விடியல் ஆட்சி என்றார்கள்... ஆனால்: அண்ணாமலை காட்டம்
"தி.மு.க.,வில் கோபாலபுர குடும்பம் மட்டும் வளர்ந்தால் போதும் என நினைக்கின்றனர். இவர்களுக்கு மக்களுக்கான வளர்ச்சி என்பது பிடிக்காது" என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து அண்ணாமலை பேசியதாவது:
கம்யூனிஸ்ட் கட்சியினரால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. 10 ஆண்டுகளில் மோடி என்ன செய்தார் எனக் கேட்டால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறார் எனச் சொல்லுங்கள். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் உயருமா?
தமிழகத்தில் இன்று வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் சமூகநீதி பற்றி பேசுகின்றனர். பா.ஜ., அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். நாட்டில் உண்மையான சமூகநீதியைப் பின்பற்றும் கட்சி பா.ஜ., மட்டுமே.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என 4 சாதிகளை மட்டுமே பிரதமர் மோடி நம்புகிறார். மத்திய அரசின் திட்டத்தின்கீழ் திருப்பூரில் 89,490 விவசாயிகள் 6000 ரூபாயை பெற்றுள்ளனர். இதுவரை தவணை முறையில் 30 ஆயிரம் ரூபாய் வரை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது.
திருப்பூர் எம்.எல்.ஏ., தனியார் கல்லுாரியை நடத்துகிறார், ஆனால் பவானிக்கு அரசு கல்லுாரி கிடையாது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டம் மோடியின் கைகளில் உள்ளது, அதற்கான அடித்தளம் பா.ஜ.,விடம் உள்ளது.
2019ல் 295 வாக்குறுதிகளை பா.ஜ., வழங்கியது. அதில் இடம்பெற்றிருந்த அனைத்து வாக்குறுதிகளையும் பா.ஜ., நிறைவேற்றி உள்ளது. தி.மு.க.,வில் கோபாலபுர குடும்பம் மட்டும் வளர்ந்தால் போதும் என நினைக்கின்றனர். இவர்களுக்கு மக்களுக்கான வளர்ச்சி என்பது பிடிக்காது.
நமக்கு வளர்ச்சி வேண்டுமே தவிர வீக்கம் தேவையில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த 33 மாதத்தில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பது இல்லை. இதனால் தமிழகத்தில் தொழில்துறை முடங்கியுள்ளது.
தமிழகத்தை போல மின்கட்டணத்தை நாட்டில் வேறு யாரும் உயர்த்தவில்லை. சிறுகுறு தொழிலாளர்கள் தப்பிக்க முடியாத அளவிற்கு விலையை ஏற்றி உள்ளனர். விடியல் தருகிறேன் எனக் கூறிவிட்டு சுடுகாட்டிற்கு தி.மு.க., பாதை அமைத்து தந்துள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. வேட்டி வாங்குவதில் முறைகேடு, ஒரு குண்டூசியை கூட விடாமல் இங்குள்ள அமைச்சர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலைகளில் கூட ஊழல் நடந்திருப்பதை ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு யார் தேவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
கடந்த 33 மாதகால தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கிராமப்புற பகுதிகள் வரை போதைப் பொருள்கள் புழக்கம் பரவியிருக்கிறது. போதைப் பொருள் விற்பவர்கள், தி.மு.க.,வின் அத்தனை தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.
இதனை மடைமாற்ற, மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி கொடுக்கவில்லை என்று பொய் கூறுகின்றனர். சமையல் எரிவாயு மானியம், பிரதமரின் வீடு, குழாயில் குடிநீர், முத்ரா கடனுதவி, விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 கௌரவ நிதி என்று, மக்களுக்கு நேரடியாக பிரதமர் வழங்கிக் கொண்டிருக்கிறார். கோபாலபுரத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்பது மக்களுக்குத் தெரியாதா?
எதிர்க்கட்சிக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஊழலற்ற நல்லாட்சியைக் கொடுத்து பிரதமர் தன்னை நிரூபித்திருக்கிறார்.
உதயநிதி பிரதமரை 29 பைசா என பெயர் வைக்கிறார். இதற்கு பா.ஜ., தொண்டர்கள் 'கஞ்சா உதயநிதி' என பேர் வைக்கலாம் என்கின்றனர். கஞ்சா புழக்கத்தை கிராமம் வரை கொண்டு வந்தது தான் தி.மு.க.,வின் சாதனை.
தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கியிருக்கும் தி.மு.க.,வுக்கு வாக்களிப்பது என்பது எந்தப் பலனையும் தரப்போவதில்லை. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத தி.மு.க, நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் எப்படி உறுதி செய்யும்?
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து