பணப்பட்டுவாடா செய்வதில் பாரபட்சம் :அ.தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தி
சேலம் தொகுதியில் இடைப்பாடி, ஓமலுார், வீரபாண்டி, சேலம் மேற்கு, தெற்கு, வடக்கு என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் அனைத்திலும், தி.மு.க., ஓட்டுக்கு தலா, 500 ரூபாய் என பாரபட்சம் இன்றி வழங்கி வருகிறது.
ஆனால், அ.தி.மு.க.,விலோ, இடைப்பாடி, ஓமலுார், வீரபாண்டி ஆகிய தொகுதிகளில், ஓட்டுக்கு 500 ரூபாய் என, 70 சதவீதமும், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் 100 சதவீதமும் வினியோகிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில், ஓட்டுக்கு தலா, 250 ரூபாய் வீதம், 70 சதவீதம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்ச வினியோகம் குறித்த தகவல்கள், நேற்று வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் வேகமாக பரவின.
நிர்வாகிகள் மட்டுமின்றி, வாக்காளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வினியோகத்தால், அ.தி.மு.க., ஓட்டு வங்கி, 10 சதவீதம் சரிவை சந்திக்கும் என மாநகர நிர்வாகிகள் குமுறுகின்றனர்.
சேலம் மாநகர அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
வேட்பாளரின் சொந்த தொகுதியான ஓமலுாரில் பல இடங்களிலும், 500 ரூபாயும், இடைப்பாடி முழுமையாக 500 ரூபாயும், வீரபாண்டியில் 500 ரூபாயும் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த வினியோகத்தால், மூன்று தொகுதிகளிலும் சராசரியாக, தலா, 50,000 ஓட்டுகள் என, 1.50 லட்சம் ஓட்டுகள் முன்னிலை பெற வேண்டும். மாநகரில் சரிசமமான ஓட்டுகள் பெற்றால் வெற்றி பெற்று விடலாம் என, தலைமை தவறாக திட்டமிட்டு, 250 ரூபாய் வீதம், 70 சதவீதம் பேருக்கு பண வினியோகத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த பாரபட்ச பண வினியோகம், அ.தி.மு.க.,வுக்கு நேர் எதிர்மறையான முடிவுகளை தேடிக் கொடுத்து விடும். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வெற்றிக்காக கடுமையாக உழைத்த நிலையில், கடைசி நேர பண வினியோக பாரபட்சத்தால், வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி விட்டது.
இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து