Advertisement

'அண்ணாமலை அரசு அதிகாரியாகவே இருக்கிறார்'

அ.தி.மு.க.,வின் சென்னை முகங்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். கட்சி சார்ந்த பல்வேறு அதிகாரபூர்வ அறிவிப்புகளையும், செய்திகளையும் வெளியிடுபவர் இவர் தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி என்று அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களோடு பயணம் செய்த ஜெயகுமார், நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஜெயலலிதாவுடன் பணியாற்றியதற்கும், பழனிசாமியுடன் பணியாற்றுவதற்கும் இடையில் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

ஜெயலலிதா மிக சிறந்த தலைவர்; தமிழகத்தை பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக முன்னேற்றியவர். நாங்கள் அனைவரும் அவரது மாணவர்கள். அவர் கற்று தந்த பாடம், ஏழை, நடுத்தர மக்களுக்கான சமூக நீதி எந்த காலத்திலும் மறுக்கப்படக் கூடாது. அந்த வகையில் ஜெயலலிதா கடைப்பிடித்த கோட்பாட்டை, பழனிசாமி கடைப்பிடிக்கிறார். அதனால், இருவருக்கும் இடையே எந்த மாறுபாடும் இல்லை. நிர்வாகத் திறமையிலும் எந்த வேறுபாடும் கிடையாது. ஜெயலலிதா போலவே செயல்படுகிறார்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரின் பாக்கெட்டில் பழனிசாமி படம் உள்ளது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை மறக்கத் துவங்கி விட்டீர்களா?

அந்த மாதிரி எல்லாம் கிடையாது. ஜெயலலிதாவை பொதுமக்கள், கட்சியினர் எந்தக் காலத்திலும் மறக்க மாட்டார்கள். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், அவரது நினைவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றோம்.

அனைத்து தொண்டர்களுக்கும் தெரியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்லாசி எங்களை வழிநடத்துகிறது. படத்தை வைக்காததால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் மறக்கப்படுவதாக அர்த்தம் இல்லை. பொதுச்செயலர் என்ற முறையில் பழனிசாமி படத்தை வைத்துள்ளனர்.

தி.மு.க.,வை குடும்ப அரசியல் என விமர்சிக்கிறீர்கள். உங்கள் மகனுக்கு 'சீட்' கொடுக்கிறீர்கள். இது வாரிசு அரசியலில் சேராதா?

குடும்ப அரசியல் என்றால், நான் தலைவராக, பொதுச்செயலராக இருந்து, என் மகனுக்கு எதுவும் தெரியாத நிலையில், நான் கையெழுத்திட்டு எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக்கி அரசியலில் திணிப்பதாகும். ஜெயவர்தனுக்கு பெயர் வைத்ததே ஜெயலலிதா தான். அவருக்கு 25 வயது முடிந்ததும் தென்சென்னையில் 'சீட்' வழங்கினார். டயர் நக்கிய பன்னீர்செல்வம் மகனுக்கு 'சீட்' வழங்கவில்லை.

என் மகனுக்கு அவர் சீட் கொடுத்தது, வாரிசு அரசியலாகாது. எத்தனையோ பேர் தங்கள் மகனுக்கு சீட் கேட்டும், அவர் கொடுக்கவில்லை. அவர் பெயர் வைத்த பையனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக் கருதி, அவரது அடையாளமாக வாய்ப்பளித்தார்; அவர் தான் அங்கீகாரம் அளித்தார். எனவே, இது வாரிசு அரசியலில் வராது.

கருணாநிதி தன் மகன் ஸ்டாலினை கொண்டு வந்தது; ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை கொண்டு வந்தது தான் வாரிசு அரசியல். என் மகனுக்கு நான் கையெழுத்திடவில்லை. மருத்துவம் முடித்து டாக்டராக பணியாற்றினார். என்னை பார்த்து கட்சியில் சேர்ந்தார்.

கட்சி ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இருந்தபோது, 'ஓஹோ' என புகழ்ந்த நீங்கள், தற்போது மிகவும் மட்டமாக விமர்சிப்பது சரியா?

அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார். கருணாநிதி துதி பாடினார். அவரது மகன் ஸ்டாலினை பார்த்தார். ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் சந்தித்தது சரி. ஆனால், சிறப்பாகச் செயல்படுவதாக கூறினார். ஜெயலலிதா இருந்தால் அப்படி கூறுவாரா?

நான் என்றாவது தி.மு.க.,வை பாராட்டி உள்ளேனா? அவர்களுக்கு சுயநலம். தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளனர். கட்சி தலைமை அலுவலகத்தை தாக்கியது, ஆவணங்களை கொள்ளை அடித்ததுடன், லோக்சபா தேர்தலில் தன் மகன் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நினைத்தார்.

தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தொகுதிகளில் கட்சி குறைந்த ஓட்டுகள் வாங்கிய நிலையில், லோக்சபா தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற்றார்.

