நெல்லை காங்., வேட்பாளர் புரூஸ் மணிப்பூர் அழுத்தம் காரணமா?

கன்னியாகுமரி தொகுதியைக் கேட்ட தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராபர்ட் புரூசுக்கு, சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ பிஷப்புகளின் சிபாரிசில், திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பின், நேற்று திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயரை, அக்கட்சி மேலிடம் அறிவித்தது. அத்தொகுதிக்கு தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனின் மகன் மற்றும் காமராஜ், பவுல்ராஜ் உட்பட 39 பேர் விருப்ப மனு அளித்தனர்.

ஸ்டாலின் அதிருப்தி



அதில், சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் இருப்பதால், அவருக்கு முன்னுரிமை தரவில்லை. ஆனால், கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூசுக்கு, பிஷப்புகளும், டில்லி மேலிட தலைவர்களும் பரிந்துரை செய்ததால், நெல்லையில் அவருக்கு சீட் கிடைத்திருக்கிறது.

பெயரை அறிவிக்க நீண்ட இழுபறி நிலவியதால் கோபமடைந்த முதல்வர் ஸ்டாலின், காங்கிரசின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையோடு வாழ்த்து பெறச் சென்றபோது, அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.

நெல்லையில் பிரசாரத்துக்கு செல்லும் நாள் வரை வேட்பாளர் அறிவிப்பில்லை என்றால், யாரை சொல்லி ஓட்டு கேட்பது என ஸ்டாலின் கேட்ட பின்னரே, டில்லியில் இருந்து நெல்லைக்கு மட்டும் அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கூடவே இடைத்தேர்தல் நடக்கும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளராக தாரகை கல்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி என்ன?



கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் புரூஸ். வழக்கறிஞரான அவருக்கு 62 வயது. தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பதவி வகிக்கும் அவர், கன்னியாகுமரி மாவட்டத் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். திருவனந்தபுரம் லோக்சபா தேர்தல், தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மேலிட பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

சி.எஸ்.ஐ., அறக்கட்டளை சங்கம் மற்றும் பிஷப் கவுன்சில் பொருளாளராகவும், சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார். சி.எஸ்.ஐ., பிஷப் கவுன்சிலில் நிர்வாகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.

அவரது மகன், மணிப்பூர் மாநிலத்தில் 'பாஸ்டர்' ஆக உள்ளார். இவரும், காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவும் நண்பர்கள். சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலுக்கு பிரியங்க் கார்கேவுக்காக ராபர்ட் புரூஸும், அவருடைய மகனும் தேர்தல் பணியாற்றியதோடு, பொருள் உதவியும் செய்ததாக தகவல்.

இதனால், மல்லிகார்ஜுன கார்கேயும், அவருடைய மகனும் புரூஸுக்கு சீட் கொடுக்க வேண்டும் என, ராகுல் மற்றும் சோனியாவிடம் அழுத்தம் கொடுத்த பின்னரே, அவர் வேட்பாளர் ஆக்கப்பட்டதாக டில்லியில் கூறப்படுகிறது.

கூடவே, ராபர்ட் புரூஸ் சி.எஸ்.ஐ., திருச்சபையில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் என்பதால், அவருக்கு 'சீட்' வழங்க வேண்டும் என, தென் மாநிலங்களில் உள்ள பிஷப்புகள், ராகுலுக்கும், சோனியாவுக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

இப்படி பல முனைகளில் இருந்தும் சிபாரிசுகள் வரவே தான், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புரூஸ், திருநெல்வேலி லோக்சபா தொகுதிக்கான காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

வழக்கம்போல நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்காமல், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு எப்படி வாய்ப்பளிக்கலாம் என கேட்டு, லோக்கல் காங்கிரசார் கொந்தளிக்கும் தகவலும் வெளியாகி இருக்கிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்