Advertisement

'கணேசமூர்த்தியிடம் வைகோ பேசியிருக்கலாம்': திருப்பூர் துரைசாமி காட்டம்

ம.தி.மு.க., - எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, கணேசமூர்த்தி மகன் கபிலனை சந்தித்து, நலம் விசாரித்த ம.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூறியதாவது:

கட்சி வேறு பாதையில் பயணிக்கிறது. ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகளை வைகோ மதிப்பதில்லை. கூட்டணி பேச்சு, தேர்தல் அறிவிப்பு துவங்கி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட ஆலோசனைக்கு கணேசமூர்த்தியை அழைக்கவில்லை.

உயர்நிலை செயல்திட்ட குழு, பொருளாளர் கணேசமூர்த்தி இல்லாமல் நடந்துள்ளது. 'சீட்' கொடுக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. பழகுவதில் இனியவர்; கணேசமூர்த்தி. என்ன தான் சங்கடங்கள் இருந்தாலும், வைகோ ஒரு முறை கூப்பிட்டு பேசி, சமாதானம் செய்திருந்தால், கணேசமூர்த்தி இப்படியொரு முடிவு எடுத்திருக்க மாட்டார். அவர் மீண்டும் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

வைகோவின் நிழலாக...



திருப்பூரை சேர்ந்த ம.தி.மு.க., முன்னாள் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கட்சி துவங்கிய முதல், 30 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக வலம் வந்தார், கணேச மூர்த்தி. ஈரோடு மட்டுமின்றி, மேற்கு மண்டலத்தில் ம.தி.மு.க., என்றால் கணேசமூர்த்தி தான் என்ற நிலை இருந்தது.

வைகோவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக, அப்பெயரை தக்க வைத்து, கட்சிக்காக அரும்பாடுபட்டவர்.மாநாடு என்றாலே கட்சிக்காக தன் சொந்த காசை எடுத்து சகட்டு மேனிக்கு செலவு செய்வார். தற்போது, 'சீட்' கிடைக்காமல் விரக்தியில் இருந்த அவரிடம், நெருக்கமான சிலர், 'மாநில பொறுப்பில் இருப்போர், பல மாவட்ட செயலர் கூட ம.தி.மு.க.,வில் இருந்து வந்து விட்டனர்; நீங்கள் மட்டும் இன்னமும் ஏன் இப்படியே இருக்கீங்க.இந்த தேர்தலில், 'சீட்' கொடுத்திருந்தாலும் பரவாயில்லை. காரணம் தெரிஞ்சும் அமைதியாக இருக்கிறீர்களே,' என அடிக்கடி கேட்டுள்ளனர்.

அதற்கும் கூட, 'அட, விடுங்க பாத்துக்கலாம்' என சலிக்காமல் பதிலளித்து, ஈரோடு தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், பிரசாரம் செய்ய வரப்போவதாக கூறியுள்ளார். ஆனால், இப்படியொரு முடிவை கணேச மூர்த்தி எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

யார் இந்த கணேசமூர்த்தி?

கடந்த, 1978ல் தி.மு.க., மாநில மாணவர் அணி இணை அமைப்பாளர். 1984ல் ஈரோடு மாவட்ட செயலர். 1989ல் மொடக்குறிச்சி தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1993ல் ம.தி.மு.க., வை வைகோ தோற்றுவித்த போது இவரும் தி.மு.க.,வில் இருந்து ம.தி.மு.க., வந்தார். பழனி லோக்சபா தொகுதியில், 1998ல் வெற்றி பெற்றவர். 2009ல் ஈரோட்டில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்