போலீஸ் பார்முலா: பா.ஜ.,வில் அன்றாடம் 'பரேடு'
பா.ஜ.,வேட்பாளர் அண்ணாமலை அன்றாடம் அதிகாலை, 5:30 மணிக்கு எழுந்து, 6:00 மணிக்கு உதவியாளர்களை சந்திக்கிறார். அதன்பின், என்னென்ன பணிகள் என்று பட்டியலை சரிபார்க்கிறார்.
காலை 6:30க்கு காத்திருக்கும் கட்சி நிர்வாகிகளோடு, பிரசாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு 7:00 மணிக்கு சென்று விடுகிறார். மிக சரியாக பிரசாரத்தை துவக்கி விடுகிறார்.
கட்சி தொண்டர்களோடு பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலை, இரவு 10:00 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதே பகுதியில் கட்சி தொண்டர்களோடு உணவு எடுத்துக்கொள்கிறார்.
அதன்பின், கோவையிலுள்ள தன் தற்காலிக தங்குமிடத்திற்கு வருகிறார்.
அங்கு பா.ஜ.,அமைப்பு ரீதியாக உள்ள நிர்வாகிகளை வரவழைக்கிறார். இன்று மேற்கொண்ட பணி என்ன, எப்படியெல்லாம் பணிகள் நடந்தன; அதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது; நாளை மேற்கொள்ளபோகும் பணி என்ன, எப்படியெல்லாம் பணி மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளர்களிடம் எப்படியெல்லாம் நம்பிக்கை அளிக்க வேண்டும். நாம் இன்று மேற்கொள்ளாத பணிகள் என்ன, நாளை செய்ய வேண்டிய பணிகள் என்ன, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இன்று பா.ஜ., பற்றி என்ன பேசியது; நாளை நாம் பேச வேண்டியது என்ன; அதற்கான தகவல்கள் இதோ என்று அவரே விளக்குகிறார்.
தொடர்ந்து பா.ஜ.,வில் அங்கம் வகிக்கும் மற்ற அமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசுகிறார். மாநகர், மாவட்டம், கிளை என்று பாரபட்சம் இன்றி அனைவரும் என்னென்ன செய்ய வேண்டும் என்று புள்ளி விபரமாக, அவருக்கே உரிய பாணியில் பேசுகிறார்.
இப்படி பேசி நள்ளிரவு 1:00 மணியாகி விடுகிறது. அனைவரும் கலைந்து சென்று விட்டு. நான்கு மணி நேர துாக்கத்துக்கு பின், மீண்டும் அதிகாலை அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பிரசாரத்தில் கடைசி வரை உடனிருக்கின்றனர்.
பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அண்ணாமலைக்கு இது ஒன்றும் புதிதல்ல; பேசுகிறார், பேசுகிறார், பிரசாரத்தில் பேசிக்கிட்டே இருக்கிறார். இடையிடையே குளிர்ந்த தண்ணீர் மட்டும் பருகுகிறார். மீண்டும் இரவு எங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். எங்களிடம் கேள்வி கேட்டு பதிலை வரவழைத்து மீண்டும் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். ஒரு உயர் போலீஸ் அதிகாரி, எப்படி சக அதிகாரிகளிடம் நடந்து கொள்வாரோ அதே போன்று எங்களை பரேடு எடுக்கிறார். அதனால், பணிகள் வேகமாக நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து