Advertisement

மத்திய அரசு திட்டங்கள் வரவே தேர்தலில் போட்டியிடுகிறேன்: நயினார் நாகேந்திரன் சிறப்பு பேட்டி

'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை... இது ஊரறிந்த உண்மை... நான் செல்லுகின்ற பாதை... பேரறிஞர் காட்டும் பாதை...' என, எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவங்குவதற்கு முன்னரே, 1968ல் புதிய பூமி படத்திற்காக பாடிய பாடலை, பா.ஜ., மாநில துணைத் தலைவரான பிறகும், தற்போதும் தன் அலைபேசியின் காலர் டியூனாக வைத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். அ.தி.மு.க., கூட்டணியில் 2021ல் திருநெல்வேலி சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.எல்.ஏ.,வாக இருந்து கொண்டே திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறீர்கள்; ஏன் எம்.பி.,க்கும் போட்டியிடுகிறீர்கள்? வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் மூலம் வீண் செலவுதானே?



கடந்த 1990களில் நான் அரசியலுக்கு வந்தபோது முதன்முதலில் எம்.பி.,யாகத்தான் ஆசைப்பட்டேன். 1998, 99ல் அந்த வாய்ப்புகள் வராமல் போயின. 2001ல் எம்.எல்.ஏ., ஆகி அமைச்சரானேன். அதன் பிறகு சட்டசபையில் தொடர்ந்தேன். தற்போது பா.ஜ.,வில் வந்த பிறகு, மீண்டும் லோக்சபா செல்ல உள்ளேன்.

இடைத்தேர்தல் வந்தால் அதை வீண் செலவு என்று கூற முடியாது. இப்போது திருநெல்வேலியில் ஒரு சட்டசபை தொகுதிக்கு மட்டும் பணியாற்றுகிறேன். இனி என் சொந்த ஊரான ராதாபுரம் சட்டசபை மற்றும் நாங்குநேரி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, ஆலங்குளம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், மத்திய அரசின் ஆளுங்கட்சி எம்.பி.,யாக நிறைய திட்டங்களை கொண்டு வர முடியும். எனவே, மாவட்டம் முழுதும் திட்டங்களை கொண்டு வருவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக திருநெல்வேலி சட்டசபை தொகுதிக்கு ஆற்றிய பணிகள் என்ன?



மானுார் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொண்டு உள்ளோம். அலவந்தான் குளம் பாலம், தெற்குபட்டி வடக்கூர் பாலம் உட்பட பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன; குளங்கள் துார்வாரப்பட்டுள்ளன. மானுாரில் அரசு கல்லுாரி கொண்டு வந்தேன்.

முந்தைய சாதனையாக வ.உ.சி., மணிமண்டபம், கங்கைகொண்டானில் தொழில்நுட்ப பூங்கா தி.மு.க., ஆட்சியில் என்றாலும், அங்கு டயர் கம்பெனி உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் வர, தயக்கமின்றி நான் முயற்சி எடுத்துள்ளேன்.

தற்போது திருநெல்வேலி எம்.பி., தொகுதிக்கு நீங்கள் தரும் வாக்குறுதிகள் என்னென்ன?



நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் தொழில் பூங்காவில் இன்னும் தொழிற்சாலைகள் முழுமையாக வரவில்லை. அங்கு புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தி, மாவட்டம் முழுதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவேன்.

தாமிரபரணி ஆற்றின் இருமருங்கிலும் மதுரை வைகை ஆற்றைப் போல சுவர் எழுப்பி, சாலை வசதிகள் ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைப்பேன். தாமிரபரணி ஆற்றை துார்வார நடவடிக்கை எடுப்பேன். திருநெல்வேலி சிட்டி பயன் பெறும் வகையில் சுற்றுவட்ட சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக கோரிக்கைகளுக்காக வாதாடாமல், நீங்கள் ஆளுங்கட்சியோடு அனுசரணையோடு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளதே?



சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், துவக்க காலத்தில் ஒரு மரபுக்காக ஆதரித்து பேசி இருப்பேன். மத்திய அரசினுடைய பாலிசி, கட்சியின் கொள்கைக்கு ஏற்பவே பேசியிருக்கிறேன். மற்றபடி பொதுமக்கள் பிரச்னையில் பலமாகவே பேசி இருக்கிறேன். தேவைப்பட்டால் வெளிநடப்பும் செய்து இருக்கிறேன்.

2009ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் திருநெல்வேலியில் குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம், தச்சநல்லுார் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் அடிக்கல் நாட்டினார். தச்சநல்லுார் ரயில்வே மேம்பாலம் இரண்டு ஆண்டுகளில் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விட்டது. குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அருகில் உங்கள் உறவினரின் வணிக வளாகம் இருப்பதால், அந்த மேம்பாலம் வரவிடாமல் நீங்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளதே?

