'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் காலம் வரும்'
தமிழக சட்டசபை உறுப்பினராகவும், லோக்சபா உறுப்பினராகவும் இருந்தவர் கே.எஸ்.அழகிரி. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், அதிர்ந்து பேசாமல், தேவையான செய்திகளை மட்டும் தெரிவித்தவர். தற்போது மீண்டும், லோக்சபா தேர்தலில்போட்டியிடுவதற்கு முயற்சித்த அழகிரி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, 'தினமலர்' இதழுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி:
தமிழக காங்., தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் மிகவும் குறைவு. நீங்கள் தலைவராக இருந்த காலத்தில், காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளது. 18 எம்.எல்.ஏ., - 8 எம்.பி., -- உள்ளாட்சி பதவிகள் என, சாதித்து காட்டினீர்கள். அந்த அதிர்ஷ்டம் தான் நீங்கள் இவ்வளவு நாள் தலைவராக நீடித்ததற்கு காரணமா?
தேர்தல் வெற்றிக்கு எல்லாம் கூட்டுமுயற்சி தான் காரணம். எனக்கு அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பும் மற்றொரு காரணம். மறைந்த தலைவர் மூப்பனாரிடம் கற்றுக் கொண்ட பாடம், அனுபவமாக அமைந்தது. என்னால் முடிந்த அளவில் மனநிறைவோடு பணியாற்றினேன். அதிர்ஷ்டம், தனிமனித வெற்றி என்பதல்லாம் இல்லை. எல்லாருடைய உழைப்பும், அதில் கலந்திருந்த கலவையும் தான் காரணம்.
தேர்தல் நேரத்தில், மாநில தலைவரை மாற்றுவதற்கு என்ன காரணம்? தேர்தல் முடியும் வரை கட்சி தலைமை காத்திருக்கலாமே?
கட்சி முடிவு என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. கட்சி தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுக்கு கர்நாடக சட்டசபை தேர்தலில், செல்வப்பெருந்தகை உதவி செய்ததால்தான், அவருக்கு தலைவர் பதவி கிடைத்துள்ளது என, கட்சியினர் கூறுகின்றனரே?
அது உண்மையில்லை. அப்படி யாரும் என்னிடம் சொல்லவில்லை.
நீங்கள் தலைவராக இருந்தபோது நீக்கப்பட்ட நிர்வாகிகளை, செல்வப்பெருந்தகை மீண்டும் சேர்த்துக்கொண்டு இருக்கிறார். இது கட்சிக்கு நல்லதா?
நிரந்தரமாக அவர்களை நீக்கவில்லை. ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த முடிவு அது. தற்காலிகமாக நீக்கப்பட்டதால், அவர்களை மீண்டும் சேர்த்ததில் எந்த தவறும் இல்லை.
காங்கிரசில் விஜயதரணி இருந்தது போது, மூத்த எம்.எல்.ஏ.,வான அவருக்கு தாங்கள் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க ஆதரவு அளிக்கவில்லை என்பதே அவர் விலகியதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். உண்மையா? அவர், வேறு கட்சிகளை விட்டு பா.ஜ.,வில் ஐக்கியமாக என்ன காரணமாக இருக்கும்?
அவர் விலகியதற்கு எந்த காரணமும் இல்லை. சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை யாருக்கு தர வேண்டும் என்பது கட்சி தலைமை எடுத்த முடிவு. இன்னாருக்கு தர வேண்டும் என, முடிவு எடுக்கவில்லை. அப்பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என, எம்.எல்.ஏ.,க்களிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே, புதுச்சேரி எம்.பி., வைத்தியலிங்கம் ஆகியோர் கருத்தை கேட்டு தான் முடிவை அறிவித்தனர்.
நீங்கள் தலைவராக இருந்த போது சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வராமல் புறக்கணித்தனர். நீங்கள் அழைத்தும் வராதவர்கள், தற்போது அங்கு வந்து பேட்டி தருகின்றனர். உங்களுக்குள், அவர்களுக்கும் என்ன பனிப்போர்?
கண்பார்வையில் மாற்று கண்பார்வை உண்டு. அப்படி ஒரு பார்வையில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாக்கள், நிகழ்ச்சிகளில் எல்லாம் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி போன்ற அனைத்து தலைவர்களும் பல்வேறு நேரங்களில் பங்கேற்றுள்ளனர். எந்த விழாவையும் அவர்கள் புறக்கணிக்கவில்லை. இது ஒரு பெரிய விஷயமும் அல்ல.
தி.மு.க.,வுடனான முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சை நீங்கள் நடத்தினீர்கள். பின் செல்வப்பெருந்தகை நடத்தி கைகூடாததால், நேரடியாக மேலிடம் நடத்தியாத கூறுகின்றனரே?
தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியிடம், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த காங்கிரஸ் மேலிடத்திலிருந்து தலைவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். ஒரு முறை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பேச்சு நடத்தினோம். கமல்நாத், அகமது படேல், குலாம்நபி ஆசாத், சல்மான் குர்ஷித் போன்றவர்களும் பேச்சு நடத்தியுள்ளனர். தற்போது முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழுவும் பேச்சு நடத்தியது.
நீங்களே பேச்சை தொடர்ந்திருந்தால், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளை விட கூடுதலாக சில தொகுதிகள் கிடைத்திருக்குமா?
