வெளிமாநில தலைவர்களை கவனிக்கவே நேரம் போதவில்லை: பா.ஜ., நிர்வாகிகள் புலம்பல்
அண்ணாமலைக்கு ஆதர வாக பிரசாரம் செய்ய, கோவைக்கு வரும் தலைவர்களை கவனிக்கவே நேரம் போகிறது; இதனால், கிராமம் கிராமமாக பிரசாரத்திற்கு செல்லும் பணியில் சிரமம் ஏற்படுவதாக, பா.ஜ.,வினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர்.
தி.மு.க.,வில் அமைச்சர் ராஜா ஒரு மாதமாக கோவையில் முகாமிட்டு முக்கிய பிரமுகர்கள், மதத்தலைவர்கள், மாற்றுக் கட்சியினர் என, பல்வேறு தரப்பினரை சந்தித்து, தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதேபோல், முன்னாள் அமைச்சர் வேலுமணியும், கிராமம் கிராமமாகச் சென்று, அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் உள்ளூர் கட்சியினரை, கோவைக்கு வரும் பா.ஜ., மேலிட தலைவர்களை வரவேற்கவும், அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்யவும் அனுப்புவதால், பிரசார பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது:
தி.மு.க., - அ.தி.மு.க., வில் எம்.எல்.ஏ.,க்களும்முன்னாள் எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் வேலைகள் அத்துப்படி.
ஆனால், பா.ஜ.,வில் அப்படியில்லை. அண்ணாமலைக்கு ஆதரவாக, பிரதமர் மோடி பிரசாரம் செய்ததே போதும்; பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணாமலை வெற்றிக்காக, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சொல்வது, வீடுகள்தோறும் துண்டறிக்கை வழங்குவது என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் மக்களிடம் அறிமுகம் இல்லாத பிற மாநில தலைவர்கள், மத்திய அமைச்சர்களை, அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய கட்சி மேலிடம் அனுப்புகிறது. அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்களுடன் பிரசாரத்திற்கு செல்லுமாறு, மாநில, மாவட்ட நிர்வாகிகளை மேலிடம் அறிவுறுத்துகிறது.
அவர்களும் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் தொண்டர்களை அழைத்துக் கொண்டு விமான நிலையம், மேலிட தலைவர்கள் செல்லும் இடங்களுக்குச் செல்கின்றனர். இதனால், கிராமம் கிராமமாக சென்று, மக்களை சந்தித்து பிரசாரம் செய்யும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமான தலைவர்களை தவிர, வேறு நபர்களை பிரசாரத்திற்காக கோவைக்கு அனுப்பாமல் இருந்தாலே போதும்.
தலைவர்களை வரவேற்கும் பணிக்கு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நிர்வாகிகள், தொண்டர்களை ஈடுபடுத்தக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து