Advertisement

கச்சத்தீவை மீட்கும் தகுதி அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உண்டு: பழனிசாமி

"தமிழகத்தில் 3 பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையில் தான் போட்டி. ஒரு கட்சி தேர்தலில் நிற்பதற்காக போட்டியிடுகிறது" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் 3 பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. 2 கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி. ஒரு கட்சி தேர்தலில் நிற்பதற்காக போட்டியிடுகிறது.

சிலர், கட்சியை குடும்பத்துக்காக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக கட்சி நடத்துவது அ.தி.மு.க., மட்டும் தான். இது தான் இரண்டு கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம். ஏதோதோ பேசி கொல்லைப்புறம் வழியாக ஆட்சியில் வந்து உட்கார்ந்துவிட்டார்கள்.

எதில் எல்லாம் வருமானம் வருமோ அந்த திட்டங்களை மட்டுமே செயல்படுத்துகிறார்கள். காவிரி-குண்டாறு திட்டத்தை நான் கொண்டு வந்தேன். ஆனால், அதை தி.மு.க., அரசு முடக்கிவிட்டது. நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த திட்டம் நிறைவேறியிருக்கும். இவர்களா மக்களுக்கு நன்மை செய்வார்கள்?

அ.தி.மு.க., வெற்றி பெற்றால் தான் இந்த திட்டம் தொடரும். ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் இந்த திட்டத்தை முடக்கியுள்ளனர். ஓர் அரசாங்கம் மாறி வந்தால் நல்ல திட்டங்களாக இருந்தால் அதை செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் பதில் கொடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. நமது மீனவர்களின் மீன்களை கடலில் கொட்டி கஷ்டத்துக்கு ஆளாக்குகிறார்கள். இந்தநிலை மாற வேண்டும் என்றால் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்.

அதற்காக 2008ல் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கச்சத்தீவை நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாமல் கொடுத்துவிட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

2011ல் வருவாய் ஆவணங்களில் கச்சத்தீவு நிலப்பகுதி ராமநாதபுரம் சமஸ்தானத்தின்கீழ் வருவதால் வருவாய்த்துறையையும் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த உடன், 'கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்' என ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

பின், நேரடியாக மோடியை சந்தித்து மீனவர்களின் கோரிக்கையை பேசினார். ஆனால், இந்த பிரச்னையை 10 ஆண்டுகாலம் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது மீனவர்களின் வாக்கு தேவை என்பதால் கச்சத்தீவை ஒரு பிரச்னையாக எடுத்துக் கொண்டு பேசி வருகிறார்கள்.

அதை மீட்பதற்கு அ.தி.மு.க.,வுக்கு மட்டும் தான் தகுதியுள்ளது. துவக்கத்தில் இருந்து இன்று வரையில் கச்சத்தீவுக்காக போராடி வருகிறோம். தி.மு.க.,வும் காங்கிரசும் கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்த கட்சிகள். இப்போது இதை பா.ஜ., கையில் எடுத்துள்ளது.

இனியாவது நாங்கள் தொடுத்த வழக்குக்கு பதில் மனுவை பா.ஜ., போடட்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறட்டும்.

ஸ்பெயின், துபாய்க்கு ஸ்டாலின் பயணம் சென்றார். அங்கு சென்றது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல. 30,000 கோடி ரூபாய்களை முதலீடு செய்யப் போனதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். ஸ்பெயின் நாடே நலிவடைந்துள்ளது. அவர்கள் எங்கே ஒப்பந்தம் போடப் போகிறார்கள்?

இதனால் தான் இந்த 30,000 கோடியும் எங்கே எல்லாம் போகிறது என்ற சந்தேகம் எழுகிறது. 2026ல் அ.தி.மு.க., அரசு அமையும் போது இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்