கட்சியை நடத்த பிச்சையா எடுக்க முடியும்: ப.சிதம்பரம் காட்டம்
"இந்தியாவில் உள்ள மாநில அரசுகளை பாளையக்காரர்களாக மாற்றுவது தான் பா.ஜ., நம்பும் ஒரே அரசாக இருக்கிறது. இது தான் ஆர்.எஸ்.எஸ்., அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம்" என, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்து சென்னையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு குடை, ஒரு அரசன்
தேர்தல் அறிக்கை கதாநாயகனா... கதாநாயகியா என நான் திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால், தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தேர்தல் அறிக்கையை சுற்றித் தான் எங்கள் பிரசாரம் இருக்கும். இதற்கு எதிரான கருத்துகளை வரவேற்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் சமஷ்டி அரசு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ள பல கருத்துகளில் பா.ஜ.,வுக்கு உடன்பாடு இருக்காது. சமஷ்டி அரசை அமைப்பதில் பா.ஜ.,வுக்கு அக்கறை இருந்தால் நாங்கள் கூறியுள்ள 12 கருத்துகளில் அவர்கள் எதில் உடன்பாடுவார்கள் எனக் கூறட்டும்.
அவர்கள் சமஷ்டி அரசு முறையை எதிர்ப்பவர்களின் நிலைப்பாடு, ஒரு குடை, ஒரு அரசன் என்பது தான். பழங்காலத்தில் சக்கரவர்த்தி என்றொரு இருப்பார். பேரரசருக்கு கீழே சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் இருப்பார்கள்.
இந்தியாவில் உள்ள மாநில அரசுகளை பாளையக்காரர்களாக மாற்றுவது தான் அவர்கள் நம்பும் அரசு. இது தான் ஆர்.எஸ்.எஸ்., அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஒரு நாடு ஒரு தேர்தல் ஒரு அரசு தான் இருக்க வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஜமீன்தார், மிராசுதாரர் ஆகியோரை வரிவசூல் செய்ய நியமித்ததைப் போல மாநில அரசுகளை மாற்ற நினைக்கிறார்கள். நீட் தேர்வை பொறுத்தவரையில், ஒரு மாநில அரசு தன்னுடைய மாநிலத்தில் வாழ்கின்ற மாணவர்களுக்காக அரசு செலவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டுகிறது.
நீட் தேர்வு அவசியமா?
அதில், எந்த மாணவரை அனுமதிப்பது என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. நீட் வருவதற்கு முன்பு நேர்காணலை வைத்து மாணவர் சேர்க்கையை நடத்தினார்கள். எத்தனையோ புகழ்பெற்ற மருத்துவர்கள் நீட் தேர்வை எழுதியா வந்தார்கள்?
நீட் என்பது தேவையல்ல. அந்தந்த மாநிலங்களில் நீட் தேர்வை ஏற்பவர்கள் ஏற்கட்டும். தமிழக அரசு வேண்டாம் என்கிறது. அ.தி.முக.,வும் அதையே சொல்கிறது. காங்கிரசும் சொல்கிறது. தமிழகத்தில் நீட் தேவையில்லை என்று அரசு முடிவெடுத்தால் அது தேவையில்லை என்று நாங்கள் சொல்கிறோம்.
பா.ஜ., தூக்கிப் பிடிக்கும் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், 100 நாள் வேலைத்திட்டம் என அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்டது.
எங்கள் தேர்தல் அறிக்கைக்கு நேர் எதிரான ஒரு தேர்தல் அறிக்கையை அவர்கள் தயாரிக்கட்டும். சமஸ்டி முறை குறித்து அவர்களின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
பா.ஜ., பதில் என்ன?
அரசியல் சாசனத்தில் காங்கிரஸ் ஆழமாக நம்பிக்கை கொண்டுள்ளது. அது மட்டுமே எங்களின் வழிகாட்டியாக இருக்கும் என தேர்தல் அறிக்கையின் முகப்பில் கூறியிருக்கிறோம். நாங்கள் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்ய மாட்டோம் என பா.ஜ., கூறட்டும் என எதிர்பார்க்கிறோம். அரசியல் சாசனத்தில் நம்பிக்கை உள்ளதாக அவர்கள் கூற மாட்டார்கள்.
10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் அவர்கள் எந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர். 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்களா. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளில் தலா 15 லட்சம் போட்டார்களா..
