Advertisement

பா.ம.க., நிர்வாகிகள் தர்மபுரிக்கு படையெடுப்பு :பா.ஜ., கூட்டணியில் புதிய சிக்கல்

சவுமியா அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதிக்கு பா.ம.க., நிர்வாகிகள் செல்வதால், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடுகிறது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் எட்டு லோக்சபா தொகுதிகளில் பா.ம.க.,வுக்கு குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி உள்ளது. இதனால், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் அக்கட்சியை நம்பியுள்ளனர். பா.ம.க., நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன், அவர்களை தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடவும் அழைப்பு விடுக்கின்றனர்.

தர்மபுரி தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். இதனால், தமிழகம் முழுதும் உள்ள பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள், தேர்தல் பணியாற்ற தருமபுரிக்கு படையெடுக்கின்றனர்.

இதனால், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் மட்டுமல்லாது, தர்மபுரி தவிர மற்ற ஒன்பது தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரிக்கு செல்லும் பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களை எப்படி தடுப்பது, இதுபற்றி யாரிடம் புகார் செல்வது என தெரியாமல் அக்கட்சி வேட்பாளர்கள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

இதேநிலை கூட்டணியில் உள்ள பா.ஜ. - த.மா.கா., வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார், ஈரோடு தொகுதியில் போட்டியிடும் த.மா.கா., வேட்பாளர்களும், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களும் பா.ம.க.,வினர் தருமபுரிக்கு சென்று விடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை சந்தித்து தொகுதியில் பணியாற்றுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பச்சானா? மச்சானா?



கடலுார் தொகுதியில் போட்டியிடும் தனது மைத்துனரால், பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியாவின் உடன்பிறந்த சகோதரர் விஷ்ணு பிரசாத். இவர் கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க, வேட்பாளராக இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க அன்புமணி மற்றும் விஷ்ணுபிரசாத் இணைந்து ரகசிய பேச்சில் ஈடுபட்டனர். கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், திடீரென அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., கூட்டணி அமைத்தது. அன்பு மணி மீது விஷ்ணுபிரசாத் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால், குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடலுார் தொகுதியில் விஷ்ணுபிரசாத் போட்டியிடுவதால், மச்சான் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதா, அல்லது சொந்த கட்சி வேட்பாளர் தங்கர் பச்சான் வெற்றிபெற வியூகம் வகுப்பதா என்ற குழப்பத்தில் அன்புமணி ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்