Advertisement

தேர்தல் வந்தால் மக்கள் மீது மோடிக்கு கருணை சுரக்கும்: ஸ்டாலின்

"இண்டியா கூட்டணியைப் பார்த்து பயந்துபோய் இந்தியா முழுவதும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்" என, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் வாழும் ஏதாவது ஒரு குடும்பம் நேரடியாக பயன்பெறும் வகையில் தமிழக அரசால் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவை சாப்பிடுகின்றனர்.

மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு விலையில்லாத பேருந்து கட்டணம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி திட்டம் என மகளிருக்கு பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

சட்டமன்ற தேர்தலின்போது சொன்னதை நிறைவேற்றிவிட்டு உங்கள் முன் நிற்கிறேன். தி.மு.க.,வின் அடிப்படை கொள்கை சமுக நீதி. அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தம் உருவானதற்குக் காரணம், காரணம் தி.மு.க. ஆனால், சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கட்சியாக பா.ஜ., உள்ளது.

பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்குவதில்லை. இதை பார்லிமென்ட்டில் புள்ளிவிபரத்துடன் ராகுல் எடுத்துக் கூறினார்.

நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூக மக்களுக்கு செய்யும் அநீதி இல்லையா. ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை காலம் காலமாக தடுத்தவர்கள், இப்போதும் தடுக்கிறார்கள்.

குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மத்திய அரசுப் பணிகளில் தமிழ் மொழியை புறக்கணிப்பது, இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என நமது பிள்ளைகளின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டவர்களை பா.ஜ., மேலும் ஒடுக்கப் பார்க்கிறது. இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என சொல்கிறோம். வரலாறு காணாத ஊழலை செய்துவிட்டு அதனை மூடி மறைக்க அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.,ஐ., உள்ளிட்ட அமைப்புகளை கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டனர்.

நாட்டின் தன்னாட்சி அமைப்புகளைக் கூட தங்களின் ஆதரவு கட்சிகள் போல் செயல்பட வைத்து, அரசியல் சட்டப்படி தான் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை உருவாக்கிவிட்டனர்.

பா.ஜ., ஆட்சியில் இந்திய மக்களுக்கு நடந்த நன்மைகள் என ஏதாவது ஒன்று இருக்கிறதா? சமூக நீதி, சம தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் மத்தியில் இண்டியா கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும்.

தமிழகத்திற்கும், தமிழனுக்கும் துரோகம் செய்வதையே மோடி தனது வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், வாக்கு கேட்டு மட்டும் தமிழகம் வருகிறார்.

பிரதமர் ஆவதற்கு முன் தமிழகம் வந்த மோடி, பல வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஆனால், அவர் அதை செயல்படுத்தவில்லை. 2014 ராமநாதபுரத்தில் பேசிய மோடி, 'சீனாவில் இருந்து பட்டாசுகள் வருவதால் குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசி நலிவடைந்துவிட்டது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழிலாளர்களை பாதுகாப்போம்' என்றார்.

சீனப் பட்டாசுகள் இன்றும் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. டில்லி, மும்பையில் பல கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மோடி அரசால் சீன பட்டாசுகளை முழுதும் தடுக்க முடியவில்லை.

இதனால், சிவகாசியில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசு தயாரிப்பு சரிவை சந்தித்தது. ஜி.எஸ்.டி., பட்டியலில் பட்டாசையும் சேர்த்து 28 சதவீதம் வரி போட்ட கட்சி தான் பா.ஜ., அதை 12 சதவீதமாக குறைக்கவேண்டும் என பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர்.

பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால் பசுமை பட்டாசு பற்றி மத்திய அரசு இதுவரை எந்த வரையறையும் கொடுக்கவில்லை. பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க ஆலைகள் காத்திருக்கின்றன. ஆனால், மத்திய அரசு முன் வரவில்லை.

10 ஆண்டுகளில் பா.ஜ., நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது. இதை மீட்பதற்கான வழி தான் இந்த லோக்சபா தேர்தல். இண்டியா கூட்டணியைப் பார்த்து பயந்துபோய் இந்தியா முழுவதும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் வந்துவிட்டாலே மக்கள் மீது மோடிக்கு கருணை சுரக்கும். இப்போது சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார். விலையை ஏற்றியது மோடி தான். ஆனால், விலையேற்றத்திற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாதவர் போல் இருப்பார்.

தேர்தலுக்கு மட்டும் கருனை சுரக்கும் வித்தியாசமான உள்ளம் கொண்டவர், மோடி. தேர்தலுக்கு மட்டும விலை குறைப்பது பச்சோந்தி அரசியல் இல்லையா. 410 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏற்றியது தான் பா.ஜ., அரசின் சாதனை. விலை குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற மோடி நடத்தும் நாடகம்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்