மோடிக்கு நடிக்க வேண்டிய அவசியமில்லை: தமிழிசை காட்டம்
"அடிப்படையில் பலமான வளச்சிக்கான திட்டங்களை மோடி கொடுக்கிறார். அவர்கள் கொடுப்பது அடிப்படையில் பலவீனமான திட்டங்கள். அவை ஏமாற்றும் திட்டங்கள்" என, தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தமிழிசை விமர்சித்தார். தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது:
அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதற்கான முழு உரிமையும் பா.ஜ.,வுக்கு உள்ளது. தி.மு.க., கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் அம்பேத்கருக்கு பாரத ரத்னாவை கொடுக்க விரும்பவில்லை.
ஆனால், 'எனது புனித நூல் என்றால் அது அரசியல் சட்ட நூல் தான்' என பார்லிமென்ட்டில் மோடி சொன்னார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் வகையில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
பிரதமருக்கு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வயதிலும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி இருந்திருந்தால் மோடியை பாராட்டியிருப்பார். இவர் தான் திசை தெரியாமல் பேசி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் நீட்சியாக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தை 20 லட்சமாக உயர்த்துவோம் என பிரதமர் கூறியுள்ளார். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை சம்பாதிக்கும் அளவுக்கு மகளிருக்கு வழிவகை செய்வோம். 'பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றுவோம்' என மோடி கூறியுள்ளார்.
நாங்கள் நல்ல பத்திரத்தை வெளியிட்டுள்ளோம். இலவசமாக மின்சாரத்தைக் கொடுப்போம் என்கிறார். விவசாயம், வியாபாரம் ஆகியவற்றின் வளர்ச்சி என்பது மின்சாரத்தில் உள்ளது. சில யூனிட் மின்சாரம் கொடுத்துவிட்டு இலவச மின்சாரம் என்கிறார்கள்.
அடிப்படையில் பலமான வளச்சிக்கான திட்டங்களை மோடி கொடுக்கிறார். அவர்கள் கொடுப்பது அடிப்படையில் பலவீனமான திட்டங்கள். அவை ஏமாற்றும் திட்டங்கள். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படாது.
தேர்தலுக்கு ஆகும் செலவு என்பது பணம் மற்றும் கால விரயம். நல்ல திட்டத்தைக் கொண்டு வர நினைக்கும் போது தேர்தல் வந்தால் அதனை அறிவிக்க முடியாது. தேர்தல் என்பது மக்களுக்காகத் தான். அரசியலுக்காக அல்ல.
இவர்கள் தேர்தலுக்கு தேர்தல் ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என நினைக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் பொய் சொல்வதாக தி.மு.க.,வினர் தான் பொய் சொல்கின்றனர். 'முதல் கையெழுத்து நீட் ரத்துக்கு போடுவேன்' என்று சொன்னது உண்மையா. 'அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை' எனக் கூறிவிட்டு தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் எனக் கூறியது பொய்யா... உண்மையா?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து