எனக்கு அங்கு காம்ப்ளக்ஸ் எதுவும் இல்லை. மைத்துனருக்கு ஒரு சிறிய கடை தானே இருக்கிறது? அதனால் நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. வரும் காலத்தில் குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு முக்கியத்துவம் தந்து, அதை மக்கள் எதிர்பார்க்கும் வகையில் சிறப்பாக செயல்படுத்துவேன்.

பா.ஜ.,விற்கு ஆதரவாக அமலாக்கத்துறை, வருமான வரி துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது திருநெல்வேலியில் தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன், அ.தி.மு.க., கான்ட்ராக்டர் ஆர்.எஸ்.முருகன் வீடு, அலுவலகங்களில் மட்டும் வருமான வரி துறை சோதனை மேற்கொள்வது என்பது பா.ஜ.,விற்கு சாதகமாக மேற்கொள்ளப்படுகிறதா?

இப்போது ரெய்டு நடக்கிறதா... எனக்கு தெரியவில்லையே. நான் தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறேன். அ.தி.மு.க., ஆர்.எஸ்.முருகன் என் உறவினர். வருமான வரி துறை அமலாக்கத் துறை சோதனைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

இதுவரை நீங்கள் அ.தி.மு.க., சார்பிலும், கடந்த முறை அ.தி.மு.க., கூட்டணியிலும் வெற்றி பெற்றுள்ளீர்கள். தற்போது மூன்று அணிகளாக உள்ளதே, உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாதா?



கடந்த 25 ஆண்டுகளாக திருநெல்வேலியில் அரசியல் செய்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளில் பா.ஜ., நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமரின் செயல்பாடுகள் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெயர் கிடைத்துள்ளது. தமிழகத்திலும் மத்திய அரசின் திட்டங்கள் தான் பெரும்பான்மையாக செயல்படுத்தப்படுகின்றன.

துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகள், குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக, தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பிரதமர் மோடி துணை புரிந்துள்ளார்.

மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை மூலமும் இளைஞர்களிடையே பா.ஜ., வளர்ந்துள்ளது; எழுச்சி பெற்றுள்ளது. எனவே, பா.ஜ.,வின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. தமிழகத்திலும் வீடுகள் திட்டம், வீடுதோறும் குடிநீர் திட்டம், கடன் திட்டங்கள் ஆகிய பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் வாயிலாகவே செயல்படுத்தப் படுகின்றன.

திருநெல்வேலி தொகுதியில் பெரும்பான்மை ஜாதி சமூகத்தினரே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் நீங்கள் களம் காண்பது எவ்வாறு இருக்கும்?



திருநெல்வேலி மக்கள் ஜாதி ரீதியாக பார்த்து ஓட்டளிக்க மாட்டார்கள். ஏனெனில், 2001ல் இருந்து திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வருகிறேன். தோல்வியுற்ற தேர்தல்களில் மிகவும் சொற்ப ஓட்டுகளில் தோல்வி அடைந்துள்ளேன். கடந்த முறை, 90,000 ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்துள்ளேன்.

திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நான் சார்ந்த சமூகத்தினர் மூன்றாவது, நான்காவது இடத்தில் தான் உள்ளனர். சைவ வேளாளர் சமூகத்தினர் என்னை பெரும்பான்மையாக ஆதரித்து ஓட்டளித்துள்ளனர். ஜாதி பிரச்னைகள் தனிப்பட்ட காரணங்களால் தான் எழுகின்றன. நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன். மாவட்டம் முழுதும் என்னை ஒரு பொது வேட்பாளராகத்தான் கருதுகின்றனர்.

திருநெல்வேலி, துாத்துக்குடியில் 2023 டிசம்பர் பெருவெள்ள சேதத்தை நீங்களும் பார்த்தீர்கள். துாத்துக்குடியில் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு மேலிட குழு பார்வையிட்டும், இன்னமும் நிதி வழங்கவில்லையே?



ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரிடருக்கு ஏற்ப மத்திய அரசு நிதி வழங்குகிறது. தமிழகத்திற்கும் கடந்த ஆண்டு பேரிடர் நிதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால், அதை தமிழக அரசும், அமைச்சர்களும் கையாண்ட விதமும், செலவு செய்த கணக்கு புள்ளிவிபரங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. முறையாக செலவழிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் தேவையான நிதி வழங்கப்படும்.

அ.தி.மு.க., உங்கள் கூட்டணியில் இல்லை. இருப்பினும் எம்.ஜி.ஆர்., பாடலை காலர் டியூனாக வைத்துள்ளீர்கள். போஸ்டர்களில் ஜெ., படம் போட்டு உள்ளீர்கள். இது குழப்பத்தை ஏற்படுத்தாதா?



நான் தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர்., ரசிகன். அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவங்கும் முன்பே பல பாடல்களை பாடியுள்ளார். அந்தப் பாடல்களை தான் தற்போது பயன்படுத்துகிறோம். காலமான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சர்வதேச தலைவர்கள். அவர்கள் பெயரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்