Advertisement

கமல் மூளையை பரிசோதிக்க வேண்டும்: அண்ணாமலை காட்டம்

"லோக்சபா தேர்தலில் வேலை பார்க்க கரூர் கம்பெனி வந்துவிட்டது. சிறையில் இருந்து செந்தில் பாலாஜி தினமும் செல்போனில் பேசுகிறார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுக்கிறார்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். ஒரு சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. 'எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை' என அவர் கூறிய பிறகு இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தீர விசாரித்து என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. இதை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். திருடனைப் பிடிப்பதற்காக ஒரு வீட்டுக்கு போலீஸ் போகும்போது, வீட்டில் இருந்து வெளியே வரும் திருடன், தெருவில் நின்று கொண்டு 'திருடன்... திருடன்' எனக் கத்துவது போல தி.மு.க.,வின் செயல்பாடு இருக்கிறது.

அவர்கள் செய்யும் தவறுகளை தேர்தல் கமிஷன் பார்க்கக் கூடாது என்பதற்காக 'திருடன்.. திருடன்' என ஆர்.எஸ்.பாரதி கத்திக் கொண்டிருக்கிறார்.

85 வயதுக்கு மேல் ஓட்டுப் போடுகிறவர்களுக்கு தங்கத் தோடு, 2,000 ரூபாய் பணம் என கொடுக்கின்றனர். அடுத்த 10 நாள்களில் தி.மு.க., கொடுக்கக் கூடிய இலவசங்களை பார்க்கத் தானே போகிறோம்.

பா.ஜ.,வின் உத்தரவாதம் என்பது ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள தாய் கிராமத்திலும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். அங்கு கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் அடிப்படை உபகரணங்கள் இருக்கும். கோவை மாநகரத்துக்குள் மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

மக்கள் இதை ஆதரிக்க துவங்கியவுடன் சர்வதேச ஸ்டேடியம் கட்டுவதாக ஸ்டாலின் கூறுகிறார். 4000 கோடியில் ஸ்டேடியம் கட்டுவதற்குப் பதிலாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்தலாம். கவர்ச்சிகரமான திட்டங்களை சொன்னால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என நினைக்கிறார்.

சட்டசபை தேர்தலில் கொடுத்த 511 வாக்குறுதிகளில் 20ஐ கூட தி.மு.க., நிறைவேற்றவில்லை. இது அவரின் 512வது வாக்குறுதி. என்னை அ.தி.மு.க.,வினர் விமர்சிப்பது குறித்து ஒரே பதில் தான். ஜூன் 4 வரை பொறுத்திருப்போம். ஒரு விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும். அதைப் போல அ.தி.மு.க.,வின் கருத்தைப் பார்க்கிறேன்.

இந்தியாவின் தலைநகராக நாக்பூர் மாறிவிடும் என்று கமல் எந்த அடிப்படையில் சொல்கிறார் எனப் பார்க்க வேண்டும். கமல் உள்பட யார் சொன்னாலும் அவர்களின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். சுயநினைவுடன் தான் இருக்கிறாரா என கமலுக்கு மருத்துவ பரிசோதனையை செய்ய வேண்டும்.

இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இருக்கிறது என்பதால் இதைக் கூறுகிறார். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தன் கட்சியை அடமானம் வைத்துவிட்டுப் பேசுகிறாரா எனப் பார்க்க வேண்டும்.

பிரதமர் வருவதால் தி.மு.க.,வுக்கு ஏன் இவ்வளவு பயம். கையில் கிளவுஸ் போட்டுக் கொண்டு ஹைட்ராலிக் லிப்ட்டில் ஏறி பேசும் முதல்வர், 33 மாதங்களில் எத்தனை கிராமங்களில் தங்கி இருக்கிறார் என வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்பது 2020ல் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட ஒன்று. பெங்களூருவில் இஸ்கான் அமைப்பினர் காலை உணவை கொடுக்கின்றனர். தமிழக அரசிடமும் இதைச் செய்வதற்கு இஸ்கான் அனுமதி கேட்டது.

ஏதோ காலை உணவுத் திட்டம் என்பதையே ஸ்டாலின் கண்டு பிடித்ததுபோல பேசுகிறார். தி.மு.க.,வை பொறுத்தவரையில் சூரியன் தோன்றியது 1967, கடல் தோன்றியது 1967. மனிதன் நாகரிகமாக வாழத் தொடங்கியது 1967ல் என நினைத்துப் பேசுகின்றனர்.

நான் சிறுபான்மை, பெரும்பான்மை எனப் பிரித்து பேசுவதில்லை. 3 ஆண்டுளாக இப்தார் நோன்பில் பங்கேற்கிறேன். அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்கிறேன். 2022ல் கோவையில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பை கண்டித்து ஜமாத் அறிக்கை கொடுத்தது. வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதை நம்பக் கூடியவனாக இருக்கிறேன்.

லோக்சபா தேர்தலில் வேலை பார்க்க கரூர் கம்பெனி வந்துவிட்டது. சிறையில் இருந்து செந்தில் பாலாஜி தினமும் செல்போனில் பேசுகிறார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுக்கிறார்.

சிறையில் உள்ளவர் சொல்வதை இங்குள்ள அமைச்சர் நடைமுறைப்படுத்த வேண்டும். கோவையில் தங்கச் சுரங்கத்தையே தி.மு.க., கொட்டிக் கொடுத்தாலும் இந்த முறை பா.ஜ வெற்றி பெறுவது உறுதி.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து தேரை இழுக்கிறோம். இந்தமுறை 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். நான் ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன். பாசிட்டிவ் அரசியலை முன்வைத்தால் போதும் என்பதை நம்புகிறேன்.

தமிழகத்தில் பா.ஜ.,வின் அதிகாரபூர்வ விளம்பரத்துக்கு கூட தேர்தல் கமிஷன் அனுமதி தரவில்லை. பிரதமரின் வாகனப் பேரணிக்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கினோம்.

ஆனால், தி.மு.க.,வுக்கு எதாவது தடை இருக்கிறதா. எங்களின் 6, 7 நிகழ்ச்சிகளுக்கு அனுமதியே கிடைக்கவில்லை. பதறிய காரியம் சிதறும் என்பார்கள். தி.மு.க., பதற்றத்தில் இருக்கிறது. அவர்களின் காரியம் எல்லாம் சிதறத் தான் போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்