பேசி முடிவெடுக்கப்பட்ட தொகுதிகள் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருவர் இருந்திருந்தால், 25 தொகுதிகள் கிடைக்கும், இன்னொருவர் இருந்திருந்தால், 12 தொகுதிகள் கிடைக்கும், இவரு இருந்திருந்தால், 9 தொகுதிகள் தான் கிடைக்கும் என்ற பேச்சில் எந்த உண்மையும் இல்லை.
தொகுதி பங்கீட்டின்போது, உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் விதத்தில் தான் பேசினீர்கள் என, அமைச்சர் கண்ணப்பன் விமர்சித்து உள்ளாரே?
கட்சியில், பலர் பலவிதமாக பேசுவர். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தி.மு.க., கூட்டணி தலைவர் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு பதில் சொல்ல வேண்டும். கண்ணப்பனுக்கு பலர் பதில் சொல்லிவிட்டனர்.
தேர்தல் கமிஷனராக இருந்த அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் தான் காரணம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைகூறுகிறாரே?
அண்ணாமலையின் ஒவ்வொரு நகர்வையும், வார்த்தையையும், 'தினமலர்' நாளிதழ் தான் பெரிதுப்படுத்துகிறது. நாங்கள் அதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
முதல்வர் ஸ்டாலினை, உங்கள் கட்சி தலைவர் ராகுலைவிட அதிகமாக புகழ்கிறீர்கள். தி.மு.க.,வுடனான காங்கிரஸ் இணக்கம் இப்போது, கிளை கழகம் காங்கிரஸ் என்ற அளவிற்கு சென்றுவிட்டதாக கட்சியினர் கூறுகின்றனர். காங்கிரஸ் என்றேனும் மீண்டு எழுந்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் காலம் வருமா?
எங்கள் கட்சி தலைவர் என்ற முறையில் ராகுலையும், கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலினையும் புகழ்கிறோம். பிரதமர் மோடியை எதிர்ப்பதில் ராகுலுக்கு பக்கபலமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இணக்கமான கூட்டணி; இயற்கையான கூட்டணி. கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் காலம் கண்டிப்பாக வரும்.
தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நாள் வருமா?
கண்டிப்பாக வரும்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது பற்றி...
பிரதமர் மோடியின் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அமலாக்கத்துறை எதிர்க்கட்சி தலைவர்களை மட்டும் குறி வைக்கிறது. பா.ஜ.,வை சார்ந்த யார் மீதும் கை வைக்கவில்லை. மத்திய அரசில், 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடத்திருப்பதாக சி.ஏ.ஜி., அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரையும் விசாரிக்கவும் அழைக்கவில்லை. யாரையும் கைது செய்யவும் இல்லை.
தேர்தல் பத்திரம் விவகாரம் குறித்து...
நன்கொடை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேவையானது. நன்கொடை இல்லாமல் கட்சி என்ற நிர்வாகத்தை நடத்த முடியாது. தேர்தல் நிதி வசூலிப்பதில், சில வழிமுறைகள் இருக்க வேண்டும். தேர்தல் பத்திரம் என்ற முறையில் பணம் கொடுப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற விதியை பிரதமர் மோடி கொண்டு வந்தார். அதுதான் உயர் நீதிமன்றம் உட்பட பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஒரு அரசியல் கட்சிக்கு நிதி வழங்குபவரின் பெயரை வெளியிட்டால் என்ன தவறு? ஏன் அரசாங்கமே தடை செய்கிறது? மிகப்பெரிய தலைக்குனிவு பா.ஜ., அரசுக்கு வந்ததற்கு காரணம், நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிடதாதது தான். இப்போது உச்ச நீதிமன்றம் வெளியிட சொல்லியிருக்கிறது. சட்டத்தின் நடைமுறையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு பாராட்டுக்கள்.
'இண்டியா' கூட்டணியின் சார்பில் யார் பிரதமர் என்பதை ஏன் அறிவிக்கவில்லை?
காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிருந்து இன்று வரை எந்த தேர்தலிலும் நாங்கள் பிரதமர் யார் என்பதை முன்கூட்டியே அறிவிப்பதில்லை.
காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,க்கள் கூடி தான் பிரதமரை தேர்ந்தெடுப்பர். பா.ஜ., ஒரு சர்வாதிகார கட்சி. தேர்தல் நடக்கும்முன், தேர்தலுக்கு படையெடுக்கும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கின்றனர். அதற்கு பெயர் தான் சர்வாதிகாரம். அதை தான் ஹிட்லர், முசோலினி, புடின் போன்றவர்கள் செய்தனர். காங்கிரஸ் ஒரு போதும் அந்த நடைமுறையை பின்பற்றாது.
தமிழகத்திற்கு அடிக்கடி பிரதமர் மோடி வருவதால், பா.ஜ., இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என, பா.ஜ.,வினர் கூறுகின்றனரே?
ஒரு ஜனநாயக நாட்டில், தேர்தலுக்கு முன் ஒரு மாநிலத்தில் அவர் பயணம் செய்வதற்கும், தேர்தல் நெருங்குகிற போதும் பயணம் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இவ்வளவு பயணம் மேற்கொள்வதற்கு காரணம் அவருக்கு எழுந்த தோல்வி பயம் தான். தமிழகத்தில் இருக்கும் இண்டியா கூட்டணி கொள்கை ரீதியாகவும், வலிமையாகவும் இருக்கிற காரணத்தால், அதை சிதைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி பலிக்காது. அவர் தோல்வியை தழுவுவார்.
வாசகர் கருத்து