு எதிராக போட்டியிடவில்லை என்றும், பிரசாரத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் வீராவேசமாக, 'நான் தான் ஒரிஜினல் காங்கிரஸ்' என தெரிவித்தார். பாவம், அவரது வீராப்பு ஒரே நாளில் முடிந்து விட்டது.
காங்கிரசில் ஏதாவது ஒரு கோஷ்டியில் இருந்து கொண்டே இருந்தால் தான் சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவர் எந்த கோஷ்டியிலும் இல்லை என்கின்றனர் கட்சியினர்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே பிரமாண்டமான பங்களா கட்டி வைத்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக திருநெல்வேலி பக்கமே அரசியலில் தலை காட்டாத ராமசுப்புவிற்கு யார் சீட்டு தருவர் என்றார், கோஷ்டி சேராத காங்., தொண்டர் ஒருவர்.
வாசகர் கருத்து