அதிகாரிகளிடமே லஞ்சம் கேட்ட 'பலே' அரசு அலுவலர்கள்!
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தேர்தலுக்கு தேவையான உபகரணங்களை தாமதமின்றி எடுத்துச்செல்ல, அரசு அதிகாரிகளிடமே, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. தேர்தலுக்கு தேவையான பொருட்கள் கொள்முதலிலும், பெருமளவு மோசடி நடந்துள்ளது. இது தேர்தல் கமிஷனை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும், வரும் 19ல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.-
தேர்தலுக்கு தேவையான எழுது பொருட்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, அரசு எழுது பொருள் அலுவலகத்தில் இருந்து, கடந்த 3ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வாகனங்களுடன் சென்னை வந்து, தங்கள் தொகுதியில் நடக்கும் தேர்தலுக்கு தேவையான எழுது பொருட்களை பெற்றுச் செல்கின்றனர்.
இப்படி அனுப்பப்படும் எழுது பொருட்களை விரைவாக வழங்க வேண்டும் என்றால், 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, எழுதுபொருள் அலுவலகத்தில் பணிபுரியும் ரவி, அரசு அதிகாரிகளிடமே கேட்டுள்ளார். இது அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படி அரசு அலுவலர்களான தங்களிடமே, அரசுத் துறையில் பணியாற்றும் ஒருவர் லஞ்சம் கேட்கிறாரே என் ஆதங்கப்பட்ட அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தனர்; அவர்களில் சிலர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு எழுதுபொருள் அலுவலக உதவி இயக்குனருக்கு, இது தொடர்பாக புகார் கடிதம் அனுப்பினார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது:
எழுது பொருட்களை விரைவாக பெற, அரசு எழுதுபொருள் அலுவலகத்தில் பணியாற்றும் ரவி என்பவர் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். எங்கள் மாவட்ட அலுவலர்கள் தர மறுத்துள்ளனர். அதனால், அவர்கள் அலைகழிப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பணம் கொடுத்துள்ளனர். அதனால், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்குத் தேவையான எழுது பொருட்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதை பெற்றுச் செல்ல அரசு அலுவலர்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? எழுதுபொருள் அலுவலகத்தில், அனைத்து இடங்களிலும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அரசு எழுது பொருள் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், கடந்த 6ம் தேதி, தமிழகம் முழுதும் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 'ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களிடம், ரவி என்பவர் பணம் 5,000 ரூபாய் கேட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே, அனைத்து பிரிவு கண்காணிப்பாளர்களும், தங்கள் பிரிவில் பணியாற்றும் பணியாளர்களில் யாரேனும் எழுது பொருட்களை வழங்க பணம் பெற்றிருந்தால், அதன் விபரத்தை அனுப்பி வைக்கவும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு வழங்கும் பொருட்களை, அரசு துறைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு முன், அதிகாரிகளிடமே அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதேநேரம் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் கொள்முதலில், பெரும் மோசடி நடந்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
இது குறித்து, எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஓட்டுப் பெட்டிகள், 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறையும் சீல் வைக்கப்படும். சீல் வைக்க அரக்கு பயன்படுத்தப்படும். இதை கொள்முதல் செய்ததில், 40 லட்சம் ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது.
அரக்கு கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில், ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் தலையீட்டுள்ளனர். மூன்று முறை சோதனை செய்து தரமற்றது எனக் கூறப்பட்ட நிறுவனத்திடம், 'சப்ளை ஆர்டர்' இல்லாமலேயே, 40 டன் அரக்கு வாங்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ அரக்கு 100 ரூபாய். ஆனால், 250 ரூபாய் வரை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இப்படி வாங்கப்பட்ட தரமற்ற அரக்கைப் பயன்படுத்தினால், ஒரு மணி நேரத்தில் சீல் கீழே விழுந்து விடும். இது தேர்தல் கமிஷனுக்கு தெரிய வந்ததும், அந்த அரக்கை பயன்படுத்த வேண்டாம். அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அந்தந்தப் பகுதியில் வாங்கிக் கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரமற்றது என தெரிந்தும், கமிஷனுக்காக வாங்கப்பட்ட, 40 டன் அரக்கு, அரசு எழுது பொருள் அலுவலகத்தில், யாருக்கும் பயன்படாமல் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, காகிதம் உட்பட எழுது பொருள் துறை வாயிலாக கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களில் பெரும் ஊழல் நடந்துள்ளது.
இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தினால், பல உண்மைகள் வெளிவரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, அரசு எழுது பொருள் அலுவலக பொது மேலாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''அவ்வாறெல்லாம் எதுவும் இல்லை. பணம் கேட்டதாக புகார் வரவில்லை. பொருட்கள் சீராக மாவட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன,'' என்று விளக்கமளித்தார்.
வாசகர் கருத்து