அமைச்சர் பேசியும் கூல் ஆகாத திருப்பூர் தொழிலதிபர்கள்
லோக்சபா தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், திடீரென கோவையில் தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார்.
கோவையில் இருந்து மதுரை சென்றபோது, வழியில், திருப்பூர் பனியன் தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்திக்க, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஹோட்டலில், இந்த ரகசிய சந்திப்பு நடந்துள்ளது.
சில தொழில் அமைப்புகள், சந்திப்பை புறக்கணித்து விட்டன. முக்கியமான தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மட்டும், அமைச்சரை சந்தித்துள்ளனர். கடந்த, 2017 முதல் ஜி.எஸ்.டி., வரி நடைமுறையில் உள்ளது. தொழில்துறையினரை சந்தித்த அமைச்சர், ஜி.எஸ்.டி., எப்படியெல்லாம் செயல்படுத்தப்படுகிறது, மாநில அளவிலான பிரதிநிதிகள் பங்களிப்பு என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
'ஜி.எஸ்.டி.,யில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. எதிர்பார்த்த வருவாய் கிடைப்பதில்லை. பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போடப்படுகிறது, அதனால் பல தடைகள்' என்றெல்லாம் விவரித்துள்ளார்.
பொறுமையாகக் கேட்ட தொழில்துறையினர், 'திருப்பூர் பனியன் தொழில் பாதிப்புக்கு முக்கிய காரணம், மின்கட்டண உயர்வு. குறிப்பாக, 'பீக் ஹவர்' மின் கட்டணமும், நிலைக் கட்டணத்தின், 420 சதவீத உயர்வும், புரட்டிப்போட்டு விட்டது. எட்டு கட்டங்களாக போராடியும் தீர்வு இல்லை. இனியாவது, தமிழக முதல்வரிடம் பேசி, மின் கட்டணத்தைக் குறைக்க பரிந்துரைக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வங்கதேச ஆடை மற்றும் துணி இறக்குமதி கட்டுப்பாடு, 'ஏ - டப்' திட்டம், பருத்தி ஆடைக்கு எதிரான பாலியஸ்டர் துணி இறக்குமதியை கட்டுப்படுத்துவது குறித்தும் தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து