அனிதா பிரசாரம் தடை கோரும் பா.ஜ.,
பிரதமர் நரேந்திர மோடி குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கக் கோரி, தலைமை தேர்தல் கமிஷனில், பா.ஜ., புகார் அளித்துள்ளது.
சமீபத்தில், துாத்துக்குடியில் நடந்த தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியைச் சேர்ந்த தமிழக கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி காமராஜரை புகழ்ந்து பேசினார்.
காமராஜருக்கும், மோடிக்கும் என்ன சம்பந்தம்? டில்லியில் காமராஜரை கொல்ல நினைத்தவர்கள் அவர்கள்' என கூறியவர், பிரதமர் மோடியை அநாகரிமாக விமர்சித்தார். அவரது இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், ரயில்வே அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
அதன் விபரம்:
எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், பிரதமர் மோடி குறித்து இழிவான கருத்துக்களை, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
மேலும், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், நிகழ்ச்சிகளை நடத்தவோ, ஒளிபரப்பவோ கூடாது என, தி.மு.க., மற்றும் அக்கட்சியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான, 'கலைஞர் டிவி' மற்றும் 'முரசொலி' நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து