மத்திய அரசுக்கு அதிக நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி., நான் தான்
மதுரை லோக்சபா தொகுதியின் எம்.பி.,யான வெங்கடேசனின் ஐந்தாண்டு செயல்பாடுகள், மக்களிடம் வரவேற்புகளையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளன. குறிப்பாக, சோஷியல் மீடியாக்களில் அவரது செயல்பாடுகள் இளைஞர் கவனத்தை ஈர்த்துள்ளன. அதே நேரம் மதுரையின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. இந்நிலையில் 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த விறுவிறு பேட்டி...
ஏற்கனவே எம்.பி.,யாக இருந்தும் மதுரையின் வளர்ச்சிக்காக செய்ய முடியாமல் போன திட்டம் என எதை நினைக்கீறீர்கள்?
நாங்கள் தேர்தல் அறிக்கையாக 16 பக்கங்கள் வெளியிட்டோம். ஐந்தாண்டு நிறைவில் நாங்கள் பெற்ற வெற்றி குறித்து, 56 பக்கங்கள் வெளியிட்டுள்ளோம். குறிப்பாக மத்திய அரசின் கல்வி நிறுவனம் மதுரைக்கு கொண்டுவர பாடுபடுவேன் என்றேன். அதுதொடர்பாக முயற்சி எடுத்தபோது ஏற்கனவே அறிவித்து, துாங்கி கிடந்த திட்டமான தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு கழகம் (என்.ஐ.பி.இ.ஆர்.,) திட்டம் தெரியவந்தது. அதற்காக தமிழக, அரசு 116 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தும் அதை மத்திய சுகாதார துறை ஏற்றுக்கொண்டதா என்பது கூட தெரியவில்லை. நான் தலையிட்டு பல தடைகளை உடைத்தேன்.
ஆனால் ரூ.500 கோடிக்கும் மேல் திட்ட மதிப்பு என மாற்றியமைக்கப்பட்டதால் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. மீண்டும் எம்.பி.,யாகி அத்திட்டத்தை மதுரைக்கு கொண்டுவருவேன்.
நீங்கள் தொகுதியில் சாதித்ததாக கூறி '150 வெற்றிகள்' என்ற நுால் வெளியிட்டுள்ளீர்கள். அதில் சிலவற்றை கூறுங்கள்.
என் முயற்சியில் ரூ.500 கோடி கல்வி கடன் பெற்றுக் 'கொடுத்தேன். விண்ணப்பித்த மாணவர்களில், 80 சதவீதத்திற்கும் மேல் கல்வி கடன் பெற்றனர். நாட்டில் கல்வி கடன் வழங்குவதில் மும்பைக்கு அடுத்து மதுரை, இரண்டாவது இடம் பெற்றது. நாட்டில் பிரதமர் தொகுதியான வாரணாசிக்கு அடுத்து, 19,800 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி, இரண்டாவது இடத்திற்கு மதுரையை கொண்டுவந்துள்ளேன். சாலையோர வியாபாரிகள் 14,000 பேருக்கு கடன் பெற்றுக்கொடுத்துள்ளேன். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள விபத்து பகுதிகள் அனைத்திலும் மேம்பாலங்கள், சர்வீஸ் ரோடு அமைத்தது, மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டுவந்தது உட்பட சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழக நலனுக்காக லோக்சபாவில் நீங்கள் பேசியதில் இருந்து உங்களுக்கு மனதிருப்தி அளித்த பிரச்னை எது?
லோக்சபாவில், 23 முறை நான் பேசியுள்ளேன். அனைத்தும் முக்கியமானவை தான். அவற்றில் பல்கலைகளுக்கான மசோதா தொடர்பாக தமிழ் மொழியா, சமஸ்கிருத மொழியா என்ற பிரச்னை எழுந்தபோது இந்திய தாய் மொழி தமிழ் தான் என்ற கருத்தை முன்வைத்து நான் பேசினேன்.
மேலும் நாட்டின் 12,000 ஆண்டுகள் இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதும் குழுவில் தென்னகத்தை சேர்ந்த எவரும் இல்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை, சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி., மகளிர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் இல்லாதது தொடர்பாக நான் பேசியதால் அக்குழு செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டது. இதுதவிர அஞ்சலகம், சி.ஆர்.பி.எப்., தேர்வுகளில் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதலாம் என்ற நிலையை கொண்டு வந்தேன். இது நாட்டிற்கே ஆன பிரச்னை.
மத்திய அரசை நீங்கள் விமர்சனம் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி உங்களை முன் நிறுத்தி கொண்டீர்கள். கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கேரள எம்.பி.,க்களை போல் மத்திய அரசிடம் பேசி தொகுதிக்கு திட்டப் பணிகளை கொண்டுவரவில்லை என விமர்சனம் உள்ளதே...
மத்திய அரசை விமர்சிப்பது அரசியல் ரீதியானது. ஆனால் மத்திய அரசுக்கு அதிக முறை நன்றி தெரிவித்த எம்.பி.,யும் நான் தான். நான் முயற்சி எடுத்து, பல மத்திய அரசு திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளேன். குறிப்பாக, ரயில்வேயில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது சட்டரீதியான உரிமை. அதை பெறுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது.
