மக்களை வாட்டி வதைக்கிறது மத்திய அரசு: பழனிசாமி விமர்சனம்
"விவசாயம் என்பது புனிதமான தொழில். அதைக் கொச்சைப்படுத்த பேச வேண்டாம். என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு விவசாயிகளை அவமானப்படுத்த வேண்டாம்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க.,வின் ஆரணி வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க.,வை உடைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார், தொண்டர்கள் மீது எவ்வளவோ வழக்குகளைப் போட்டார். அவை அனைத்தைம் தகர்த்து எறிந்துவிட்டோம்.
நாட்டில் எத்தனையோ கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல யாரும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசி இருக்கும் வரை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.,வை தொட்டுக் கூட பார்க்க முடியாது.
'பச்சை பொய் பேசும் விவசாயி' என ஸ்டாலின் என்னைப் பார்த்து சொல்கிறார். விவசாயம் என்றால் என்ன என்பது பற்றி அவருக்கு தெரியுமா. விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத முதல்வர் என்னைப் பற்றி பேசுகிறார்.
விவசாயி ஒருவன் தான் எதற்கும் பயப்பட மாட்டான். விவசாயம் என்பது புனிதமான தொழில். அதைக் கொச்சைப்படுத்த பேச வேண்டாம். என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு விவசாயிகளை அவமானப்படுத்த வேண்டாம்.
எங்கள் ஆட்சியில் விவசாயிகள் செழிப்போடு இருந்தார்கள். இரண்டு முறை தொடக்க வேளாண்மை வங்கியில் பெற்ற கடனை தள்ளுபடி செய்தோம். 2021ல் 12,510 கோடி ரூபாய் வேளாண் கடனை தள்ளுபடி செய்தோம்.
2017ல் வறட்சி இருந்தபோதும் பயிர்களுக்கு நிவாரணம் கொடுத்தோம். விவசாயிகளுக்கு விவசாய பொருட்களை வாங்க மானியம் கொடுத்து விவசாயத்தை அதிகரித்து விருது பெற்றோம். தி.மு.க., ஆட்சியில் ஏதாவது விருதுகளை வாங்கினீர்களா?
தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு 25 குழுவை நியமித்த ஒரே அரசு தி.மு.க., தான். அதனால் தான் தி.மு.க.,வை 'குழு அரசு' என மக்கள் பேசுகின்றனர். குழு அமைத்து திட்டத்தை கிடப்பில் போட்டுவிடுவார்கள். இந்தக் குழுக்கள் என்ன செய்கிறது என்பதே தெரியவில்லை.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க., அரசு மட்டும் தான். கருணாநிதி முதல்வராக இருந்த போதே ஊழல் பிறந்துவிட்டது. ஊழலுக்கு சொந்தமான கட்சி தி.மு.க.,
தி.மு.க.,வில் கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் முதல்வர்... அடுத்து உதயநிதி முதல்வராக முயற்சி செய்கிறார். தி.மு.க.,வில் வேறு நபர்களே கிடையாதா. தி.மு.க., கார்ப்ரேட் கம்பெனி போல இயங்குகிறது.
இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டும் தான். இங்கு தான் ஒரு கிளைச் செயலர் முதல்வராக முடியும். ஸ்டாலின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனையைத் தான் பரிசாக தந்திருக்கிறார்.
மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் தாராக மந்திரம். 2ஜி போன்ற ஊழல் உலகில் நடந்ததே கிடையாது. இதனால் தமிழகத்துக்கு அவமானம்.
ஸ்டாலின் ராசியான மனிதர். அவர் இண்டியா கூட்டணியில் சேர்ந்தவுடன் பல கட்சிகள் வெளியே போய்விட்டன. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வருமா என்பது கேள்விக்குறி. டில்லியில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணியில் உள்ளனர். ஆனால், பஞ்சாப்பில் எதிராகவும், கேரளாவில் எதிராகவும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் மக்களின் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டதால் இண்டியா கூட்டணியில் இருக்கிறார் .
தேர்தல் நேரத்தில் 520 அறிவிப்புகள் வெளியிட்ட ஸ்டாலின், 10 சதவீத அறிவிப்புகளைக் கூட நிறைவேற்றாமல் 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்.
வெளிநாடுகளில் இருந்து குறைந்து விலைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து 70 சதவீத வரியை விதித்து மக்களை வாட்டி வதைக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் பெட்ரோல் விலையை ஸ்டாலினும் குறைக்கவில்லை. மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களை நிறுத்தி வைத்து, தி.மு.க., சாதனை படைத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து