விரக்தியில் பேசுகிறார் சீமான்: அண்ணாமலை காட்டம்
"தேர்தல் கமிஷன் வெளிப்படைதன்மையுடன் செயல்படுகிறது. இதில், யாருக்கும் எந்தவித அநீதியும் நடக்கவில்லை" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கடலூரில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து, அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் கமிஷனுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றித்தான் யாருக்கும் வழங்க முடியும். தொடர்ச்சியாக ஒரு கட்சி வாக்குவங்கியை தக்க வைத்திருந்தால், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை வைத்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் அதே சின்னம் கிடைக்கும்.
தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் வரவில்லையென்றால் மீண்டும் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். யார் முதலில் விண்ணப்பித்தார்களோ அவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்கும்.
த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்திருக்கிறது. அப்படியானால், சைக்கிள் சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காமல் இருந்திருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சியினர் டெல்லி ஐகோர்ட்டுக்கு போனார்கள். அங்கு நீதிமன்றமே தேர்தல் கமிஷனின் முடிவை ஏற்று தீர்ப்பாக கொடுத்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு இது தான் நடைமுறையாக உள்ளது.
தேர்தல் கமிஷன் வெளிப்படைதன்மையுடன் செயல்படுகிறது. இதில், யாருக்கும் எந்தவித அநீதியும் நடக்கவில்லை. சீமான் ஒரு படி மேலே சென்று பேசுகிறார். விரக்தியில் பேசக் கூடாது. அதை மக்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
என்னுடைய வேட்புமனுவில் தவறான தகவல்களை கொடுத்ததாக சொல்கின்றனர். என் சொத்து மதிப்பு 117 சதவீதம் உயர்ந்துள்ளதாக காட்டினால் அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன். 11 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தபோது வாங்கிய சொத்துகள் அவை. வாட்ஸாப் தகவல்களை வைத்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டும்.
'இந்த தேர்தலில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்க மாட்டேன்' எனக் கூறியுள்ளேன். இதை மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் கூறுவார்களா. நேர்மையான அரசியலை முன்னெடுப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து