பா.ஜ.,வினருடன் செல்லும் வேட்பாளர் பா.ம.க.,வில் ஒலிக்கும் எதிர்ப்பு குரல்
திண்டுக்கல் தொகுதியில் பா.ஜ.,கூட்டணியில் பா.ம.க.,வேட்பாளராக திலகபாமா போட்டியிடுகிறார். ஏற்கனவே, 2021 சட்டசபை தேர்தலிலும் பா.ம.க., சார்பில், ஆத்துார் சட்டசபை தொகுதியில், அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக போட்டியிட்டார்.
அப்போது தேர்தல் பணியில் திலகபாமா முறையாக ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை சரிகட்டும் விதமாக, திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திலகபாமா, பா.ஜ., நிர்வாகிகளிடம் இந்த முறை தான் சரியாக பணியாற்றுவதாக உறுதியளித்தார். அதையடுத்து தொண்டர்கள் பிரசாரத்தில் இறங்கினர்.
ஒட்டன்சத்திரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், திலகபாமாவோடு அக்கட்சி மாவட்ட செயலர் ஜோதிமுத்து, தகராறில் ஈடுபட்டார். வேட்பாளரின் புகாரால், ஜோதிமுத்து நீக்கப்பட்டார். இதனால் பா.ம.க.,தொண்டர்கள் திலகபாமா மீது அதிருப்தியில் இருந்தனர்.
அவர்கள் கூறியதாவது:
தான் பா.ம.க.,வை சேர்ந்தவர் என்பதையே மறந்த திலகபாமா, பா.ம.க.,தொண்டர்களை தேர்தல் பணிகளில் முழுமையாக புறக்கணித்து முழுநேரமும் பா.ஜ.,வினரோடு வலம் வருகிறார்.
இப்படியே போனால், திண்டுக்கல் மாவட்டத்தில் பா.ம.க.,வினர் தடம் தெரியாமல் போய் விடுவர். இது தொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து