இண்டியா கூட்டணி அரசு அமைந்தால்: அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் சொன்ன தகவல்
"பழனிசாமியும் அவரது கட்சியும்,தமிழகத்தை வஞ்சித்து கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்கத்தை மீட்டெடுத்து நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்" என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
கடந்த அ.தி.மு.க.. ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தை கடும் நிதி நெருக்கடியில் விட்டுச் சென்றார்கள். இந்த நிலையிலும் மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படியை அப்படியே கொடுத்து வருகிறோம்.
அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த 3 லட்ச ரூபாய் குடும்பநல நிதியை 5 லட்சமாக உயர்த்தியுள்ளோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோஜியோ போராடியதால் போடப்பட்ட வழக்குகள். துறைரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளோம்.
அரசு ஊழியர்கள் போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கினோம். ஆசிரியர்களின் கோரிக்கையின்படி தொடக்கக் கல்வித்துறையைத் தனியாகப் பிரித்து செயல்பட ஆணை பிறப்பித்தோம்.
பொது மாறுதல் கலந்தாய்வு, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது. ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது.
50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது. கனவு ஆசிரியர் விருது வழங்கி கெளரவித்தது. அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது. 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது. பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது.
திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடுகிறார் பழனிசாமி. ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து அசிங்கப்படுத்தி எள்ளி நகையாடி அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி.
இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதல்வராக இருந்து கொண்டே மிக மோசமாக கிண்டலடித்து மேடையில் பேசி. அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு. இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடிக்கிறார் பழனிசாமி.
அ.தி.முக., என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா. எஸ்மா, டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும் அடக்குமுறை செய்ததும்தானே அ.தி.மு.க. ஆட்சியில் தான்.
நாட்டில் முதன்முதலாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சியை நடத்திவிட்டு பேச பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?
ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை முடக்கியும் ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனதும் பழனிசாமி தான்.
பழனிசாமியும் அவரது கட்சியும்,தமிழகத்தை வஞ்சித்து கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்கத்தை மீட்டெடுத்து நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர. அவை நிராகரிக்கப்படவில்லை.
அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு தி.மு.க., அரசுதான்.
உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப் பிசகாமல் நிறைவேற்றி தருவேன் என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேச சொல்லியிருக்கிறேன்.
இதெல்லாம் தி.மு.க., ஆட்சியில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பில்லை.
எனவே, தி.மு.க.வின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம் பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன் தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து