மோடியின் தூக்கம் கலைந்தது ஏன்: ஸ்டாலின் சொன்ன ரகசிய தகவல்
"நோட்டாவைவிட கீழே போய்விடாமல் டெபாசிட்டாவது பெற வேண்டும் என்ற முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டு வருகிறது. இதனால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மோடி புகழ்கிறார்" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சேலத்தில் தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தி.மு.க., எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு பா.ஜ., எடுத்துக்காட்டு.
சில நாட்களுக்கு முன் சேலத்துக்கு வந்த பிரதமர் மோடி, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் ஆதரவைக் கண்டு தி.மு.க.,விற்கு துாக்கம் தொலைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியால், சாமானிய மக்கள், மகளிர், இளைஞர்கள், சிறுகுறு வியாபாரிகள், விவசாயிகள், சிறுபான்மை சமூக மக்கள் எனப் பலரும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டனர்.
தேர்தல் பத்திர ஊழலால் மோடியின் தூக்கம் தொலைந்துவிட்டது. மத்திய உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் தென்மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற முடியாத நிலை இருந்தது, தேர்தல் பத்திரம் வெளிவந்த பிறகு வடமாநிலங்களிலும் பா.ஜ., வெற்றி பெறாது எனத் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் ஜார்க்கண்ட முதல்வர், டில்லி முதல்வர் என அமலாக்கத்துறையை வைத்து கைது செய்கிறார். காங்கிரஸ், இ.கம்யூ., கட்சிகளுக்கு அபராதம் கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எதிர்க்கட்சிகள் பேசினால் ரெய்டு நடக்கிறது. பத்திரிகைகள் விமர்சித்தாலும் பதில் இல்லை.
ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டின் ஜனநாயகத்தை சீரழித்து வருகிறார் மோடி. தமிழகத்தில் பா.ஜ., பரிதாபமாக இருக்கிறது. 'பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்' என்பதைப் போல வேட்பாளர்கள் கிடைக்காததால் கவர்னர், சிட்டிங் எம் எல்.ஏ.,க்களை எல்லாம் தேர்தலில் நிற்க வைக்கின்றனர்.
பா.ஜ., நோட்டாவைவிட கீழே போய்விடாமல் டெபாசிட்டை இழக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தான் மோடி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்கிறார். ஏன் ஜெயலலிதா மீது மோடிக்கு திடீர் பாசம் பொங்கி வழகிறது?
ஜெயலலிதா இருந்தவரையில், அவரை மோடி புகழ்ந்தது உண்டா. நாட்டிலேயே அதிகளவு ஊழல் நடக்கும் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி எனக் கூறியது நினைவில் இல்லையா?
தமிழகத்தில் உள்கட்டமைப்பு சீர்கெட்டதற்கு காரணம் ஜெயலலிதா எனக் கூறியவர் தான் மோடி. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நிர்பய்யா திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் விட்டது, பா.ஜ., அரசு.
பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, மல்யுத்த வீராங்கனைகள் போராடியது இவர்கள் ஆட்சியில் தான். மணிப்பூரில் பெண்கள் போராடியபோது, இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது, பா.ஜ., ஆட்சியில் தான்.
உ.பி.,யில் வேலை கேட்டுச் சென்ற பெண்னை பா.ஜ., எம்.எல்.ஏ., மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் இவர்களின் ஆட்சியில் தான். இந்த நிலையில், பெண் சக்தி பற்றிப் பேசுவதற்கு பா.ஜ.,வுக்கு தகுதி உள்ளதா?
தமிழகம் ஏற்கனவே புண்ணிய பூமியாகத் தான் இருக்கிறது. இங்கு சமத்துவமாக வாழ்கிறோம். அமைதியாக வாழும் மக்களை பிரித்து குளிர்காய நினைக்கிறது, பா.ஜ.,
100 தேர்தல் நடந்தாலும் உங்கள் நாடகம் தமிழகத்தில் எடுபடாது. நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.,வை ஆதரிக்கும் மண்ணாக தமிழகம் மாறப் போவதில்லை.
பா.ஜ.,வுடன் ராமதாஸ் ஏன் சேர்ந்தார் என்பது உங்களுக்கும் தெரியும், அவர் கட்சியினருக்கும் தெரியும். பா.ம.க., கடந்த மூன்று தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது, வேளான் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை ஆதரித்து வாக்களித்தது.
தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என பேசியிருக்கும் மோடி. அகில இந்திய வானொலி என்ற பெயரை. ஆகாசவாணி என இந்தியில் உள்ளதை ஏன் மாற்றவில்லை?
இந்தி திணிப்புக்கான வேலையை பார்த்துவிட்டு தமிழ் மொழி மீது பாசம் இருப்பதாக கண்ணீர் வடிக்கிறார் , அவருடைய கண்ணீரை அவரின் கண்களே நம்பப் போவதில்லை.
என்னிடம் பா.ஜ., ரவுடிகளின் பெயர்ப் பட்டியல் உள்ளது. அதில், 32 பக்க பட்டியலில் 261 பேர் இருக்கின்றனர். இது தவறு என்றால் என் மீது வழக்கு போடட்டும். இந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் பா.ஜ., வில் உள்ளனர்
போதைப் பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தடையாக இல்லை. இதை வைத்து தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக மோடி பிரசாரம் செய்வது அவருக்கு அழகல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து