மின் கட்டணம் உயர்ந்தும் சீரழிந்து கிடக்கும் மின் வாரியம்: தி.மு.க., மீது அன்புமணி புகார்
சென்னை: 'தமிழகத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் 16,048 கோடி ரூபாய் இழப்புக்கு, தி.மு.க., அரசே காரணம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 100 பொதுத்துறை நிறுவனங்களில், டாஸ்மாக், சிப்காட் உள்ளிட்ட 54 நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்குகின்றன. நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியம் உள்ளிட்ட 35 நிறுவனங்கள், கடந்த 2022 - -23ல் ஏற்படுத்திய இழப்பு 16,048 கோடி ரூபாய்.
மேலும் 11 நிறுவனங்களின் இழப்பு குறித்த முழு தகவல்கள், நிதி ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை. அதையும் சேர்த்திருந்தால், 18,814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
தமிழக அரசு, கடந்த 2022 - -23ல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 26,867 கோடி ரூபாய் மானியம் வழங்கியது. இந்த மானியம் வழங்காவிட்டால், பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு 52,915 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும்.
தமிழக மின் வாரியம், 9,192 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. மின் கட்டண உயர்வால், 2022 செப்டம்பரில் இருந்து ஏழு மாதங்களில், மின் வாரியத்திற்கு 23,863 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன் பின்னரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து, மின் வாரியம் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கினால்தான் வரி அல்லாத வருவாய் அதிகரிக்கும். இதில், தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement


வாசகர்கள் கருத்துகள் (0)