சட்டசபை இடைத்தேர்தலில் தோற்றால், ஆட்சி கவிழும் என நினைத்தார். கீழ்த்தரமான புத்தி. இன்று ஒற்றை ஆளாகி விட்டார். உப்பு தின்பவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அதனால் கட்சி வேட்டி கூட கட்ட முடியவில்லை.

பா.ஜ., கூட்டணியில் இருந்தபோது, குடியுரிமை சட்டத்தை ஆதரித்தீர்கள்; தற்போது எதிர்க்கிறீர்கள். இது இரட்டை வேடமில்லையா?

அதெல்லாம் இல்லை. இதனால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அ.தி.மு.க., முதலில் குரல் கொடுக்கும் என ஏற்கனவே தெரிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பூர்வீக குடிமக்களான முஸ்லிம் மக்களுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க.,

தமிழக முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாதிப்பு ஏற்பட்டால், பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க., மட்டும் தான் இருக்கும். குடியுரிமை திருத்த சட்டம் நாட்டிற்கு தேவை இல்லாதது. முஸ்லிம் மக்களுக்கு அன்று பாதிப்பு இருக்காது எனக் கூறினோம். அதே நிலைப்பாடு தான் இன்றும் தொடர்கிறது. தி.மு.க., தான் இரட்டை வேடம் போடுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தோல்விக்கு என்ன காரணம்?

தி.மு.க., கிலுகிலுப்பை காட்டி மக்களை ஏமாற்றி விட்டது. தி.மு.க.,வுக்கு பண பலம் அதிகம். மார்ட்டின் 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். கருணாநிதி இருந்தபோது, லாட்டரியை ஊக்கப்படுத்தினார். மார்ட்டின் லாட்டரி விற்பனை செய்தார். ஜெயலலிதா லாட்டரியை நிறுத்தினார். அந்த பணம் தேர்தலில் விளையாடியது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களிடம் வழங்கி, போலியான வெற்றியை பெற்றனர்.

அ.தி.மு.க., தலைவர்களை முன்னிறுத்தி ஓட்டு சேகரிப்பதற்கு, பா.ஜ., வெட்கப்பட வேண்டும் என சொன்னீர்கள். அப்படியென்றால் அ.தி.மு.க., ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க., கருதுகிறதா? அப்படி சென்றால் எவ்வளவு சதவீதம் அவர்களுக்கு போகும்?

எங்களுடைய ஓட்டுகள் என்றைக்கும் போகாது. அடிப்படையான ஓட்டுகள் மாறாது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகளும் எங்களுக்கு திரும்பும். நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். ஜெயலலிதா படத்தை போடுபவர்கள், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கலாமே? அதை வழங்காமல், படத்தை போட்டு ஏமாற்றி ஓட்டு வாங்க நினைத்தால், மக்கள் மயங்க மாட்டார்கள்.

அவர்களை நாங்கள் கண்டித்தோம். எங்கள் தலைவர் படங்களுக்கு பதிலாக, உங்கள் தலைவர் படங்களை போடுங்கள் என்றோம். நீங்கள் தலைவர்கள் இல்லாத கட்சியா என கேட்கிறோம்.

நீங்கள் தமிழக நிதி அமைச்சராக இருந்துள்ளீர்கள். தமிழகத்தில் இருந்து கிடைக்கும் வரி பணத்தில், 1 ரூபாய்க்கு, 28 பைசா தான், மத்திய அரசு திரும்பத் தருகிறது என தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் முதல்வர்கள் பேசி வருகின்றனர். இது எவ்வளவு துாரம் உண்மை?

தேசிய கட்சியால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. பேரிடர் நேரும்போது, கேட்ட பணத்தை வழங்குவதில்லை. கேட்டது 1.50 லட்சம் கோடி ரூபாய். ஆனால், 6,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். வடக்கில் வெள்ளம் என்றால் போய் பார்க்கின்றனர்; நிதி வழங்குகின்றனர். தமிழக பக்கம் வருவதில்லை.

ஆனால், தமிழகம் வரும்போது தேனொழுக பேசுகின்றனர்; லட்சக்கணக்கான கோடி ரூபாய் கொடுத்ததாக கூறுகின்றனர். கட்டுமான திட்டங்களுக்கு கொடுப்பதால், மத்திய அரசுக்கு தான் வருவாய். சமூக நல திட்டங்களுக்கு வழங்குவதில்லை. வெள்ள சேதத்திற்கு பணம் தருவதில்லை.

நிதி பகிர்வில் பாரபட்சம் இருக்கிறது. நாம் அதிக வரி கொடுக்கிறோம். ஆனால், நமக்கு 28 பைசா தான் தருகின்றனர். இது எப்படி சரியான நிதி பகிர்வாக இருக்கும்? 1 ரூபாய்க்கு, 28 பைசா வருவது என்பது உண்மை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வு சரி சமமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. யானை பசிக்கு சோளப்பொரி கொடுக்கின்றனர்.

தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, இதை சரி செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. நாங்கள் ஆட்சியில் இல்லாத நிலையிலும், அழுத்தம் கொடுத்து மாநில உரிமையை காத்தோம்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், அ.தி.மு.க., சரியாக நிதி நிர்வாகம் செய்யாததால் தான், தமிழகம் கடனில் தத்தளிக்கிறது என்று தி.மு.க., குற்றம் சாட்டுகிறதே?

ஊதாரி அரசின் குற்றச்சாட்டு. நாங்கள் 10 ஆண்டுகளில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினோம். அவர்கள் 30 மாதங்களில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். நாங்கள் மூலதன செலவுக்கு கடன் பெற்றோம்; அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினோம்.

ஆனால், தி.மு.க., ஆட்சியில் கடன் வாங்கி தான் கலர் 'டிவி' வழங்கினர். முக்கால்வாசி கடனை ஊதாரி திட்டங்களுக்கு செலவு செய்வர்; மூலதன செலவு செய்வதில்லை. தேவையில்லாமல் பணத்தை செலவு செய்கின்றனர். இதனால், தமிழக மக்கள் தலையில் கடன் சுமை ஏறியுள்ளது.

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி முறிந்ததை நீங்கள் தான் அறிவித்தீர்கள். அந்த முடிவு எடுக்கப்பட்டபோது நீங்கள் இருந்தீர்களா? அதையொட்டி, அ.தி.மு.க.,வில் நடந்தவற்றை சொல்ல முடியுமா?

கட்சி முடிவை தான் கூறினேன். நான் இருந்தேனா என்பது கேள்வியல்ல. கட்சி தலைமை தான் கட்சி. அதை பிரித்துப் பார்க்கக் கூடாது. எங்கள் தலைவர்களை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது. அவர் கத்துக்குட்டி. அவர் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். அவருக்கு அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து எதுவும் தெரியாது.

அவரை அரசியல்வாதி என்று கூற முடியாது. இன்றும் அரசு அதிகாரியாக உள்ளார். அரசியல்வாதியாக இருந்தால், தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட மாட்டார்கள். அவர் பக்குவப்படாத அரசியல்வாதி.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது என்கிறீர்கள். வி.சி., - அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தால், அதிக இடங்கள் கிடைக்கும் என்கிறீர்கள். பொதுவெளியில் நிறைய அழைப்பு விடுத்து பார்த்தீர்கள். இருந்தும், தி.மு.க., கூட்டணியை ஏன் உடைக்க முடியவில்லை?

நான் ஜோதிடர் அல்ல. கடந்த காலங்களில் நடந்துள்ளது. கடைசி நிமிடத்தில் கூட்டணி மாற்றம் நடந்துள்ளது. இண்டியா கூட்டணியிலே தற்போது நடந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக கூட்டணிக்கு அழைக்கவில்லை.

கருணாநிதி காலத்திலிருந்து, தி.மு.க., யார் முதுகிலாவது சவாரி செய்து தான் தேர்தலை சந்தித்துள்ளது. நாங்கள் அப்படி கிடையாது. கடந்த 1980, 2014 லோக்சபா தேர்தலில் தனியாக நின்றுள்ளோம். தி.மு.க., தனியாக நிற்காது; யார் முதுகிலாவது சவாரி செய்ய வேண்டும். எங்களை பொறுத்தவரை, எங்கள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம். வராவிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. மக்கள் தி.மு.க.,வுக்கு எதிராக நிற்கும்போது, நாங்கள் ஏன் அக்கூட்டணியை உடைக்க வேண்டும்?

தேர்தல் முடிந்ததும் பன்னீர்செல்வம் பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார் என்கிறீர்கள். எதனால் அப்படி நடக்கும்?

அவர் சந்தர்ப்பவாதி, சுயநலவாதி. கொள்கை பிடிப்பு இல்லாதவர். நிலையான மனம் கிடையாது. இன்று பா.ஜ., கூட்டத்தில் அசிங்கப்பட்டுள்ளார். பா.ஜ., கூட்டணி கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பேசுகிறார். அவரை கே.பி.ராமலிங்கம் தள்ளுங்க எனக்கூறி பேச்சை நிறுத்துகிறார். மேலும், பா.ஜ., கூட்டத்தில் அ.தி.மு.க.,வை விமர்சிக்கும்போது, அவருக்கு ரோஷம் இருந்தால் கண்டித்திருக்க வேண்டும்.

அ.தி.மு.க.,வால் வளர்ந்தவர், அ.தி.மு.க., ஆட்சி சரியில்லை எனக் கூறும்போது, எதிர்ப்பு தெரிவிக்காததை எப்படி எடுத்துக் கொள்வது? உப்பு போட்டு சாப்பிடுபவர் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றி இருப்பார். எனவே, அவர் பா.ஜ.,வில் ஐக்கியமாவார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்