பா.ஜ., கூட்டணியில் பயணிப்பது உறுதி: சந்திரபாபு நாயுடு 'நச்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமராவதி: ''பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்று (ஜூன் 5) மாலை நடைபெற உள்ள கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்'' என ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9ல் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், லோக்சபா தேர்தலில் 16 தொகுதிகளில் வாகை சூடியிருந்தது. இதனால் அவரது ஆதரவை எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி பெற திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே இன்று (ஜூன் 5) மாலை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ) கூட்டத்தில் பங்கேற்க சந்திரபாபு நாயுடு டில்லி செல்ல உள்ளார்.
டில்லி புறப்படுவதற்கு முன்னர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. இந்த வெற்றி மக்களுக்கான வெற்றி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பெருமளவு பிரச்னைகளை சந்தித்தனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லிக்கு செல்ல இருக்கிறேன்.
சிறந்த தேர்தல்
என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை நான் கண்டதில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றினோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கைகள்
அவர் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிப்பதை சந்திரபாபு நாயுடு உறுதிப்படுத்தியது, இண்டியா கூட்டணியினரின் கனவு தகர்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, சபாநாயகர் பதவி, அமைச்சரவையில் இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை தெலுங்கு தேசம் கட்சி முன்வைக்கும் எனக் கூறப்படுகிறது.
பா.ஜ., தலைமையிலான என்.டி.ஏ கூட்டமும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டமும் இன்று மாலை டில்லியில் நடைபெறுகிறது. இரு கூட்டணிகளும் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர். இதில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டுமெனில், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு முக்கிய தேவையாக உள்ளது. ஆனால், சந்திரபாபு என்.டி.ஏ.,வில் பயணிப்பதை உறுதிசெய்தார்.
நிதீஷ்குமாரை தங்கள் வசம் இழுக்க எதிர்க்கட்சிகள் வலை விரித்துள்ளன. அப்படியிருக்கும் சூழலில் இன்று என்.டி.ஏ.,வில் இடம்பெற்ற நிதீஷ்குமாரும், இண்டியா கூட்டணியில் இடம்பெற்ற தேஜஸ்வி யாதவ்வும் ஒரே விமானத்தில் டில்லி புறப்பட்டனர். பரபரப்பான அரசியல் சூழலில் இரு கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரே விமானத்தில் பயணித்ததால், இருவரும் சந்தித்து பேசிக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து