மேலும் 17வது பார்லிமென்டில் மத்திய அரசுக்கு மிக அதிக கடிதங்கள் எழுதிய எம்.பி., நானாக தான் இருப்பேன். அனைத்திற்கும் பதில் பெற்றுள்ளேன். மத்திய அரசை கொள்கை ரீதியாக விமர்சிப்பது எங்கள் அரசியல் பணி. நிர்வாக ரீதியாக நாங்கள் பெற வேண்டிய உரிமைகளை பெறுவதற்காக அதிக விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். அதே நேரம் மத்திய அரசுக்கு அதிகமான நன்றிகளையும் தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.,யும் நான் தான்.
'எக்ஸ்' தளம் போன்ற சோஷியல் மீடியாவில் தான் அதிகம் செயல்பட்டீர்கள்; களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே...
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது மிகப்பெரிய சமூக பணி. அது என் தனிப்பட்ட நலத்திற்கானது அல்ல. தமிழகம் முழுதும் ஏராளமான போட்டித் தேர்வுகள் குறித்த பிரச்னைகளில் நான் அதிகம் தலையிட்டுள்ளேன். மத்திய அரசு தேர்வுகள் ரீதியாக மாணவர்கள், இளைஞர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த நிமிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு என் கடிதம் பறக்கும். இது எவ்வாறு சாத்தியம் என பலரும் கேட்டனர்.
சோஷியல் மீடியாவில் உள்ள முகம் தெரியாத 90 சதவீதம் நண்பர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தனர் என்பது தான் அந்த ரகசியம். சோஷியல் மீடியா என்பது சமூக செயல்பாட்டின் பிரதான தளம். மதுரையில் நேரடி அரசியல் களத்தில் என்னை விட தற்போதுள்ள எதிர்க்கட்சியினர் எத்தனை போராட்டங்களை நடத்தி விட்டனர்? மதுரைக்கான உள்கட்டமைப்பு மற்றும் பிரச்னைகளுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
மீண்டும் போட்டியிடும் உங்களுக்கு லோக்கல் தி.மு.க.,வில் முழுமையான ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா? ஏனென்றால் நீங்கள் தி.மு.க.,வின் மேல்மட்ட தலைவர்களுடன் தான் தொடர்பில் உள்ளதாகவும், லோக்கல் நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை என விமர்சனம் உள்ளது.
இது அரசியல். மிகப்பெரிய போராட்ட களம். இந்த களத்தில் எந்த பிரச்னைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்றாக தெரியும். தி.மு.க., - காங்., என எல்லா கட்சிகளிலும் இதுபோன்ற சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் என்றால் இதெல்லாம் கடந்து தான் செல்ல வேண்டும்.
எதிரணியில் கூட்டணியே முடிக்காத நேரத்தில், எங்கள் கூட்டணியில் முதல் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன். பிரசாரத்தை துவக்கி, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டோம். மதுரையில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் 'பிசி'யாக இருந்ததால் அவர் பங்கேற்கவில்லை. அவரிடம் நான் பேசிவிட்டேன். மதுரையில் சந்திப்போம் என அவரும் கூறிவிட்டார். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
இந்த தேர்தலில் நீங்கள் சந்திக்க இருக்கும் பெரும் சவால் என எதை கருதுகிறீர்கள்?
எனக்கு மதுரையில் எந்த சவாலும் இருக்காது. நான் சவாலாக நினைப்பது பா.ஜ.,வின் செயல்திட்டத்தை தான். அது இந்தியாவிற்கே ஆன சவாலாக நினைக்கிறேன். உதாரணத்திற்கு தேர்தல் அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு குறுகிய கால அவகாசம் கூட தரவில்லை.
தமிழகத்திற்கு ஐந்து முறை வருகை தந்த பிரதமர் மோடி, அவரது சொந்த மாநிலத்திற்கு எத்தனை முறை சென்றார்? ஏனென்றால் அங்கெல்லாம் மூன்று, நான்காம் கட்டமாக தான் தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட பிரசாரத்தை தமிழகத்தில் அவர் முடித்துவிட்டு தேர்தல் அட்டவணையை பிரதமர் பிரசார அட்டவணையின் மறுபதிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பார்க்கிறோம். இது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் நெருக்கடி தான்.
எழுத்தாளர், அரசியல்வாதி - எதை அதிகம் நேசிக்கிறீர்கள்?
இரண்டு பணிகளும் முற்றிலும் வெவ்வேறானவை. ஒன்றோடு ஒன்றை ஒப்பிட முடியாது. எழுத்தாளர் பணி என்பது 'ஒரு நதியில் படகில் செல்லும் பயணம்'. அமைதியான சூழல் இருக்கும். ஆனால் அரசியல்வாதி பணி என்பது ரயில் தண்டவாளத்தில் செல்லும் பயணம். அதிர்வுகளும், இரைச்சலும் அதிகம் இருக்கும். தேவையை அறிந்து செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க., வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுவதால் போட்டி கடுமையாக இருக்குமா?
தி.மு.க., கூட்டணி என்பது உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்ற அதே கூட்டணி தான். தற்போது கூடுதலாக கமலின் ம.நீ.ம., எங்களுடன் இணைந்துள்ளது, கூடுதல் பலம். ஆனால் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தோல்வியுற்றவை. மேலும் கூட்டணியும் உடைந்து சிதறி காணப்படுகிறது. எனவே 40 தொகுதிளிலும் எங்கள் கூட்டணியின் வெற்றி உறுதி. நாங்கள் எதிர்பார்ப்பது ஓட்டுகள் வித்தியாசத்தை தான்.
வாசகர் கருத்து