எய்ம்ஸ் மருத்துவவமனையை கட்டினார்களா. வாக்குறுதிகளை பா.ஜ., மீறியது, மறந்தது ஆகியவற்றை பட்டியல் போட்டாலே மிக நீளமானதாக அவை இருக்கும். காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை எங்களால் சொல்ல முடியும். இதற்கு ஈடான ஒரு பட்டியலை மோடியால் சொல்ல முடியுமா?
கல்விக்கடன் ரத்து
கல்விக்கடனை ரத்து செய்வோம் எனக் கூறுவதற்கு காரணம் உள்ளது. கல்விக்கடனை பெறும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் கடன் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தாண்டவமாடுகிறது.
பட்டாதாரிகள் மத்தியில் 42 சதவீதம் பேருக்கு வேலையில்லை. ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்ற மாணவர்களில் 30 சதவீதம் பேருக்கு வேலையில்லை என சமீபத்திய அறிக்கை ஒன்று வந்தது. இப்படியொரு சூழலில் கல்விக்கடனை செலுத்த வேண்டும் எனக் கூறினால், அந்த மாணவரால் எப்படி கட்ட முடியும். கடனைக் கட்டாததால் அண்டா, குண்டாவை எல்லாம் ஜப்தி செய்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தவணை தவறிய அசல், வட்டியை ரத்து செய்வோம் என்கிறோம்.
நதிநீர் எல்லாம் தாவா பிரச்னை. இது 2,3 மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னை. அதற்கெல்லாம் தீர்ப்பாயத்தில் தான் தீர்வு காண முடியும். தேர்தல் அறிக்கையில் எப்படி தீர்வு காண முடியும்?
பிச்சையா எடுக்க முடியும்?
தேர்தல் பத்திரம் என்பது மெகா ஊழல். அதை விசாரிப்போம் எனக் கூறியிருக்கிறோம். யார் கொடுத்தார்கள்.. என்ன காரணத்துக்காக வாங்கினார்கள் என்பது வெளிப்படையாக இருக்கிறது. 33 ஷெல் நிறுவனங்கள், 576 கோடியை தந்துள்ளனர். அது ஊழல் இல்லையா?
ஒருவர் மேல் ஈ.டி ரெய்டு நடக்கிறது. அவர் தேர்தல் பத்திரம் வாங்கிக் கொடுத்த உடன் ஜாமீன் கிடைக்கிறது. அவரின் வழக்கை மூடி மறைக்கின்றனர். இது சட்டப்பூர்வமான லஞ்சம்.
எல்லா கட்சியும் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வாங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் தான் வாங்கியிருக்கிறது. நாங்கள் ஒரு கட்சியை நடத்த வேண்டும் அல்லவா. கையில் ஓடு எடுத்துக் கொண்டு பிச்சையா எடுக்க முடியும். இந்த வழி தவறு தான். இது ஒன்று தான் வழி என்றால் வேறு என்ன செய்ய முடியும்?
ஜி.எஸ்.டியை ரத்து செய்து புதிய சட்டத்தை கொண்டு வருவோம். அதாவது, ஒழுங்கான ஜி.எஸ்.டி.,யை கொண்டு வருவோம் என காங்கிரஸ் கூறுவதை வணிகர்கள் வரவேற்கிறார்கள்.
பிரதமர் வேட்பாளர் யார்?
பிரதமர் வேட்பாளரைப் பற்றி பலமுறை சொல்லிவிட்டோம். கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து தேர்தல் முடிந்த பிறகு அறிவிப்பார்கள். அப்படித்தான் வி.பி.சிங், சந்திரசேகர், தேவேகவுடா, குஜ்ரால் போன்றோர் அறிவிக்கப்பட்டார்கள்.
ஒரு தனிக்கட்சி வேட்பாளரை அறிவிக்கலாம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒரே நாளில் பிரதமரை அறிவிப்போம். காங்கிரசின் விருப்பம் தான் பிற கட்சிகளின் விருப்பமும்.
தேர்தலில் நிராயுதபாணியாக மோடியும் பா.ஜ.,வும் இருக்கிறது. அவர்கள் தேடித்தேடி தோண்டித் தோண்டி கச்சத்தீவை எடுத்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்த பிரச்னை. அந்த ஆயுதம் செல்லாது. படுதோல்வியில் தான் முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து