தந்தை - மகன் இடையே மனஸ்தாபம்: வைகோ பிரசாரத்தை தவிர்க்கும் துரை
திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ, தனது தந்தை பிரசாரத்தை தவிர்ப்பதும், கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிகழ்விலும் பங்கேற்காததற்கு, தந்தை- மகன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதே காரணம் என்கின்றனர் கட்சியினர்.
திருச்சியில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., சார்பில் வைகோ மகன், துரைவைகோ போட்டியிடுகிறார்.
பிரசாரம் துவங்கும் முன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் நேருவின் ஒத்துழைப்பு இல்லை என்பதை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அழுதபடியே புகார் கூறினார். இது தி.மு.க.,வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் திருச்சி ம.தி.மு.க., வில் உள்ள சீனியர் கட்சியினரை துரை வைகோ மதிப்பதில்லை என்று புகாரும்எழுந்தது.
இதுதொடர்பாக வைகோ தனது மகன் துரைக்கு அறிவுரை கூறியதால், அவர் வீம்புக்கு எதையும் கேட்காமல் மன வருத்தமடைந்தார்.
தந்தை மீதான தன் மன வருத்தத்தை, துரை வைகோ, தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் அவரது பிரசாரத்தில் பங்கேற்காமல் வெளிப்படுத்தினார்.
நேற்று முன்தினம் திருவெறும்பூரில் நடந்த வைகோ பிரசாரத்திலும், துரை பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும், தனக்காக பிரசாரம் செய்ய வரும் வைகோவை, அவரது மகன் துரை தவிர்ப்பது ம.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மிரட்டும் துரை வைகோ
தன் முகாமில் நடக்கும் விஷயங்களை, ம.தி.மு.க.,வினர் வெளியே சொல்வதாக நினைக்கும் துரை வைகோ, 'கட்சி விஷயங்களை வெளியே சொன்னால், கட்சியினரின் மொபைல் எண்களின் அழைப்பு விபரங்களை எடுத்து பார்த்து விடுவேன்' என்று, மிரட்டலுடன், எச்சரிக்கை விடுத்ததாக கட்சியினர் புலம்புகின்றனர். தந்தையை விட மகன் இவ்வளவு கோபக்காரராக இருந்தால், எதிர்காலம் என்னாவது என்று கட்சியினர் பேசி வருகின்றனர்.
வாசகர் கருத்து