பறக்கும் படையை மிரட்டினாரா திருப்பூர் பா.ஜ., வேட்பாளர்: என்ன நடந்தது?
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியதாக திருப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், 'வாக்காளர்களுக்கு கொண்டு செல்வதற்காக பணம், பரிசுப்பொருள்கள் கடத்தப்படுகிறதா?' என்பதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே போலீசாருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்துள்ளார். அவரது காரை ஓரமாக நிறுத்துமாக தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் கூறியுள்ளனர்.
அதன்படியே காரை நிறுத்திய முருகானந்தம் அதிகாரிகளை நோக்கி, "உங்க பேர் என்ன... என்னவாக இருக்கீங்க?" எனக் கேட்டுள்ளார். அதற்கு அதிகாரியும் பதில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிலால் கொதிப்படைந்த முருகானந்தம், "இப்படித் தான் மிரட்ட சொன்னாங்களா... முதல்ல மரியாதை பேசுங்க. இல்லைன்னா வாழ்க்கை பூரா கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவியது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டார். அந்தப் பதிவில் கூறியிருந்ததாவது:
எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதனை செய்கின்றனர். அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை.
அந்தக் கடமையில் இருந்து நான் தவறுவதில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரியல்ல.
அதிகார போதையில் பா.ஜ.,வினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்?
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரும் தனது எக்ஸ் பக்கத்தில், "நிலைக்கண்காணிப்பு அலுவலர் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகேசன் அளித்த புகாரின்பேரில் பா.ஜ., வேட்பாளர். ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் முருகானந்தம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து